Friday, December 2, 2011

ஜோதி வடிவான மலை

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி

அண்ணாமலையானுக்கு அரோகரா!

பன்றித்திருவுருவம் காணாத பாதங்கள்
நின்றவா நின்ற நிலை போற்றி அன்றியும்
புண்டரீகத்து உள்ளிருந்த புத்தேள் கழுகு  உருவாய்
அண்டர் அண்டம் ஊடுருவ ஆங்கு ஓடிப்
பண்டு ஒரு நாள் காணான்


திருக்கார்த்திகைத் திருநாளின் மூன்றாம் திருநாளான இன்று திருவண்ணாமலைதலத்தை வலம்வரலாமா அன்பர்களே. வாருங்கள் அடியேனுடன்.


முக்திபுரி, தென் கயிலாயம், சிவத்தலம், தலேச்சுரம், சிவலோகம், சோணாத்ரி, ,  சோணாச்சலம், சோணகிரி என்று பல்வேறு பெயர்களினால் அழைக்கப்படுகின்றது இத்தலம்அருணன்  என்றால் சிவப்பு, செந்தழல் மேனியனான சிவபெருமானே மலையாக நின்றதால் இத்தலம் அருணாச்சலம், அருணகிரி, அருணாக்கை, திருவருனை என்றும் , மேலும்  அனற்கிரி, அண்ணல் மலை, அண்ணாமலை, ஞான நகரம், சுத்த நகரம், கௌரி நகரம்அண்ணாத்தூர்,   என பல் வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது கவலை தீர்க்கும் திருவண்ணாமலை.
அண்ணாமலையார், அருணாசலேஸ்வரர்திருவண்ணாமலை மஹாதேவர், ஆண்டவர், ஆழ்வார் நாட்டுடையார், சோணாச்சலர், திருவண்ணாமலை ஆண்டார், உடையார், பரிமள வசந்தராயர் என்றும் வணங்கப்படுகிறார். அம்மை உண்ணாமலையம்மன், உலகுடைய பெருமாட்டி, நம்பிராட்டி,  சமஸ்கிருதித்தில் அபீத குஜாம்பாள் என்றும் அழைக்கப்படுகின்றாள். அம்மையைப் பற்றியும் பல பாடல்கள் பாடப்பட்டுள்ளன.

தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றை செழுந்தாராய்
வானைக்காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே
ஆனைக்காவில் அரனே பரனே அண்ணாமலையானே
ஊனைக்காவல் வைவிட்டு உன்னை உகப்பார் உணர்வாரே

என்று  எம்பிரான் தோழர் சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடிப்பரவிய அண்ணாமலையார் ஆலயம் தமிழகத்தின் பெரிய ஆலயங்களுள்  ஒன்று. 24 ஏக்கர் பரப்பளவில் சோழ, பாண்டிய, பல்லவ, விஜய நகர,    ஹொய்சால  மன்னர்கள் திருப்பணி செய்த  6 பிரகாரங்கள், 9 கோபுரங்கள், 56 திருச்சுற்றுக்கள், சிவகங்கை பிரம்ம தீர்த்தம் என்னும் இரண்டு பெருங்குளங்கள், ஆறு மண்டபங்கள் உள்ள தலம். 140 சன்னதிகளை தன்னிடத்திலே கொண்ட தலம். இத்தலம் முழுவதும் 360 தீர்த்தங்கள் உள்ளன,  மலையில் அக்னி தீர்த்தம் மற்றும் இந்திர தீர்த்தம்  சிறப்பானவை. ஒவ்வொரு கோபுரத்திற்குமாக  ஒரு தனி வரலாறு உண்டு. நான்கு திசை வாயில்களுக்கு நான்கு கோபுரங்கள், உட் பிரகாரத்தில் நான்கு கோபுரங்கள் சுவாமி சன்னதியில் ஒரு கோபுரம் என ஒன்பது கோபுரங்களுடன் எழிலாக காட்சி தருகின்றது இத்திருக்கோவில். கார்த்திகை திருவிழாவின் போது மின் விளக்கு ஒளியில் இரவில் இந்த கோபுரங்கள் ஒளிரும் அழகை விவரிக்க வார்த்தைகளே இல்லை
  
