Wednesday, December 7, 2011

ஞான தபோவனரை வா என்று அழைக்கும் மலை

கண்ணார் அமுதனே போற்றி
திருவண்ணா மலையனே போற்றி போற்றி

காத்திகைதீபப் பெருவிழாவின் ஆறாம் நாளாகிய அன்று திருவண்ணாமலையார்  காலை வெள்ளி யானை வாகனத்தில் அறுபத்து மூவருக்கு அருளுகின்றார். இந்த இனியநாளில் மாணிக்கவாசகரின் திருச்சாழல் பதிகத்தின் ஒரு பாடலைஅனுபவித்து விட்டு கிரிவலத்தை தொடரலாமா அன்பர்களே.

அலரவனும் , மாலவனும், அறியாமே அழல் உருவாய்
நிலம்முதல், கீழ் அண்டம்உற, நின்றதுதான், என்னேடீ!
நிலம்முதல், கீழ் அண்டம்உற, நின்றிலனேல், இருவரும்தம்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார், காண்; சாழலோ!

இச்சாழல் பதிகம் தில்லையில் மாணிக்க வாசகர் அருளியது, ஊமையாக இருந்த புத்த கொல்லி மழவன் மகளை இப்பதிகம் பாடி மாணிக்கவசகர் பேச வைத்து அவனை சைவனாக்கிய அற்புதப் பதிகம்.  

பொருள்: ஏடீ,  தோழி! உன் தலைவன் நான்முகனும் திருமாலும் அறியாமல் மயங்க, அக்னி சொரூபமாலி, பாதாளம் முதல் ஆகாயம் பொருந்தும்படி நின்றதற்கு காரணம் என்ன? எனத் தோழி( கொல்லி மழவன் பாவை) தலைமகளை( மணிவாசகரை) இயற்பழித்துக் கேட்க, ’ நில முதலாய மேல் அண்டங்களிலும் அதன் கீழ் அண்டங்களிலும் பொருந்த அங்ஙனம் அவர் நில்லாமற் போயிருந்தால் நான்முகன், திருமால் இருவரும் தமக்குள்ள வஞ்சனையால்    அகங்காரத்தை விடார், சாழலோ! என தலைமகள் தோழிக்கு  இயற்பட மொழிந்தாள்.

  இதற்கு முந்தைய கிரிவலப் பதிவை படிக்க இங்கே செல்லவும்
நினைக்க முக்தி தரும் மலை
வெள்ளி இரதத்தில் வேழ முகத்தான்

அருணாசலேஸ்வரர் திருக்கோவிலின் வாசலில் தொடங்கி  மீண்டும் அங்கேயே வந்து  கிரி வலத்தை முடிக்க வேண்டும் என்பது நியதி. எங்கிருந்தும் தொடங்கலாம்  ஆனால் எந்த இடத்தில் இருந்து ஆரம்பிக்கின்றோமோ அந்த இடத்தில் வந்து முடிப்பது நல்லது. பாதியில் நிறுத்தி விட்டு செல்வதை தவிர்க்கவும். கருணையே வடிவமான  மலையை இற்றை நாளில்  முழு நிலா நாளான பௌர்ணமி தோறும் வலம் வருதல்   புதுப்பெருமை பெற்றதல்ல சிவப்பிரகாசர் அற்றை நாளில் மலை வலம் வருவதற்காகவே சோண சைல மாலையைப் பாடியுள்ளார். அப்பாடல்களை  பாடிய வண்ணம் கிரி வலம் வருவது பெரும் பயனை நல்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு முறை கிரி வலம் வந்தால் சம்சாரக் கடலைக் கடக்கும் தோணியாக அமையும்

 ஒருவன் எவ்வளவு  பெரிய பாவத்தை   செய்திருந்தாலும் தீப நாளில் ஐந்து முறை சுற்றினால் பாவ விமோசனம் உண்டு. திருவண்ணாமலையை வலம் வந்த ஒருவர் இறந்து போனால் அவர் கைலாயத்தில் நுழையும் போது சந்திரன் வெள்ளைக் குடை பிடிப்பான் என்றும் சூரியன் கையில் விளக்கேந்தி வருவான் என்றும் இந்திரன் மலர் தூவுவான் என்றும், குபேரன் தண்டனிட்டு பணிந்து வரவேற்பான் என்றும் அருணாசல தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார்

அடியேனுக்கு  சித்ரா பௌர்ணமியண்று கிரி வலம்  செய்யும் வாய்ப்பை   பெருமான் அளித்தார். அந்த ஆனந்த அற்புத அனுபவத்தை எழுத வார்த்தைகளே இல்லை, இலட்சக்கணக்கில் மக்கள் கூட்டம், எள் போட்டால் எள் விழாது என்பது போல கிரி வலப் பாதையெங்கும் மக்கள் வெள்ளம், இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கோடு தோத்திரம் இயம்பினர் ஒருபால், துன்னிய பிணை மலர் கையினர் ஒருபால், தொழுகையர். அழுகையர் துவள்கையர் ஒரு பால் என்று மாணிக்க வாசகர் திருப்பள்ளியெழுச்சியிலே பாடியது போல, ஆணும் , பெண்ணும், குழந்தைகளும், முதியவர்களும், ஏன் கர்ப்பிணி பெண்களும் கூட சிரத்தையுடன் கிரி வலம் வரும் அந்த அண்ணாமலையாரின் மகிமையை என்னவென்று சொல்வது
  மாலை மயங்கும் நேரத்தில் எழில் கொஞ்சும் அண்ணாமலை 
இம்மலையை கிழக்கு திசையில் இருந்து பார்த்தால்  ஒன்றாகத் தெரியும்இது ஏகத்தை குறிக்கின்றது. மலையை சுற்றும் வழியில்  இரண்டாகத்தெரியும் இது அர்த்த நாரீசுவரரைக் குறிக்கின்றது. மலையின் பின்னால் மேற்கு  திசையில் பார்த்தால் மூன்றாகத் தெரியும் இது மும்மூர்த்திகளின் வடிவம்கிரி வலத்தை முடிக்கும் போது ஐந்தாகத் தெரியும் இது ஐயனின் ஐந்து முகங்களைக் குறிக்கின்றது. இவ்வாறு ஒவ்வொரு பக்கத்தில் இருந்து பார்த்தால் வேறு வேறு விதமாக காட்சியளிக்கும் திருக்கயிலை மலை போலவே காட்சி தருகின்றது திருவண்ணாமலை
 
