இந்த சூரிய பூஜை மனிதர்களாகிய நாம் சூரியனுக்கு செய்யும் பூஜை அல்ல. சூரிய பகவான் சிவபெருமானுக்கு செய்யும் பூஜை. இது எப்படி சாத்திய என்று கேட்கின்றீர்களா? இப்பதிவை முழுவதுமாக படியுங்கள் எவ்வாறு சூரியன் சுவாமியை தொட்டு வணங்கி பூஜை செய்கிறான் என்பது விளங்கும்.
காரைக்கால் தலத்திற்கு எண்ணற்ற சிறப்புகள் உள்ளன. அதில் முதலாவது ஒரு சமயம் பூமியில் பல வருடங்கள் மழை பொய்த்து பஞ்சம் ஏற்பட்டு உயிர்கள் எல்லாம் வாடிய போது, அன்னை பார்வதி தன் கருணையினால் உலக உயிர்கள் எல்லாம் உய்ய, அரிசொல் ஆற்றின் (அரசலாறு) கரையில் சாகம்பரியாக தவம் செய்தாள், அம்மையின் தவத்தினால் மழை பொழிந்து உயிர்கள் எல்லாம் உய்வுற்றன. பின்னர் ஐயனும் அம்மையும் கைலாய நாதராகவும், சொர்ணாம்பிகையாகவும் இங்கேயே திருக்கோவில் கொண்டனர்.
"அனைத்து உயிர்களுக்கும் அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைத்த" பெருங்கருணைக் காரைக்கால் அம்மையார் பிறந்த புண்ணிய பூமி இது. தமது மனித உடல் விடுத்து பேய் உரு கொண்டு திருக்கயிலையில் கால் படக்கூடாது என்று தலையால் நடந்த சென்றபோது, இறைவன் அவரது திருவாயினாலேயே “இவள் நம்மை பேணும் அன்னை காண்” என்று இறைவிக்கு அறிமுகப்படுத்துகின்றார். அந்த காரைக்காலம்மையார் இன்றும் அன்னம் பாலிக்கும் திருக்கோலத்தில் திருக்கோவில் கொண்டருளும் தலம்.
இந்தப் பெருமைகள் பெற்ற காரைக்காலில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற ஒரு தலம்தான் திருதெளிச்சேரி என்னும் தலம். தற்போது இத்தலம் கோவில்பத்து பார்வதீஸ்வரம் என்று அறியப்படுகின்றது. காரைக்கால் நகரின் புது பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தர் திருநள்ளாற்றிலே போகமார்த்த பூண்முலையாள் உடனுறை தர்ப்பாரண்யேஸ்வரரை தரிசனம் செய்யும் செல்லும் போது, காரைக்கால் அம்மையார் காலடிபட்ட, காரைக்கால் மண்ணை மிதிக்க வேண்டாம் என்று எண்ணி அப்போது காரைக்காலின் வெளிப்புறமாக அப்போது இருந்த இந்த இடத்தை தாண்டி செல்லும் போது இத்திருக்கோவிலின் குளக்கரையில் இருந்த விநாயகப்பெருமான் அவரை கூவி அழைத்ததால் "கூவிப்பத்து" என்பது மருவி "கோவில்பத்து" ஆகி விட்டது, திரும்பி வந்த சம்பந்தர் சுயம்வர தபஸ்வினி உடனுறை பார்வதீஸ்வரரை பதிகம் பாடி வணங்கி பின்னர் திருநள்ளாறு சென்றார் .
இத்திருக்கோவிலுடன் இரண்டு ஐதீகங்கள் இனைந்துள்ளன. முதலாவது பார்த்தன் பாசுபதஸ்திரம் வேண்டி தவம் செய்த தலம் இத்தலம் என்று தலபுராணம் கூறுகின்றது. இரண்டாவது சூரியன் தன் சாபம் தீர பார்வதீஸ்வரரை பூஜை செய்தான் என்னும் ஐதீகம்.
சூரியன் பூஜை செய்ததற்கு அடையாளமாக இன்றும் வருடத்தில் மூன்று நாட்கள் சூரியனின் கதிர்கள் மாலையில் மூன்று நாட்கள் இறைவனின் திருமேனியில் விழுகின்றன. பங்குனி மாதம் 18,19,20 தேதியன்று இவ்வாறு சூரியன் பார்வதீஸ்வரரை பூஜை செய்கின்றான். அப்போது பார்வதீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
இத்தலத்தில் சூரிய பூஜை அல்லாது கார்த்திகை சோமவார மாலை 108 சங்காபிஷேகமும் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. ஒரு வருடம் ஐந்து சோமவாரங்கள் வந்த போது நிறை வாரம் ஐயன், இந்த நாயேனது சங்காபிஷேகத்தை ஏற்று மகிழ்ந்தார்.