மின்விளக்கு ஒளியில் மிளிரும் திருவண்ணாமலை
வெளிப்பிரகாரமான   ஆறாவது பிரகாரத்திலிருந்து துவங்குவோமா?  வெளிப்பிரகாரத்தில். தமிழகத்தில் திருவரங்க கோபுரத்திற்கு அடுத்த உயரமான கோபுரம்  கிழக்கில் உள்ள 217 அடி உயர  11 நிலை திருவண்ணாமலை இராஜ கோபுரம் , இதை கிருஷ்ண தேவராயர் திருப்பணி என்று கூறுவர்மற்றும்  தெற்கில் திருமஞ்சன கோபுரம், மேற்கில்  பேய் கோபுரம், பேய் கோபுரம் அருகில் அண்ணாமலையார் பாத சன்னிதி உள்ளது. இந்த பாதத்திற்கு  தினமும் மூலஸ்தனத்தில் நடைபெறுவது போல பூஜைகள் நடைபெறுகின்றன. பாத தரிசனம் பாவ விமோசனம் என்றபடி கோவிலுக்கு  செல்லும் பக்தர்கள் மூலவரை தரிசித்த பின் பாத தரிசனம் செய்வது நன்று. வடக்கில் அம்மணி அம்மாள் கோபுரம் ஆகியவை ஆறாம் பிரகாரத்திற்கும் ஐந்தாம் பிரகாரத்திற்கும் இடையில் அமைந்துள்ளன.

 
தினமும் காலையில் எம்பெருமானின் திருமஞ்சனத்திற்கு கங்கை தீர்த்தம் யானையின் மேல் திருமஞ்சன கோபுரத்தின் வழியாக கொண்டு வரப்படுகிறது. மேலும்  ஆனித் திருமஞ்சனம் மற்றும்  ஆருத்ரா தரிசனத்தன்று ஆடல் வல்லானும் அம்மை சிவகாம சுந்தரியும் அபிஷேகம் கண்டருளும் எழில்மிகு ஆயிரங்கால் மண்டபம்இம்மண்டபத்தில் தான் இரமண மகரிஷிகள் பல ஆண்டுகள் தவம் செய்த பாதாள லிங்கேஸ்வரர் சன்னதியும் உள்ளது. ஆணவம் கொண்ட சம்பந்தாண்டன் ஆணவத்தை அடக்க முருகப்பெருமான் அருணகிரி நாதருக்காக கம்பத்தில் தோன்றிய கம்பத்து இளையனார் சன்னதி மற்றும் சிவகங்கைக் குளம், பெரிய நந்தி, வன்னி மரத்து வினாயகர் சன்னதி, சிவ கங்கை வினாயகர் சன்னதி, அருணகிரி நாதர் மண்டபம், கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி  ஆகியவையும் இந்த ஆறாம் மற்றும் ஐந்தாம் பிரகாரத்திற்குள்   உள்ளன. 


விவேக சிந்தாமணியில்  அருணை கோபுரத்தில்  மேவும் கணபதியை   கைதொழுதக்கால்  கிடைக்கும் பலன்களைப் பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது,

அல்லல்போம்  வல்வினைபோம்  அன்னை  வயிற்றிற்பிறந்த
தொல்லைபோம்  போகாத்  துயரம்போம்நல்ல
குணமதிக  மாம்  அருணைக்  கோபுரத்துண்  மேவும்
கணபதியைக்  கைதொழுதக்கால்.வினாயகரின் ஆறு படை வீடுகளுள் ஒன்று திருவருணை செந்தூர வினாயகர்  மற்ற விநாயகரின் படை வீடுகள்,   விருத்தாசலம்  (ஆழத்து வினாயகர்), திருக்கடவூர் (கள்ள வாரணப் பிள்ளையார்), மதுரை    (முக்குறுணிப் பிள்ளையார்), திரு நாரையூர் ( பொல்லாப் பிள்ளையார்) மற்றும் காசி  (துண்டி வினாயகர்) ஆகியவை ஆகும்.    .

இப்பிரகாரத்திலும் நான்கு பக்கமும் நான்கு கோபுரங்கள் உள்ளன. கிழக்கு கோபுரம் வள்ளாள மகாராஜன் கோபுரம், கி.பி. 1318 க்கும் கி.பி 1343க்கும் இடையில்     ஹொய்சால மன்னனால் கட்டப்பட்டதுஇக்கோபுரம் சம்பந்தப்பட்ட இரு வரலாறுகள் உள்ளன. ஒன்று வல்லாள மகாராஜாவின் ஆணவம் அகற்றப்பட்டது. கோபுரத்தைக் கட்டிய பின் இராஜா மிகவும் அகந்தை கொண்டாம் எனவே எம்பெருமான் திருவிழாக்காலத்தில் இக்கோபுரம் வழியாக செல்ல மறுத்து விட்டார். பின் மனம் வருந்தி மன்னன் வேண்ட பத்தாம் நாள் அன்று மட்டும் செல்ல சம்மதித்தார். இரண்டாவது இக்கோபுரத்தில் இருந்து குதித்த அருணகிரி நாதரை காப்பாற்றி

