Friday, October 28, 2011

கடவுள் கண்டிப்பானவர் அல்ல ...

அண்மையில் என் ஊர் அருகில் உள்ள கோவிலில் நடந்த ஒரு விபத்தை கேள்விப்பட்டதும் மிக வருத்தத்துடன் இந்த பதிவு . சபரிமலை ஜோதி பார்க்க செல்வோருக்கும் இந்த பதிவின் கேள்விகள் பொருந்தும். 

கடவுள் , கோவில் விஷயத்தில் எல்லாருக்கும் பொதுவாக பயபக்தியோடு கூடிய ஒரு பிடிவாதம் உண்டு. ஆனால் அது அவர்களை மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தையும் பாதிக்கும் நிலை சில சமயம் ஏற்படுகிறது. உண்மையிலேயே உடல்வலிமை இருந்து ,  கடுமையாக விரதம் இருந்து கட்டுப்பாடோடு தங்களால் தங்கள் பக்தியை வெளிப்படுத்த முடிபவர்கள் இதில் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் வயதானவர்கள் , உடல் நலிவுற்றவர்கள் இதை தாங்களும் பின்பற்றி பிறகு பாதிக்கப்பட்டு கடவுளையே திட்டுவது மன்னிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல.

முன்னோர்கள் சில அர்த்தங்களை புரிய வைப்பதற்காக ,நாம் அவற்றை மறக்க கூடாது என்பதற்காக சம்ப்ரதாயங்களாக சில தருணங்களில் சிலவற்றை சொல்லிவிட்டு சென்றனர். ஆனால் அதன் உட்கருத்தை விட்டுவிட்டு அதை வெறும் சடங்குகளாக மட்டுமே பாவித்து செய்யும் அவல நிலை இப்போது ஏற்பட்டு உள்ளது. 




சில உதாரணங்கள் :

பழனி மலை எங்கள் ஊரிலிருந்து அரை மணி நேர பயணமே. மாதாமாதம் எங்கள் பக்கத்து வீட்டு பெண்கள் பௌர்ணமி அன்றோ வேறு எதாவது விஷேச தினத்திலோ அதிகாலை கிளம்பி, பேருந்தில் சிரமப்பட்டு, நெரிக்கும் கூட்டத்தில் பயணப்பட்டு சென்று, வெயிலில் மலை ஏறி, நீண்ட வரிசையில் சிக்கி ....... அப்ப்ப்பப்ப்பா   தரிசனம் பெறும்போது நடுப்பகல்  ஆகி பாதி பேர் மயக்கம் ஆகியிருப்பார்கள். அதிலும் ஒரு தடவை ஒருவருக்கு மிகவும் முடியாமல் போக , ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி வருத்தப்பட்டு சொன்னார் - ' இனி அந்த முருகனுக்கும் எனக்கும் ஆகாது .. எத்தனை தடவை மலை ஏறி வந்துருப்பேன்.. இப்படி பண்ணிட்டானே ?' 

கேள்வி : ஏன் இப்படி ? முருகனுக்கு  எப்போதும் நமக்கு யோசனை சொல்ல நேரம் இல்லாத காரணத்தினால்தான் Common Sense எனப்படும் இயல்பறிவை கொடுத்திருக்கிறார். உங்கள் இயல்பறிவுக்கு வேலை கொடுக்காமல் இப்படி சிரமப்பட்டு வந்தால் அதற்கு அவர் என்ன செய்வார்?.அப்படியானால் எப்போது கோவிலுக்கு போவது ?  இதற்கு ஒரு வழி இருக்கிறது. என அப்பாவும் நானும் , சகோதரனும்  மாலை  ஒரு நான்கு மணிக்கு கிளம்பி நிதானமாக , எந்த ஒரு விஷேச நாளும் இல்லாத நாளில் மெதுவாக் கதை பேசி மலையேறி காத்திருக்கவே வேண்டாத ,அன்று வந்திருக்கும் மிக சிறிய கூட்டத்தில் சென்று இரண்டு மூன்று முறை தரிசித்து பின் தங்க தேரோட்டமும் பார்த்து , ஒரு மணி நேரம் கதை பேசி விட்டு பத்து மணிக்குள் வீட்டுக்கு சென்று விடுவோம்.

