Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, July 15, 2012

பில்லா 2 - டான் பார் பேன் ( DON FOR FAN )

                                                    


முந்தைய படம் தோல்வியோ , வெற்றியோ எப்படியிருந்தாலும் அடுத்த படத்திற்கான ஒப்பனிங்கை அப்படியே தக்கவைத்துக் கொள்பவர்  ,  , அப்படியிருக்க 2011 ன் ப்ளாக்பஸ்டர் மங்காத்தாவை தொடர்ந்து வந்திருக்கும் படம் , ஐந்து வருடங்களுக்கு முன்னாள் மெகா ஹிட்டடித்த பில்லா படத்தின் பார்ட் 2 , இந்தியாவின் முதல் ப்ரீக்யூவல்  படம் இப்படி சில  சிறப்பம்சங்களையும் தாண்டி இந்த வருடத்திற்கே ஒரு மிகப்பெரிய கமர்சியல் வெற்றிக்காக ரசிகர்கள் ஆவலுடன் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ரிலீசாகியிருக்கிறது  பில்லா 2

ஒரு சாதாரண அகதியாக இருந்து கடத்தல் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் டானாக டேவிட் பில்லா உருமாறுவதே கதை ... கொலை சதியில் இருந்து பில்லா ( அஜித் ) தப்பிப்பதிலிருந்து ஆரம்பிக்கும் படம் பிளாஸ்பேக்கில் விரிகிறது ... அகதிகள் முகாமில் நண்பனுக்காக இன்ஸ்பெக்டரை அடிக்கும் பில்லா கொஞ்சம் பிரபலமடைகிறான் ... முதலில் வைர கடத்தலின் ஆரம்பித்து , பிறகு ஹெராயின் கடத்தல் மூலம்  அப்பாசியுடன் ( பாண்டே ) அறிமுகமாகும் பில்லா பிறகு அவன் சம்மதமில்லாமலேயே டிமொட்டி வித்யுத் ) யுடன் ஆயுதக் கடத்தலில் இறங்குகிறான் ... அப்பாசியை கொன்று விட்டு டிமொட்டியையும் பகைத்துக்கொண்டதால் எதிரிகள் மூலம் முதல்வரைக் கொன்ற பலி பில்லாவின் மேல் விழுகிறது ... பலியிலிருந்து மீண்டு டிமொட்டியையும் கொன்று விட்டு கடத்தல் உலகின் முடி சூடா மன்னனாக பில்லா மாறுவதுடன் படம் முடிகிறது ... 



அஜித்திற்கு இது அல்டிமேட் ரோல் ... படத்தில் ஆதி முதல் அந்தம் வரை பிரேம் பை பிரேம் தல தாண்டவம் ஆடியிருக்கிறார் ... " எதிரியின் பயம் நம் பலம் " , " எனக்கு நண்பனாக இருக்கறதுக்கு தகுதி தேவையில்லை , ஆனா எதிரியா இருக்கிறதுக்கு தேவை " போன்ற சார்ப்பான வசங்களை அஜித் பேசும் போது தியேட்டர் அதிர்கிறது ... என்ன தான் மாஸ் ஹீரோ படமென்றாலும் படம் முழுவதும் அஜித் சகட்டுமேனிக்கு கையில் கிடைத்ததையெல்லாம் ( குண்டூசி உட்பட ) வைத்துக்கொண்டு எதிரிகளை ரத்த வெள்ளத்தில் வீழ்த்திக் கொண்டே போவது ஒரு லெவலுக்கு மேல் போரடிக்கிறது ... ப்ளாஷ்பேக் காட்சிகளுக்காகவாவது அஜித் கொஞ்சம் இளைத்திருக்கலாம்... 


இந்த படத்திற்கு ஹீரோயினே தேவையில்லை என்னும் போது இரண்டு ஹீரோயின்கள் தேவையா என்று தெரியவில்லை ... கடத்தல் கும்பலில் சமீராவாக நடித்திருக்கும் ப்ருணா அப்துல்லா டூ பீஸில் வளைய வந்தாலும் ஏனோ எந்த கிளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. அஜித்தின் அக்கா பெண் ஜாஸ்மினாக நடித்திருக்கும் பார்வதி ஓமனக்குட்டன் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் பரிதாபமாக செத்துப்போகிறார் ... பில்லா வில் நமீதா , நயன்தாராவை எல்லாம் பார்த்த கண்களுக்கு திருஷ்டி கழித்துவிட்டார்கள் ... 



வடநாட்டு இறக்குமதியாமான இரண்டு வில்லன்களும் வாட்டசாட்டமாக இருந்தும் , அஜித்திடம் அடி வாங்கி மரித்துப் போகிறார்கள் ... டிமொட்டியாக நடித்திருக்கும் வித்யுத்தின் அறிமுக காட்சி அற்புதம் ... அஜித்தின் நண்பனாக வருபவர் , கடத்தல்காரர் இளவரசு , அஜித்தின் மேல் காண்டோடு அலையும் சுந்தர்.கே.விஜயன் எல்லோரும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள் ... 


படத்தின் பாடல்களை பற்றி இரு வேறு கருத்துக்கள் இருந்தாலும் யுவனின் பின்னணி இசை பிரமாதம் ... " மதுரை பொண்ணு " பாடல் முணுக்க வைக்கிறது ... நா.முத்துக்குமார் வரிகளில் " உனக்குள்ளே மிருகம் " பாடல் வரிகளும் , அதை படமாக்கிய விதமும் அருமை ...  சண்டைக்காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன ... வன்முறைக்காக படத்திற்கு  சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தும் பெண்கள் , சிறுவர்கள் கூட்டம் நிறையவே இருக்கிறது ...படம் டெக்னிக்கலி செம சௌண்டாக இருக்கிறது ... ஒளிப்பதிவாளர் ராஜசேகரும் , எடிட்டர் சுரேஷ் அர்சும் அதற்கு முக்கிய காரணகர்த்தாக்கள் ... 



பில்லாவை போலவே பில்லா 2 வும் மேக்கிங்கில் படு ஸ்டைலாக இருக்கிறது ... அதற்காக இயக்குன்ர் சக்ரிக்கு ஒரு சபாஷ் போடலாம் .... ஜாபருடன் சேர்ந்து இவர் எழுதியுள்ள வசனங்களும் சார்ப் அண்ட் ஸ்வீட் ... ஒவ்வொரு காலகட்டத்திலும் பில்லாவின் முன்னேற்றத்தை சரியாக பதிவு செய்திருக்கிறார்கள் ... சட் சட்டென்று பில்லா எடுக்கும் முடிவுகள் மூலமும் திரைக்கதையில் வேகத்தை கூட்டியிருக்கிறார்கள் ...  


ஹீரோயின்களை போலவே மற்ற குறைகளும் படத்தில் உள்ளன ... முதல் பாதியில் நாயகனின்  பாதிப்பு நிறையவே இருக்கிறது ... இரண்டு மணி நேரத்திற்குள் பில்லாவின் வாழ்க்கையை காட்டி விட வேண்டுமென்ற முனைப்பால் திரைக்கதையில் வேகத்தை விட  அவசரமே அதிகம் தெரிகிறது ... முதல்வர் கொலையில் நடக்கும் சதி , ஓமனக்குட்டனை அஜித் காப்பாற்றும் காட்சி போன்ற ஒன்றிரண்டை தவிர மற்றவையெல்லாம் பெரிய ட்விஸ்ட் ஏதுமில்லாமல் ப்ளாட்டாக இருக்கிறது ... அஜித் ரசிகர்களுக்கு படம் ரொம்பவே பிடிக்கும் , மற்றவர்களுக்கு பில்லா , மங்காத்தாவுக்கு ஒரு மாற்று குறைவென்றாலும் பில்லா 2 டல்லடிக்காத டானாக வே இருப்பான் ... நிச்சயம் ரசிகர்களுக்கு பில்லா 2 - டான் பார் பேன் ( DON FOR FAN ) 

ஸ்கோர் கார்ட் : 43  




Monday, April 16, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி


'சினிமா என்னும் ஊடகத்தை வியாபாரமாக மாற்றுகிறார்கள்; கமர்ஷியல் என்னும் பெயரால் அதை  அழிக்கிறார்கள்' என்று அடிதொண்டையில் கத்தும் சினிமா விமர்சகர்கள் ஓகே ஓகே  தியேட்டர் பக்கம் வர வேண்டாம்.
எப்படியும் இவர்களும் யாருக்கும் தெரியாமல் ராத்திரி வந்து படம் பார்க்கத்தான்
போகிறார்கள்; முழுக்க பார்த்து ரசித்து பிறகு அடுத்த நாள் கலைத்தாயின் காவல்காரர்களாக படத்தை குற்றம் சாட்டுவார்கள்.