ஏறு மயிலேறி விளையாடும் முகம் ஒன்று
      ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று
கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
      குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறுபடு சூரரை வதைத்த முகம் என்று
      வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
       ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

என்று திருப்புகழ் பாட வைத்தது இக்கோபுரத்தின் அருகில் தான். எனவே முருகன் கோபுரத்திளையனார் என்று வணங்கப்படுகின்றார். மற்ற மூன்று திசைகளிலும்  கட்டளை கோபுரங்கள் உள்ளன.

வள்ளாள கோபுரத்தைத் தாண்டினால் காலபைரவர் சன்னதி அருகில் பிரம்ம தீர்த்தம், அதற்கு வலப்புறத்தில் யானைகளை கட்டி வைக்கும் புரவி மண்டபம். வல்ளாள கோபுரத்திற்கும், கிளிக்கோபுரத்திற்கும் இடையில் மேலும்  சின்ன நந்தி, சக்தி விலாச சபா மண்டபம், கருணை இல்லம், மற்றும் பிரம்ம லிங்கேஸ்வரர் சன்னதி, வித்யாசுரேஸ்வரர் சன்னதி, வினை தீர்த்த விநாயகர் சன்னதி, நளேஸ்வரர் சன்னதியானைத்திறை கொண்ட விநாயகர் சன்னதிபிச்சை இளையனார் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன.


நான்காவது பிரகாரத்தில் ஒரு கோபுரம் கிழக்கு நோக்கிய கிளி கோபுரம். சம்பந்தாண்டன்சூழ்ச்சியால் பாரிஜாத மலர் கொண்டுவர கூடு விட்டு கூடு பாய்ந்து கிளி ரூபத்தில் சென்ற அருணகிரி நாதரின் மனித உடலை எரித்து விட கிளி ரூபமாக முருகனிடம் சேர்ந்த கோபுரம். அருணகிரி நாதர் கந்தரனுபூதி பாடிய கோபுரம் என்றும் கூறுவர். கிளிக் கோபுரத்திற்குள் நுழைந்தால் முதலில் தரிசனம் தருவது தீப தரிசன மண்டபம். இம்மண்டபம் பதினாறு கால் மண்டபம், பஞ்ச மூர்த்திகள் திருக்கார்த்திகையன்று தீப தரிசனத்திற்காக எழுந்தருளி அருள் பாலிக்கும் மண்டபம், இதற்கு எதிர்ப்புறம் கொடி மரம் மற்றும் பலி பீடம்கிளி கோபுரத்தின் இடப்புறம் பன்னீர் மண்டபமும் கோவில் மடப்பள்ளியும் உள்ளனஇப்பிரகாரத்தில் ஸ்தல விருட்சம் மகிழ மரம் உள்ளது. இம்மரத்தில் குழந்தை வரம் வேண்டுபவர்கள்   தொட்டில் கட்டி நேர்ந்து கொள்கின்றனர். மகிழ மரத்தினடியில் இருந்து பார்த்தால் ஒன்பது கோபுரங்களையும் ஒரு சேர காணலாம்  மற்றும் பங்குனி உத்திரத்தன்று அம்மையப்பர் திருக்கல்யாணமும், பிரம்மோற்சவத்தின் போது பஞ்ச மூர்த்திகள் அலங்காரம் கொண்டருளும் கல்யாண மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை உள்ளன.    வசந்த மண்டபத்தை சுற்றி மற்ற பஞ்ச பூத லிங்கங்களின்    ( சிதம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், காளத்தீஸ்வரர்) சன்னதிகளும்பிடாரி அம்மன் சன்னதியும் உள்ளன. பிடாரி அம்மன் முன் உள்ள கல் திரி சூலம்  வேறெங்கும் காண முடியாத ஒன்றாகும்.

2 comments:

வலிபோக்கன் said...

முதல்படத்தில் மதுரைதான் அழகாக தெரிகிறது.

Kailashi said...

மதுரையும் சிவஸ்தலம்தானே வலிப்போக்கன் ஐயா. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.