 கடவுளை தரிசித்த திருப்தியும் உண்மையான அமைதியை அனுபவித்த பரம சந்தோசத்தையும்  உணர்வோம். இப்போது சொல்லுங்கள் ? எது புத்திசாலித்தனம் ? அதே முருகன்தான் , அதே பழனிதான்.. கிடைத்த வரமும் ஒன்றும் குறைந்ததல்ல ..  யோசியுங்கள் .. 

அடுத்த நிகழ்வு :  'அய்யயோ .. அவ்வளவு  தூரம் போயிட்டு அர்ச்சனை பண்ண முடியாம போய்டுச்சே .. இது என்ன சோதனை ? பவுர்ணமி அன்னைக்கு அர்ச்சனை பண்ணுனா கோடி புண்ணியமே ' என்று சிலர் புலம்புவார்கள். அர்ச்சகர்களால் செய்யும் அர்ச்சனை மட்டுமே ஆண்டவனை சென்றடைகிறது என்று முழுமையாக நம்பும் பரிதாபத்திற்குரிய பக்தர்கள் அவர்கள். 

அர்ச்சகர்கள் உச்சரிப்பது சமஸ்க்ருத மந்திரம்.   சமஸ்க்ரிதம் என்பது தேவலிபி என்று கொண்டாடப்படுவது.அதாவது கடவுளின் பாஷை.நாம் நம் பெயரை எழுதி கொடுத்தால் , அவர் அந்த மொழியில் கடவுளிடம் நமக்கு வேண்டுவார்.
கேள்வி -   கடவுளுக்கு அந்த பாஷை மட்டும்தான் தெரியுமா ? அதையே நாம் நமக்கு தெரிந்த தமிழில் (அது எந்த தமிழாக இருந்தாலும் ) ' ஆண்டவா , இந்த அறிவு கெட்ட ராமசாமிய காப்பாத்துப்பா..'  , ' இன்னா கணேஷா .. நீ மட்டும் ரெம்போ சுளுவா உங்க அப்பா வெச்ச எக்ஸாம்லோ பாஸ் பண்ணி பழம் கெலிச்சுட்ட?  .. அத்தயே நான் பண்ணுனா பிட் அடிக்கரேன்னு வெளிய தொரத்துறாங்க.. இன்னா நியாயமப்பா இது'  என்று எப்படி சொனாலும் அவருக்கு புரியும். 

கோவிலுக்கு போவதே மன திருப்திக்குத்தான் . அங்கு போயும் அர்ச்சனை பண்ண முடியவில்லை , அபிஷேகம் பார்க்க முடியவில்லை என்று புலம்பினால் கடவுளையும் கோவில் கட்டிய உண்மையான காரணத்தையும்  புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம் 

அடுத்த நிகழ்வு : எனக்கு அதிக பணம் கொடுத்து சிறப்பு தரிசனம் செய்வதில் உடன்பாடு இல்லை .ஒன்று பொது தரிசனத்தில் போவேன் . கூட்டமாக இருந்தால் கோபுர தரிசனம் மட்டுமே. கோவில் என்பது சமத்துவமாக இருக்க வேண்டும். அங்கும் பணம் சார்ந்த  இத்தனை பிரிவுகள் இருந்தால் , மறைமுகமாக அங்கு ஒரு ஏற்றத்தாழ்வு வருகிறது.  முன்னூறு ருபாய் டிக்கெட்டில் போகும் பக்தர்கள் , பொது தரிசனத்தில் வருவோர் முன் அர்ச்சகர்களால் பணிவுடன் கவனிக்கபடுவது கண்டிக்க வேண்டிய மிகபெரிய தவறு. 




கோவிலில் மற்றவரை பார்த்து வணங்ககூடாது என்ற சடங்கு முட்டாள்தனம் அல்ல . கோவிலில் வணங்கத்தக்கவன் இறைவன் மட்டுமே என்பதை உணர்த்தவே அது. அங்கும் வி.ஐ.பி தரிசனம் என்று கருவறை வரை சிலரை அனுமதிப்பதும் , பலரை காக்க வைப்பதும் மக்களை அவமானப்படுத்துகிறதோ    இல்லையோ கலியுகத்தில் மௌன விரதம் கடைபிடிக்கும் கடவுளின் பொறுமையை சோதிக்கிறது.