 கிரி வலம் வர சில உபயோகமான குறிப்புகள் கிரிவலம் செல்லும் போது நீராடி திருநீறணிந்து  காலில் காலணி அணியாமல் கிரிவலம் செய்வதுதான் உத்தமமானது. கூட்டம் மிகவும் அதிகம் என்பதால் கவனமுடன் செல்லவும்தனியாளாக  செல்லாமல் குழுவாக செல்லவும், குறிப்பாக இராகவேந்திர மடத்தின் அருகில் பாதை குறுகி இருப்பதால் கூட்ட  நெரிசல் அந்த இடத்தில் கடுமையாக இருக்கும் பார்த்து         செல்லவும்அஷ்ட லிங்கங்கலின் அருகிலும் நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் அவ்விடங்களில் கவனமாக செல்லவும்மலையை ஒட்டிய பக்கம்   செல்லாது இடது பக்கமாக செல்லவும். மலையின் பக்கம் தேவர்களும் சித்தர்களும் சூஷ்ம ரூபத்தில் வலம் வருவதால் இடப்பக்கமாக கிரி வலம் செய்வது நல்லது, அவர்கள் நமது மனதில் உள்ளதை  இறைவனிடம்      கொண்டு சேர்ப்பார்களாம் எனவே நல்லதையே மனதில் நினைத்து கிரி வலம் வரவும். முடிந்த வரை "அண்ணாமலையானுக்கு அரோகரா" என்றோ "ஓம் நமசிவாய" என்றோ ஜபித்துக் கொண்டு  அல்லது தேவார, திருவாசக, சிவ ஸ்துதிகளை ஓதிக் கொண்டு மலை வலம் வரவும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது மலையைப் பார்த்து வணங்கி வேறு திசை நோக்கி பார்க்காது முழுமதியை பார்த்து வணங்கவும்.   மெதுவாக கிரிவலம்      செய்வதால் மூலிகைக் காற்று நம் மீது படுவதால் நன்மை அதிகம்கிரிவலத்தை ஒரு தியானமாக நிதானமாக செய்வதும், கிரிவலப்பாதையில் உள்ள சன்னதிகளுக்கு சென்று வணங்குவதும் சிறப்பு. செங்கம் சாலைக்கருகில் உள்ள நந்திகேஸ்வரரை வணங்குவதும் சிறப்புஇனி கிரி வலம் செய்யும் நாளும் அதனால் ஏற்படும் நன்மை என்ன என்பதையும் பார்ப்போமா?

கற்பக விருக்ஷ வாகனத்தில் எழில் குமரன்

 
ஞாயிறன்று கிரி வலம் செய்தால் சிவ பதம் நல்கும்.
திங்களன்று கிரி வலம் செய்தால் உலகை ஆளக்கூடிய வல்லமை உண்டாகும்.
செவ்வாயன்று கிரி வலம் செய்தால் ஏழ்மை நீங்கும்கடன் அகலும், சுபிட்சம் உண்டாகும், பிறவிப்பிணியிலிருந்து விடுதலை.
புதனன்று கிரி வலம் செய்தால் கலைகளில் தேர்ச்சி அடைவர்.
வியாழனன்று கிரி வலம் செய்ய  ஞானிகளுக்கு ஒப்பாவர்.
வெள்ளியன்று கிரி வலம் செய்ய விஷ்ணுபதம் நல்கும்.
சனியன்று கிரி வலம் செய்ய நவக்கிரக வழிபாட்டுப்பலன் கிட்டும்.

கிரிவலம் செய்யும் போது அந்த நாளுக்குரிய ஆடை அணிந்து அல்லது ஆடை தானம்  செய்வது சிறந்த பலனைத் தரும்.
ஞாயிறு- ஆரஞ்சு
திங்கள் -வெள்ளை,
செவ்வாய் - சிவப்பு,
புதன் - பச்சை
வியாழன் - மஞ்சள்
வெள்ளி - வெளிர் நீலம்,
சனி - கரு நீலம் அல்லது கறுப்பு நிற ஆடைகள் அணிவது நல்லது. திருக்கார்த்திகைப்பெருவிழா

தீப திருநாளன்று ஐந்து முறை  கிரிவலம் வருவது  கொடிய பாவங்களை தீர்க்கும் என்று சேஷாத்ரி சுவாமிகள் கூறுகிறார். அதிகாலை 3 மணி பரணி தீப சமயத்தில் முதல் கிரி வலமும், காலைமணி அளவில் இரண்டாவது கிரிவலமும்காலை 11 மணி அளவில் மூன்றாவது முறையும், மாலை ஆறு மணி அளவில் தீப தரிசன சமயத்தில் நான்காவது  கிரி வலமும், இரவு 11 மணி அளவில் ஐந்தாவது கிரி வலமும் வருவது நல்லதுஇனி இத்திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களைப்பற்றியும் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பையும் அடுத்த பதிவில் பார்ப்போம்  அன்பர்களே..

No comments: