Wednesday, November 30, 2011

நீங்களும் முதல்வராகலாம்

டிஸ்கி :நக்கீரன் பதிப்பகத்தின் ரா.கி.ர எழுதிய 'நீங்களும் முதல்வராகலாம்' புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் இது. பதிவுக்கும் தற்போதைய புது ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் அல்ல.
எல்லாரும் எல்லாருக்கும் பரிந்துரைக்கும் நூல்கள் என சில எப்போதும் உண்டு. திருக்குறளும் , சரித்திர  நாவலுக்கு பொன்னியின் செல்வனையும்  சாண்டில்யனையும் , காந்தியின் சத்திய சோதனையும் , மதனின் வந்தார்கள் வென்றார்களையும் எப்படி கண்ணை மூடிக்கொண்டு சிபாரிசு செய்கிறோமோ அதே  போல ரா.கி.ர எழுதிய 'நீங்களும் முதல்வராகலாம்' நூலையும் தாராளமாக பரிந்துரைக்கலாம்.


ரா.கி.ர பல மைல்கல்களைத் தொட்ட எழுத்தாளர். மொழிபெயர்ப்பு நூல் எழுதும்போது மிக கவனமாக  , அதன் உண்மையான சுவை குறையாமல் ,அதே சமயம் எழுதப்படும் மொழியில் படிப்பவர்க்கு அன்னியமாக தோன்றாமல் எழுதும் கலை அவருக்கு விரல் நுனியில். அதை இந்த நூலிலும் கையாண்டு நூலின் தரத்தை  உயர்த்தியுள்ளார். 
தலைப்பைப்   பார்த்ததும் 'நமக்கு எதுக்குடா இந்த ஆசை?' என்று ஒதுங்கி விட வேண்டாம்.  தலைப்புதான் ஏடாகூடமாக ; மற்றபடி உள்ளிருக்கும் உத்திகள் எல்லா நாளும் எல்லா இடத்திலும் நாம் முன்னணியில் வர சொல்லப்பட்டவை.
சரி இது போல பல தன்னம்பிக்கை நூல்கள் வந்து விட்டனவே ; இதில் என்ன சிறப்பு என்று கேட்கறீர்களா ? சொல்கிறேன் . 
அறிவுரை சொல்வதுப் போல எளிதானது உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை. அறிவுரையைக் கேட்பது போல கடினமானது மூவலகிலும் வேறு இல்லை. இதை யாராவது பெரியவர் நேருக்கு நேர் உட்கார வைத்து சொன்னால் , மரியாதைக்கு வேறு வழியில்லாமல் கேட்டுக் கொண்டிருப்போம். காசு கொடுத்து அந்த தொல்லையை யார் வாங்குவார்கள்.
ஏறக்குறைய எல்லா தன்னம்பிக்கை நூல்களும் மொந்தையாக, கட்டுகட்டாக , பக்கம் பக்கமாக , பாயிண்ட் பாய்ண்டாக அறிவுரையை சொல்லி , நமக்கு தனம்பிக்கை வருவதற்கு பதில் , 'இதில் இவ்வளவு இருக்கா ?' என்று ஒரு அயர்ச்சி தோன்றி விடும் சாத்தியம் உண்டு
பண்ணிவிடுகின்றன. அதிலும் தலைப்புக்கு   அடியில் 'நிரூபிக்கப்பட்ட முறைகள்' என்று  கூடுதல்  தகவல் வேறு.  
விதிவிலக்கு - உதயமூர்த்தியின் எண்ணங்கள் மற்றும் இன்னபிற.இந்த நூலும் அது போல விதிவிலக்கில் சேர்த்தியே.
இந்த நூல் , ஆங்கிலத்தில் வெளிவந்த ( பேர் ஞாபகத்தில் இல்லை ) இன்னொரு நூலின் மொழிபெயர்ப்பே. ஆனால் வெறும் மொழிபெயர்ப்பாக அல்லாமல் படிக்க ருசியான அதே சமயம் புத்திக்கு ஆரோகியமான உணவாக அமைந்திருக்கிறது. அதிலும்  ரா.கி.ர-வின் எழுத்து நடை சேர்ந்து விட , நூலுக்கு  புதிய சுவை கூடுகிறது.
எண்பத்தி எட்டு உத்திகள் . அவையே ஒவ்வொரு பகுதிக்கும் தலைப்புகள் .
ஒவ்வொரு தலைப்புக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட , நடந்த சரித்திர நிகழ்வுகளின் எடுத்துக்காட்டுகள் . அந்த பகுதி முடியும்போது ,அடுத்த தலைப்புக்கான அவசியத்தை கோடிட்டு காட்டிய முறை என்று புத்தகம் வெகு சுலபத்தில் நம்மை  ஈர்த்து விடும்.
சரி , முக்கியமான விஷயத்துக்கு வருவோம். இந்த நூல் யாருக்கு பயன்படும்? அரசியல்வாதிகள் , வக்கீல்கள் , நிறுவனத்தலைவர்கள் ஆகியோருக்கு மட்டுமே..என்று நினைத்தால் புத்தகத்தை படிக்க தொடங்கும்போதே அந்த எண்ணம் மாறி விடும். அட .. இது நமக்கான புத்தகம் என்ற நினைப்பை இது கொடுக்கும்..
காரணம்... ஆட்சி அமைப்பதும் , கட்சி தொடங்கி மக்களை ஈர்க்க மட்டுமே என அரசியல் தன்  வட்டத்தை ஒருபோதும் சுருக்கியதில்லை.
நன்றாக ஓடிக்கொண்டிருந்த பெட்டிக்கடைக்கு பக்கத்தில் , கொஞ்சம் புதிதாக எதோ ஒரு சலுகையை கொடுத்து ஒரே மாதத்தில் பழைய பெட்டிக்கடையை மூட வைக்கும் புது பெட்டிகடைக்காரரிடம்  இருந்தே ஆரம்பிக்கிறது அரசியல்.
மென்பொருள் நிறுவனங்களில் தேநீர் நேரத்தில் மேலாளரைப் பற்றி மணிக்கணக்காக   பேசும் ஊழியன் , மீட்டிங் நேரத்தில் அவர் பக்கத்தில் , அவர் என்ன சொன்னாலும் ஆமாம் போடுவதில் இருக்கிறது அரசியல்.
பக்கத்து வீடு காலியானதும் , தனக்கு வேண்டியவர் வரும் வரைக்கும் , வீடு தேடி வருபவரை பல பொய்க்காரணம் சொல்லி வேறு வீடு பார்க்க வைக்கும் சாதாரண இல்லத்தரசியிடம்  இருக்கிறது அரசியல்.
ஆக அரசியல் வைரஸ் போல. நமக்கு அது வேண்டாம் என்று ஒதுங்கினாலும் அதற்கு நாம் தேவை. அப்போது நம்மை சுற்றி நடக்கும் அரசியலை சமாளிக்க நமக்கு அதைப் பற்றி பாடங்கள் அவசியம். அதை நன்றாக போதிக்கிறது இந்நூல்.
இல்லை... நான் நல்லவன் என்று பம்மாத்து செய்யும் ஆசாமியா நீங்கள் ? சரி நீங்கள் அரசியல் செய்ய வேண்டாம்..உங்களை வலையில் சிக்க வைக்கும் அதிலிருந்து நீங்கள் தற்காத்து கொள்ளவாவது அதைப் பற்றிய அறிவு வேண்டும்.இதுவும்  எய்ட்ஸ் விழிப்புணர்வு போலதான் சார்.
 சில மிடில் கிளாஸ் மனசாட்சி உள்ளவர்க்கு இந்த நூல் 'இப்படியெல்லாம் கூட ஏமாத்தலாமா? நம்பிக்கை துரோகம் செய்யலாமா ? வேண்டாமா ?' என்ற கேள்வி  மனதில் நிழலாடும். நாம் யார் குடியையும் கெடுக்க போவதில்லை.கூடாது.ஆனால் களவும் கற்று மற என்பது போல் அரசியல் நுணுக்கங்களையும் கற்று வைப்பது நல்லது.
சில பிரச்சனைகளுக்கு மாத்திரை இல்லாத நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தால்  உதவும்.'அய்யயோ .. நான் மாட்டேன்' என்பவர்கள் , சத்தியசோதனையை மீண்டும் படித்து ,
ஏற்பட்ட குற்ற உணர்வை போக்கிக்கொள்ளலாம்.
இந்த புத்தகம் வாங்கிய இரண்டு வருடத்தில் ஆறு முறை படித்து விட்டேன்.ஒவ்வொரு முறையும் புதிதாக நிறைய விஷயங்களை உணர முடிகிறது.
புத்தகத்தை வெளியிட்ட நக்கீரனுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். ரா.கி.ரவுக்கு வணக்கங்கள்.
நீங்களும் முதல்வராகலாம்
ரா.கி.ரங்கராஜன்
நக்கீரன் பதிப்பகம்
விலை ரூ. 225

நீங்களும் முதல்வராகலாம்- பெரியவர்களுக்கான 'பஞ்ச தந்திரம்'

2 comments:

kowsy said...

நீங்கள் தந்த நூலுக்கான விமர்சனம் நூலைப் படிக்க வேண்டும் என்னும் எண்ணத்தைக் கொண்டுவருகின்றது. தன்னம்பிக்கை தரும் நூல்கள் பல வெளிவந்தபோதும் நீங்கள் முதல்வராகலாம் என்னும் நூல் எப்படிப் பட்டது என்பதை நீங்கள் அழகாக விளக்கியுள்ளீர்கள்

PUTHIYATHENRAL said...

நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.