சூரியனது சுழற்சியை துல்லியமாக கணித்து அவன் கதிர்கள் சரியாக கர்ப்பகிரகத்தில் உள்ள இறைவனின் திருமேனியில் விழும் படியாக திருக்கோவிலின் திசையையும், உயரத்தையும் கணித்து கட்டிய அந்தக் கால சிற்பிகளின் நுட்ப சிற்ப சாஸ்திர மற்றும் வானியல் அறிவாற்றலை எண்ணவென்று சொல்ல. இந்த சூரிய பூஜையின் சில காட்சிகளைத்தான் இப்பதிவில் காணுங்கள் அன்பர்களே. அடியேனுக்கு இந்த சூரிய பூஜையை காணும் பாக்கியம் கிட்டியது. அப்போது கேமராவெல்லாம் அவ்வளவு பிரபலமில்லை. ஆகவே அந்த நினைவுகள் எல்லாம் மனதில்தான் இருந்தன. ஆகவே அவற்றை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இந்த 2012ம் வருட ஏப்ரல் முதல்நாள் பங்குனி மாதம் 19ம் நாள் சூரிய பூஜை படங்களை அடியேனது நண்பர் திரு. பொன். மனோகரன் அவர்கள் அன்பு கூர்ந்து அனுப்பி வைத்திருந்தார் அந்த அரிய காட்சிகளை அன்பர்களாகிய தங்களுடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
திருக்குளத்தில் அந்தி மாலை சூரியனின் பிரதிபிம்பம்
பார்வதீஸ்வரர் சத்யோஜாத மூர்த்தியாக இத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் எனவே சூரிய பூஜை மாலை நேரம் நடைபெறுகின்றது. அம்மையின் ஞானப் பாலுண்ட ஆளுடைப் பிள்ளையை, ஐயனை தரிசிக்காமல் செல்கின்றீரே என்று "கூவிக் கூப்பிட்ட பிள்ளையார்" குடி கொண்டிருக்கும் குளக்கரையிலிருந்து சூரியன் மேற்கு வானத்தில் உள்ள காட்சியையும் சூரியக் கதிர்கள் திருகுளக்கரையை தாண்டி திருக்கோவிலின் உள்ளே வரும் காட்சியை காண்கின்றீர்கள். ( அன்று போலவே இன்றும் ஆடுகள் குளக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கின்றன)
ப்ரத்உஷத் கால அருண சூரியக்கதிர்கள் முகப்பு அலங்கார வளைவையும், அதிகார நந்திகளையும் ஐந்து நிலை இராஜ கோபுரத்தையும் தன் பொன் வண்ண கதிர்களினால் தங்க மயமாக்கும் அற்புத காட்சி. அனைத்தும் இளஞ்சிவப்பு மயமாக இருக்கும் காட்சியை காண்கின்றீர்கள் அன்பர்களே.
சந்தியாக்கால மஞ்சள் சூரியக்கதிர்கள் இராஜ கோபுரத்திற்குள் ஐயன் அனுமதி பெற்று நுழைந்து கருவறையை நோக்கி செல்லு அற்புதக் காட்சி. கொடி மர விநாயகரை சூரிய கிரணங்கள் தொழும் காட்சியையும், மஹா மண்டபத்தின் நுழைவாயிலில் சூரியன் நிற்பதையும் இப்படத்தில் காண்கின்றீர்கள். அன்பர்கள் சூரியன் ஐயனின் சிவலிங்கத் திருமேனியை தழுவும் அந்த கணத்திற்காக காத்து நிற்கின்றனர்.
மஹா மண்டபத்தின் வாயிலைத்தாண்டி சூரியக் கதிர்கள் செல்லும் காட்சி. வாயிலின் இரு புறமும் திருஞான சம்பந்தரின் திருப்பதிகள் கல்வெட்டுகளாக பதிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். வாயிலின் மேல் உள்ள சுதை சிற்பத்தில் சூரியனும், பார்த்தனும் பார்வதீஸ்வரரை பூஜிக்கும் சுதை சிற்பம் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளதை காண்கின்றீர்கள் அன்பர்களே.
