Monday, November 28, 2011

லட்ச தீபப் பெருவிழா

திருமழிசை ஒத்தாண்டீஸ்வரர் திருக்கோவில்

ஒத்தாண்டீஸ்வரர் ஆலய இராஜ கோபுரம்
மின்விளக்கொளியில் மின்னும் அழகு

சென்னை பூந்தமல்லிக்கு அருகில் உள்ள திருமழிசையில் அமைந்துள்ளது இச்சிவஸ்தலம்.

ஐயன் - சோழ மன்னனுக்கு கை தந்த ஒத்தாண்டீஸ்வரர்

அம்மை - சீதளா தேவி என்னும் குளிர்ந்த நாயகி.

சிறப்பு: அறியாமல் தன்னை வாளால் வெட்டிய கரிகால் சோழன் தன் கையை வெட்டிக் கொள்ள அதை திருப்பித்தந்த மாப்பெரும் கருணை வள்ளல் பெருமான். இத்தலத்தில் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டிய ஸ்தலம்.

கல்யாண சுந்தரர் ரிஷப வாகனத்தின் மேல் சாய்ந்த கோலத்தில் அம்மையுடன் அற்புதமாக தரிசனம் தந்து அருள் பாலிக்கின்றார். அம்மையப்பரின் அழகைக் காணக் கண்கோடி வேண்டும்.


சோமாஸ்கந்தர் அருட்காட்சி

கார்த்திகை மாதம் மூன்றாவது வாரம் இலட்ச தீப பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. காலையில் சங்காபிஷேகம், மாலையில் இலட்ச தீப பெருவிழா, இரவு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா.

அருளும் அன்னை குளிர்ந்த நாயகி

இந்த வருடம் (2009) 11வது வருட இலட்சதீபப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. சுற்று வட்டார கிராம மக்கள் எல்லாரும் மிக உற்சாகமாக கலந்து கொண்டு கோலமிட்டு, தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தார்கள்.


சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ தனயை பார்வதி தேவியின் திருமுக மண்டல தரிசனம் பாவ விமோசனம்

கருவறையிலும் அம்பிகைக்கும், சிவ பெருமானுக்கும் அற்புதமாக மலர் அலங்காரம் செய்திருந்தார்கள். மிகவும் அருமையான தரிசனம் கிட்டியது அம்மையப்பர் அருளினால்.

வள்ளி தேவாசேனா சமேத திருமுருகன்

வாண வேடிக்கைகள் எல்லார் மனதையும் கவர்ந்தது. இன்னிசைக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.சுவரெங்கும் தரையெங்கும் தீப ஜோதி

கோவிலெங்கும் மரத்தினால் அடுக்கு அடுக்காக அகல் விளக்கு ஏற்ற மதில் சுவரை ஒட்டி அற்புதமாக சாரங்கள் இரு பக்கமும் கட்டப்பட்டிருந்தன. அவற்றில் பெரிய விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன, திருக்கோவிலின் மேலும் அகல் விளக்குகள் ஜொலித்துக் கொண்டு இருந்தன. அற்புத ஜோதி தரிசனம்.கோலம் அழகா, தீபங்கள் அழகா

சுவரோரம் மட்டுமல்ல தரையெங்கும் அற்புத கோலங்கள் அதில் அகல் விளக்குகள் அற்புதமாக ஜொலித்தன. பக்தர்கள் அனைவரும் முழு மனதுடன் தீபங்கள் இடை விடாமல் எரிய வைத்துக் கொண்டிருந்தனர்.


தேர்க் கோலத்தில் தீப ஜோதி

சுவரையொட்டி அகல் விளக்குகள்

பூக்கோலத்தில் ஜோதி ரூபன்

மலர் அலங்காரம், அற்புத கோலத்தில் அழகு விளக்குகள் தரையெங்கும் பரந்திருந்தன.

( படத்தை கிளிக்கினால் பெரிதாகக் காணலாம்)

தீப வடிவில் தீபங்கள்


விமான தரிசனம்

ஒத்தாண்டீஸ்வரரின் தூங்காணை மாடவிமானம்( கஜ ப்ருஷ்டவிமானம்), மாப்பிளை சுவாமி விமானம்( ஒற்றை கலசம்), நடராசர் விமானம்( நடுவில் உள்ளது.( மூன்று கலசங்கள்) மற்றும் இடப்புறம் அம்மன் விமானம் தரிசனம். இப்படத்தில் துவார கணபதி சன்னதி மின் விளக்கு ஒளியில் ஒளிர்வதையும் காணலாம். தெற்கு வாயிலின் முகப்பில் இத்தல ஐதீகங்களான சோழ மன்னன் சரிதையையும், அகத்தியருக்கு கல்யாணக் கோலம் காட்டியதையும் சுதை சிற்பங்களாக தரிசிக்கலாம். இராஜ கோபுரத்தின் வலப்புறத்திலும் இவ்விரு சுதை சிற்பங்களையும் தரிசிக்கலாம்.