ஆனால் இது எதைபற்றியும் கவலைப்படாமல், படம் பார்க்க வரும் சாமான்ய ரசிகர்களை , இரண்டரை மணி நேரம் சிரிக்க வைத்து , கவலையை மறக்க வைத்த இயக்குனர் ராஜேஷ்க்கு பெரிய கைதட்டல் கொடுக்கலாம். நிச்சயமாக சொல்லி அடித்த கல் இது - டார்கெட் மிஸ் ஆகல.


இதுதான் யதார்த்தம். என்னதான் கலை , உலகத்தரம் என்று எத்தனையோ மேதைகள் சினிமாவைப் பற்றி பேசினாலும் , சாதாரண ரசிகனின் சந்தோசமான கைதட்டல் சத்தத்தில் அவை எதுவுமே யாருக்கும் கேட்காது.இந்த உண்மையால்தான் சிவாஜி காலத்தில் எம்ஜீஆரும் , கமல் காலத்தில் ரஜினியும் ஓவர்டேக் செய்து வெற்றிபெற முடிந்தது.

நாலாயிரத்து முன்னூற்றி இருபத்தி ஏழு தடவை பார்த்த  கதை.  அதில் கடைசி இரண்டு , இதே இயக்குனர் தன் போன இரண்டு படத்தில் ஏற்கனவே காட்டி விட்டார். இப்போதும் அதே. ஆனால் நடிகர்கள் வேறு வேறு.  அதனாலென்ன? படத்தின் தோல்வி என்பது நிர்ணயம் ஆவது - படம் பார்க்கும் போது ரசிகர்களுக்கு சலிப்பு வந்தால் மட்டுமே . அதை ஒவ்வொரு நிமிடமும் மனதில் வைத்து ஒவ்வொரு சீனையும் தரமான சிரிப்பிற்காக செதுக்கி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.

சிவா மனசுல சக்தி , பாஸ் என்கிற பாஸ்கரன் - இந்த இரண்டு படங்களும் இப்போதும் டிவியில் போட்டால் ,அது எத்தனை முறை பார்த்ததானாலும் மீண்டும் பார்க்க தோன்றும் ஈர்ப்பு  உண்டாகியிருக்கிறது. அந்த வரிசையில் இந்த படமும் இனி கண்டிப்பாக இடம்பெறும்.

படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின்.  தளபதி மகன் என்பதால் பன்ச் டயலாக்கோ , தலைவர் பேரன் என்பதால் பக்கபக்கமாய் வசனமோ வேண்டும் என்று கேட்காமல் , ஒரு சராசரி யூத் கேரக்டர் மூலம் அறிமுகம் ஆகி பெரிய பாராட்டை பெறுகிறார். கொஞ்சமே கொஞ்சம் அரசியலை கலந்திருந்தாலும் , மண்ணை கவ்வியிருக்கும் இந்த படம்.

நல்ல ஒரு தயாரிப்பாளர்க்கு  இருக்க வேண்டிய புத்திசாலித்தனம் உதய்க்கு  இருக்கிறது. அதற்கு கிடைத்த பரிசு - படத்தின் இமாலய வெற்றி. மென்மையான குரல், உணர்ச்சிகளை வேறுபடுத்தி காட்டத்தெரியாத நடிப்பு,  வராத நடனம் என்று எத்தனையோ மைனஸ் இருந்தாலும் , கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்த விதத்தில் எல்லாவற்றையும் ஓரங்கட்டி கைதட்டல் பெறுகிறார் உதயநிதி.

சந்தானத்தை பேச விட்டு , அடக்கி வாசித்து நடிக்கும் உத்தி ஜெயித்திருக்கிறது.
குரலிலும் மேனரிசத்திலும் ஜீவாவை நினைவுபடுத்தினாலும் , முதல்  படத்துக்கு நல்ல ஹோம் வொர்க் செய்து உழைத்திருப்பது தெரிகிறது.  சரண்யா - அழகம்பெருமாள் காட்சிகள் யதார்த்தம் - சண்டைக்கு சொல்லும் காரணம் தவிர.

படத்தில் சகிக்க முடியாத ஒன்று , சந்தானத்துக்கு ஜோடியாக வரும் பெண்ணை கிண்டலடிக்கும் காட்சிகள். அழகில்லாததால் மட்டுமே அந்த பாத்திரம் இவ்வளவு கிண்டலுக்கு உட்படுகிறது என்ற நினைப்போடு டைரக்டர் காட்சிப்படுத்தியிருந்தால் ,அது மிக கண்டிக்கப்படவேண்டிய விஷயம்.