மஹா மண்டபத்தின் உள்ளே சாயுங்கால சூரியக் கதிர்கள் செல்லும் காட்சி. சூரிய கதிர்களை தெளிவாக பக்தர்கள் காணும் விதமாக சாம்பிராணி புகை போடப்படுகின்றது அதனால் படம் இவ்வாறு உள்ளது. கர்ப்பகிரகத்தில் உள்ள விளக்குகளை காண்கின்றீர்கள். சூரியன் தற்போது கர்ப்பகிரகத்தின் படிக்கட்டில் ஏறி சென்று சுயவர தபஸ்வினி அம்பாள் சமேத பார்வதீஸ்வரரை பூஜை செய்ய காத்து நிற்கின்றான்.
அனைவரும் காத்திருந்த அந்த தருணமும் வந்து விட்டது கருவறையின் உள்ளே சிவபெருமானின் திருமேனியைத் தொட்டு வணங்குகிறான் சூரியன். அன்பர் கண்களில் ஆனந்தக் கண்ணீர். ஐயனுக்கு அற்புத அலங்காரம். வெள்ளி தாமரை பிரம்ம பீடமும், நாகாபரணமும், நவரத்னம் பதித்த நகைகளும் அப்படியே சூரியக் கதிர்களை அன்பர்களின் மேல் பிரதிபலிக்கின்றன . அந்த வேளையில் வேத மந்திரங்கள் முழங்க அலங்கார தீபம் ஐயனுக்கு காட்டப்படுகின்றது. இந்த சூரிய பூஜையைக் காண்பவர்கள் அனைவரும் ஐயனின் அந்த அற்புத அலைகளை உணர்கின்றனர். இதற்காகவே இது போன்ற சமயங்களில் இறைவனை வழிபடவேண்டும். இந்த அதிர்வுகள் நமது உடலையும், உள்ளத்தையும் தூய்மை ஆக்குகின்றன.
திருக்குளத்தின் கரையில் அமைந்துள்ள கூவீக் கூப்பிட்ட விநாயகரின் திருச்சன்னதியின் பின் புலத்தில் சூரியன் மறைந்த காட்சியை காணுகி்ன்றீர்கள் அன்பர்களே.
இது போல சில தலங்களிலும் குறிப்பிட்ட சில நாட்களில் சூரியன் மற்றும் சந்திர பூஜை நடைபெறுகின்றது அவையாவன:
காரைக்கால் அருகில் உள்ள திருமலைராயன் பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் பங்குனி மாதம் காலை மூன்று நாட்கள் சூரிய பூஜை.
நவக்கிரக ஸ்தலங்களுள் சந்திரனின் தலமான திங்களூரில் பங்குனி உத்திரத்தன்று காலை சூரிய பூஜை, மறு நாள் இரவு சந்திர பூஜை.
எண்கண் முருகனின் ஆலயத்தில் பங்குனி காலை சூரிய பூஜை.
பாண்டிக்கொடுமுடியில் பங்குனி மற்றும் ஆவணி மாதங்களில் சூரிய பூஜை.
திருநெடுங்களத்தில் ஆடி மாதம் காலை சூரிய பூஜை.
தை மாத இரத சப்தமியன்று காஞ்சிபுரம் ஏலவார் குழலி அம்மையை சூரியன் தொழுகின்றான்.
திருவேதிக்குடியில் பங்குனி காலை சூரிய பூஜை.
லலிதாபாள் அருள் பாலிக்கும் திருமீயச்சூரில் சித்திரை 21 முதல் 27 வரை காலை சூரிய பூஜை.
தொண்டை மண்டல ஞாயிறு தலத்தில் சித்திரை மாதம் சுவாமி மற்றும் அம்பாள் சூரிய பூஜை.
திருநாகேஸ்வரத்தில் கார்த்திகை பௌர்ணமியன்று பிறையணி நுதல் அம்மை சந்திர பூஜை கண்டருளுகிறாள்.
அன்னாபிஷேக தினமான ஐப்பசி பௌர்ணமியன்று குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள செந்தலை என்னும் தலத்தில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரை அன்னாபிஷேகத்தில் சந்திரன் பூஜை செய்யும் கோலத்தை காணலாம்.
முடிந்த அன்பர்கள் இத்திருக்கோவில்களில் சென்று சூரிய பூஜை, சந்திர பூஜை காலங்களில் சென்று இறைவனையும், இறைவியையும் வழிபட்டு நல்லருள் பெறுங்கள்.