கேள்வி: ஆணவத்தையும் , அகங்காரத்தையும் மறந்து நமக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்று நினைக்கவே கோவிலுக்கு போகிறோம். அங்கும் சிறப்பு தரிசனத்தில் போய் , பொது தரிசன பக்தர்கள் கூட்டம் தனக்கு முன்னால் செல்வதைக்கண்டு ' தேவஸ்தானத்திற்கு மானேஜ் செய்யவே தெரியல .. அவங்கள முன்னால விட்டா நமக்கு என்ன மரியாதை ?'  என்று தன் வரட்டுத்திமிரை காட்டுவோரை பக்தர் என்று கடவுள் ஏற்றுக்கொள்வாரா? 

நிகழ்வு: விரதம் என்பதை கடுமையாக இருத்தல் என்று தவறாக அர்த்தம் செய்து பட்டினி கிடந்து உருகி மயங்கி தன உடல்நிலையை கெடுத்துக்கொண்டு கடைசியில் கடவுளை திட்டும் புண்ணியவான்கள் மிக அதிகம்.

 உதாரணமாக சபரிமலை விரதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் உண்டு . காட்டில் நட , கல் மண்ணில் வெறுங்காலில் நடந்தால் 'Accupressure' முறையால் தசைகளின் நரம்புகள் அழுத்தப்பட்டு உடல் ஆரோக்கியம் அடையும் . ஒரு வேலை மட்டும் உண் - வருடம் முழுக்க உடலில் ஏற்பட்ட  சில கோளாறுகள் தானாகவே சரியாகும். குளிர்ந்த நீரில் நீராடு - உடல் சூடும் தணியும் , தியானம் செய்ய உடல் ஒத்துழைக்கும் என்பதே அவற்றின் நோக்கம்.   

கேள்வி : கால்வலி இருக்கும்போது கண்டிப்பாக வெறுங்காலில் நடக்கவும் , அல்சர் இருக்கும்போதும் ஒரு வேலை மட்டும் உண்ண வேண்டும் என்பதும் , காய்ச்சல் அடிக்கும்போதும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்றும் அந்த விரதங்கள் போதிப்பதில்லை . அதை செய்து விட்டு , கடவுள் வருவார் ,'பக்தா .. உன் பக்தியை மெச்சினேன் . வேண்டும் வரம் கேள் ' என்று கேட்பார் என்று நினைத்து ஏதும் கிடைக்காமல் கடவுளைத் திட்டினால் கடவுள் உங்களை மதிக்க கூட மாட்டார். 

எல்லாவற்றிற்கும் மேலாக வரிசையில் ஒரு ஒழுங்கு இல்லாமல் , கடவுளை இவனுக்கு முன்னால் நான் தரிசிக்கவேண்டும் என்று அடித்து பிடித்து மற்றவரைத் தள்ளிவிட்டு கடவுளை கை எடுத்து கும்பிட்டால் பாவம் தீராது. 



கடவுள் நல்லவர்தான். என்றாவது ஒரு நாள் உண்மையிலேயே பக்குவப்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று ஆசைப்பட்டு காத்துகொண்டிருகிறார். பாவம் அவருக்கு அந்த பக்தரின் தரிசனம் கிடைக்காமலேயே இருக்கிறது. 

என்னை பொறுத்தவரை , இப்படி ஒரு முரட்டுத்தனமான , சுயநலமான , சடங்குளை வெறும் சடங்குகளாக அர்த்தம் புரியாமல் கடைப்பிடிக்கும் பக்தர்களை விட , கடவுள் இல்லை என்று ஒதுங்கி இருக்கும் நாத்திகர்கள் சீக்கிரம் சொர்க்கம் அடைவார்கள். இவர்கள் ? 

அது சரி , பகலிலேயே சுட்டெரிக்கும் வெயிலில் அருந்ததி நட்சத்திரம் பார்க்கும் புத்திசாலிகளுக்கும் ,கோவிலில் குங்குமத்தையும் திருநீறையும் சுவரில் கொட்டுவோருக்கும் கடவுள் மன்னித்து சொர்க்கக் கதவை திறந்தால் அங்கும் முண்டியடித்து நெரிசலில் பலபேரை எமலோகம் அனுப்புவார்கள். 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..  

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..