போன இரு படத்திலும் செய்த அதே தவறு இந்த படத்திலும் மீண்டும் எதிரொலிக்கிறது. கிளைமாக்ஸ் சொதப்பல். தேவையில்லாமல் ஆர்யா , ஆண்ட்ரியா என நட்புக்கு ஆளை நடிக்க கூட்டிவந்து இழுத்தடித்த கடைசி  இருபது நிமிட கொடுமை தவிர மற்றவை எல்லாம் ஓகே. இந்த படத்தை இப்படிதான் முடிக்க முடியும் என்பது திரையுலக டிக்சனரியில் உள்ளதென்பது பார்க்கும் எல்லாருக்கும் தெரியும்.அதனால் டைரக்டர் பிழைக்கிறார்.


படத்தின் இரண்டு சறுக்கல்கள் இசை மற்றும் கதாநாயகி. சரக்கு தீர்ந்து போன ஹாரிஸ் ,ஏற்கனவே ஹிட்டடித்த தன் பாடல்களை வைத்து ஒட்டியிருக்கிறார். பின்னணி இசை காட்சிக்கு ஏற்ற தாளம் பிசகுகிறது. எதிர்பார்த்து ஒன்றுதான்.

SMS அனுயா போலவோ , பாஸ் நயன்தாரா போலவோ நடிக்க தெரியவில்லை ஹன்சிகாவுக்கு.Just chubby  yet cute. போகட்டும். மற்ற பாசிடிவ் விஷயங்களால் இவை இரண்டும் மறைந்து விடுகிறது.  

படத்தின் ஆணிவேர் , தூண் , ஏன் மொத்த பலமுமே சந்தானம்தான்.  போன விஜய் அவார்டில் சந்தானத்துக்கு விருது கொடுக்கும்போது , மூன்றாம்  முறையும் இந்த படம் மூலம் சந்தானத்துக்கே கிடைக்கும் என்று அடித்து  சொன்ன ராஜேஷ் அதை உறுதிபடுத்தியிருக்கிறார். நல்ல நடிகரும் , அந்த நடிகரிடம் இருந்து சிறந்த நடிப்பை வாங்க தெரிந்த இயக்குனரும் சேர்ந்தால் கிடைக்கும் ரிசல்ட் நூற்றுக்கு நூறு என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த படம்.



கண்ணை உறுத்தும் கலர் பேன்ட் , பொருந்தாத டி ஷர்ட் ,
எண்ணெய்  வைத்து ஒழுங்காய் வாரிய தலைமுடி  என ஒரு மாதிரியான கெட் அப்பில் அசத்துகிறார் சந்தானம். அடிக்கடி சிவாஜியையும், கமலையும் மிமிக் செய்து அடிக்கும்  அட்டூழியமும் , உச்சகட்டமாக கிளைமாக்ஸ்  காட்சியில் மதபோதகரை இமிடேட் செய்யும் காட்சியிலும், என கிடைத்த எல்லா கேப்பிலும் பவுண்டரி அடித்து விளையாடியிருக்கிறார்.

வடிவேலுவின் இடம் காலியாய் இருக்கும் நேரத்தில், விவேக்கின் காமெடி காலி பெருங்காயமாய் கரைந்து முடிந்திருக்கும் நேரத்தில்,  இருக்கும் மிச்ச சொச்சங்களை புறந்தள்ளி டாப் காமடியனாக கம்பீரமாக உயர்ந்திருக்கிறார்  சந்தானம்.இது போன்ற படங்களை ஒரு ஐந்து வருடங்கள் தொடர்ந்து கொடுத்தால், பல வருடம் காத்திருந்த கவுண்டமணியின் கிரீடத்தை சந்தானத்துக்கு தாராளமாக வழங்கலாம்.

எந்த லாஜிக்கும் பார்க்காமல் மூன்று மணி நேரம் சிரிக்க , சரியான மினிமம் கேரன்ட்டி இந்த படம்.

ஓகே ஓகே - டபுள் ஓகே.


பேஸ்புக்கில் தொடர , வலது பக்க மேல் ஓரத்தில் உள்ள 'Find us on Facebook'ல்  Like பட்டனை அழுத்தவும்.

Sunday, March 11, 2012

தேசிய விருதுகள்: வாகை சூடிய தமிழ்த்திரை


 மெகா பட்ஜெட் ஆடம்பர செலவுகள் இல்லை. படத்தின் அரை வாசி செலவை சம்பளமாக கேட்கும் நட்சத்திர நாயகர்கள் இல்லை. பறந்து அடிக்கும் சண்டைக் காட்சிகள் இல்லை. கவர்ச்சியான கதாநாயகி இல்லை. முக்கியமாக ,சேட்டிலைட் டிவிகளில் நிமிடத்துக்கு ஒரு முறை வரும் விளம்பரம் இல்லை. 