அலங்கார மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் அருட்காட்சி

இத்தலத்தில் பெரு விழா பங்குனி உத்திரத்தை ஒட்டி பத்து நாள் விழாவாக, அதிகார நந்தி சேவை, ரிஷப சேவை, தேரோட்டம், திருக்கல்யாணம் என்று சிறப்பாக நடைபெறுகின்றது. காலையும் மாலையும் திருவீதி உலா நடைபெறுகின்றது.திருக்கோவில் மட்டுமல்ல திருக்குளமும் அகல் விளக்குகளால் மிளிர்ந்தது. சிவ சிவ என்னும் மந்திரமும், ஓம் என்னும் பிரணவமும், முருகன் சக்தி வேலும் திருக்குளத்து நீரில் பிரதிபலிக்கும் அழகை எப்படி வர்ணிப்பது. நேரில் பார்க்கின்றீர்கள் அல்லவா?

இரு பக்கக் கரை மட்டும் திருக்குளத்தின் நடுவில் விளக்குகள் ஒளிரும் அழகு.

என்னங்க எப்படி இருந்து இலட்சதீப தரிசனம் மனம் நிறைந்ததா? இந்தாவாரம் இரண்டாவது கார்த்திகை சோமவாரம் அடுத்த வாரம் ( 05-12-2011) அன்று மூன்றாவது சோமவாரம் முடிந்தவர்கள் சென்று தரிசனம் செய்யவும்

தீப மங்கள ஜோதி நமோ நம!
தூய அம்பல லீலா நமோ நம!

9 comments:

வல்லிசிம்ஹன் said...

நானும் இந்தக் கோவிலுக்குப் போயிருக்கிறேன். வெறும் நாளிலேயே கோவில் சுத்தமாகப் பராமரிக்கப் பட்டிருக்கும். படங்களும் தீபங்களும் அற்புதம்.

காட்டான் said...

வணக்கம்!
நானும் இந்தியாவில் எத்தனையோ கோவில் பார்த்திருக்கிறேன்.. இப்படி சுத்தமாக வைத்திருப்பதை பார்ததில்லை..

படங்கள் அருமை... நீங்க எடுத்த படங்களா?

பகிர்வுக்கு நன்றி..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

திருவள்ளூர் அருகில் தான் இந்த கோயில் உள்ளது...


தொகுப்பு வாழ்த்துக்கள்...

Kailashi said...

சென்னையின் அருகில் அமைந்திருந்தாலும் கூட்டம் அதிகமாக இருக்காது. இந்த ஆலயத்திர்கு சென்றாலே மனதில் ஒரு நிம்மதி தோன்றும். அதுவும் இத்தலத்தில் உள்ள கல்யாண சுந்தரர் மூர்த்தம் மிகவும் எழிலானது மறுபடியும் மறுபடியும் தரிசிக்க அழைக்கும் மூர்த்தம். நன்றி வல்லியம்மா.

Kailashi said...

வாருங்கள் காட்டான் தங்கள் படம் சூப்பராக உள்ளதே.

இப்படங்கள் எல்லாம் அடியேன் எடுத்த படங்கள்தான் இது போல இன்னும் பல படங்களை காண வேண்டுமென்றால் அடியேனது வலைப்பூவிற்கு <a href ="http://natarajar.blogspot.com> நடராஜர்</a>செல்லுங்கள்.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றீ

Kailashi said...

வாருங்கள் சௌந்தர்,

ஆம் சென்னையில் இருந்து திருவள்ளுர், திருத்தணி, திருப்பதி செல்லும் வழியில் பூவிருந்தவல்லி தாண்டி வலப்புறம் திரும்பியவுடன் இத்தலம் உங்களுக்கு கிட்டும்.

எப்படி இவ்வளவு பதிவுகளை பின் தொடர முடிகிறது ஐயா.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். படங்கள் அருமையோ அருமை. தங்களின் பல பதிவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி சகோதரி!

நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

Kailashi said...

வாருங்கள் திண்டுக்கல் தன்பாலன். வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் வலைப்பூவைப் பார்த்தேன் அருமை திருக்குறள் கருத்துக்கள் பதிவுகள் முழுதும் நிரவிக்கிடக்கின்றன. வளருங்கள் வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

"லட்ச தீபப் பெருவிழா" அமர்க்களமாய் பகிர்ந்து கண்களுக்கு விருந்ததளித்தமைக்கு நிறைவான நன்றிகள் ஐயா..