இப்படி எதுவுமே இல்லாமல்  ஐந்து தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறது தமிழ் திரையுலகம்.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் : அழகர்சாமியின் குதிரை
சிறந்த தமிழ் திரைப்படம்                         : வாகை சூட வா
சிறந்த துணை நடிகர்                                 : அப்புக்குட்டி (அழகர்சாமியின் குதிரை )
சிறந்த புதுமுக இயக்குனர்                     : தியாகராஜன் குமாரராஜா (ஆரண்ய காண்டம் )
சிறந்த படத்தொகுப்பாளர்                         : பிரவீன் கே .எல் (ஆரண்ய காண்டம் )

சாதிக்க திறமை மட்டுமே போதும் என்பது இன்னொரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. மேற்கூறிய எல்லா படங்களுமே   வசூலில் அடி வாங்கிய படங்களே.
திரையிட சரியான அரங்குகளும் நாட்களும் கிடைக்காமல்  , கமர்சியல் படங்களின் வரவுகளுக்கு இடையே இருந்த மிக குறுகிய காலகட்டத்தில் திரையரங்குகளை சந்தித்தவை.ஆனால் அரங்குகளை நிரப்பவில்லை.  காரணம் - படிக்க பதிவின் முதல் பத்தி.

இப்போதைய காலகட்டத்தில் பலகாரம் சுவையாய் தரமாய் இருப்பதை விட அதை  பார்ப்பதற்கு அழகாக wrap செய்து  மக்களை வாங்க வைக்கும் உத்தியே வெற்றி பெறுகிறது.ஆனால் வெற்றி என்பது வேறு. அங்கிகாரம் என்பது வேறு. இரண்டாவதற்கு , கடின உழைப்பையும்,திறமையையும் தவிர எந்த மேற்பூச்சு வேலையும் தேவை இல்லை. ஆதாரம் -  இந்த ஐந்து விருதுகள்.
திரையுலகின் பல விதிகளை உடைத்திருக்கின்றன மேற்கூறிய படங்கள்.

ஆரண்ய காண்டம் :

கதையும் அதன் களமும் முடிவான உடனே , தயாரிப்பாளருக்கு புரிந்திருக்கும் - கல்லாவை நிரப்ப தேவைப்படும் தாய்க்குலங்கள் ஆதரவு இந்த படத்திற்கு சைபர் என்று. உபயம் - படத்தில் தவிர்க்க முடியாத வசனங்கள்.ஆனாலும் முட்டி மோதி படத்தை வெளியிட்ட சரணுக்கு வாழ்த்துக்கள்.

மீதி வர வேண்டிய சொற்ப  கூட்டத்தையும் சாதாரண தமிழ் ரசிகனுக்கு புரியாத தரமான போஸ்டரின் ஆங்கில தாக்கத்தால் இழந்தது இந்த படம்.


படம் வெளிவந்து ஓடி முடித்த நான்கைந்து நாட்கள் தாண்டியே இது ஒரு தமிழ் படம் என்று பெரும்பானவர்களுக்கு  புரிந்தது.
  ஆனாலும் இயக்குனரும் , தொகுப்பாளரும் படத்தின் நாயகர்களாய் மிளிர்ந்தது சத்தியம்.
படத்தின் வேகத்தில் பிரவீனின் உழைப்பு நன்றாக தெரிந்தது. 
ஆரண்ய காண்டம் , கேங்ஸ்டர் படங்களின்  புது கோணத்தை , வேறு பாணியில் சொல்லும் விதத்தை அறிமுகப்படுத்தியது.

வசனங்களின் கூர்மையையும் , திருப்பங்களையும் நம்பிய இந்த படம்  தமிழ் திரை சரித்திரத்தில் ஒரு மைல்கல்.

அழகர்சாமியின் குதிரை:

வெண்ணிலா கபடிகுழு சுசீந்திரனின் இன்னொரு காவியம். ஒரு கதையை திரைப்படம் ஆக்கும்போது அந்த மாற்றத்திற்கு தேவையான அனைத்தையும் படத்தில் உபயோகித்த விதத்திற்கு பரிசு கிடைத்திருக்கிறது.
அப்புக்குட்டி , அழகர்சாமி பாத்திரத்தின் கனகச்சிதமான நல்ல தேர்வு. இளையராஜா இசை , காட்சிகளில் தெறித்த  உணர்வுகளுக்கு  மேலும் அழுத்தம் கொடுத்திருக்கிறது.


பொழுதுபோக்குக்கு தேவையான அனைத்து நல்ல அம்சமும் படத்தில் உண்டு.ஆனால் அவை யாவும் யதார்த்த   கோட்டுக்குள் மட்டுமே நின்று சாதித்திருக்கிறதே தவிர , காதை அடைக்கும்  குத்து பாட்டும் , கண்ணை உறுத்தும் சண்டை காட்சிகளும் அல்ல. கதை ,குதிரையை சுற்றிய நூலை நழுவவிடாமல் மற்ற துணை கதைகளை இணைத்து சென்ற விதம் அருமை.


ஒரு நடிகனுக்கு , நாயகனுக்கு தேவையான எந்த அடையாளமும் அப்புகுட்டிக்கு இல்லை. அதுவே இந்த வெற்றிக்கும் காரணம். அப்புகுட்டியின் இந்த வளர்ச்சி  கண்டிப்பாக திரையுலகில் நுழைய நினைக்கும் எந்த சாமானியனுக்கும் ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.

சுசீந்திரன் ,தமிழுக்கு இன்னொரு பாரதிராஜாவாக வர தகுதியான இயக்குனர். அவசரப்பட்டு 'ராஜபாட்டையில்' பயணிக்காமல் நிதானமாய் சென்றால் வளர்ச்சி தொடரும்.

வாகை சூட வா:

வசூலில் கடும் இழப்பு , நாயகன் விமல்  , வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுக்க வைத்தது. நல்ல படங்களுக்கு மட்டுமே உண்டான சாப நிலை இது.

பீரியட் படங்கள் வரிசையில் நல்ல கருத்தையும் முன்வைத்து வெளியான படம். வெயில் தகிக்கும்  சூழலில் , கலகலப்பான கிராமிய பின்னணியுடன்  அழகான காதலையும் சேர்த்து கொடுத்த படம். கிப்ரானின் இசை புது மாதிரியாய் கிறங்கடிக்க வைத்தது.


விமலின் அப்பாவித்தனமான நடிப்பும் , இனியாவின்  வாயாடித்தனம் கலந்த துடிப்பும் , ஏனைய நடிகர்களின் ஆரவாரமில்லாத பங்களிப்பும் , படத்தின்  தரத்தை உயர்த்தியது.   சிறந்த படங்களில் இந்த படத்துக்கு முதலிடம் கிடைத்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.வெகு பொருத்தமான தேர்வு.

-------------------------------------

இந்த படங்கள்  வெளியாகி , மக்களின் மவுத்டாக் மூலம் ' நல்ல படம் , பார்க்கலாம்' என்று கூட்டம் தயாரவதற்குள், திரையரங்குகளில் இருந்து காணாமல் போக நேர்ந்தது.  இது போன்ற நல்ல முயற்சிகளை 'ஆவண படம்' அல்லது  'அவார்டுக்கு மட்டும் தகுந்த படம் ' என்று ஒதுக்குகிற  விபத்தும் எப்போதும் நேர்கிறது.

ஆனால் இந்த மூன்று படங்களும் , ஆவணப்படம் போல  வெறும் செய்தியை மட்டும் சொல்லாமல் அதை சுவாரஸ்யமாகவும் . நகைச்சுவையுடனும்  சொல்லி பார்ப்பவரை சிரிக்க வைத்திருந்தாலும் ,தயாரிப்பாளர்களை அழ வைத்தவை என்பது உண்மை.

ஒரு பெரிய நடிகனின் பட பட்ஜெட்டில் ,இது போன்ற பத்து படங்கள் செய்து விடலாம் என்பது நிதர்சனம்.

ஒரு பக்கம்  , நல்ல படங்களை  கொடுக்க தயாரிப்பாளர்கள் இருக்க வேண்டும். அப்படி மிக கடினப்பட்டு அவர்கள் கொடுக்கும் படத்தை வரவேற்று  அதை காப்பாற்றும் ரசிகர்கள் இருக்க வேண்டும்.  இரண்டும் இல்லை என்றால் நல்ல கதை சொல்லி இயக்குனர்கள் காணாமல் போய் , ஹீரோயிசத்தில் கதையை பலி கொடுக்கும் இயக்குனர்கள் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்.

தொடரட்டும் இந்த அங்கீகாரங்கள்.