Sunday, February 19, 2012

மஹா சிவராத்திரி

 உ
ஓம் நமசிவாய விரி கடலும், மண்ணும், விண்ணும், மிகு தீயும், புனல், காற்றாகி எட்டு திசையான சங்க வெண்குழைக் காதுடை செம்பவள மேனி எம் இறைவன் சிவ பரம் பொருளுக்கு மிகவும் உகந்த அஷ்ட மஹா விரதங்களாக ஸ்கந்த புராணம் கூறுபவை 1. சோம வார விரதம், 2.திருவாதிரை, 3.உமா மஹேஸ்வர விரதம், 4. மஹா சிவராத்திரி விரதம், 5.கேதார விரதம், 6. கல்யாண விரதம், 7. சூல விரதம் 8. ரிஷப விரதம், ஆகியவை ஆகும். இந்த விரதங்கள் அனைத்தும் நமது உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி இந்த சம்சார சாகரத்திலிருந்து நம்மை விடுவித்து அந்த இறைவனுடைய திருவடியில் சரணடைய உதவுகின்றன. இவற்றுள் மஹா சிவராத்திரியின் மேன்மையையும், அதைக் கொண்டாடுவதால் நாம் அடையும் பலன்களையும்   இந்த நன்னாளை ஒட்டி  திருவிழாக்கள் நடைபெரும் இரு அம்மன்களின்  வரலாறுகளையும்  பற்றிப்  பார்ப்போமா?

 
திருக்காளத்தி வாயு லிங்கம்

மஹா சிவராத்திரி நாள்: அகில உலகமும் பெருங் கடல் மூடிப் பிரளயம் ஏற்படும் ஊழிக் காலத்தில்  சகல ஜீ ராசிகளும் எம் ஐயனின் காலடியில் ஒதுங்குகின்றனஅப்போது கங்காளராய் எம் ஐயன் மீண்டும் படைப்புத் தொழிலைத் தொடங்க ஓம் என்னும் பிரணவத்தை நல் வீணையில் வாசித்துக் கொண்டு இருப்பார். இதை அப்பர் பெருமான் தம் பதிகத்தில் இவ்வாறு பாடுகின்றார்,
 
                        பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய்

                      இருங்கடல் மூடியிறக்கும் இறந்தான் கபேளரமும்

                        கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய்

                        வருங்கடல் மீளநின் றெம்மிறை நல் வீணை வாசிக்குமே!.

அம்மை சிவபூஜை செய்யும் அருட்காட்சி
  
 அந்த பிரளய காலத்தில் எம் அம்மை பார்வதி  உயிர்களுக்கு இரங்கி தவம் கிடந்து இறைவனை  பூஜை செய்த இரவே சிவராத்திரி ஆகும். பின்னர் படைப்பு தொடங்கிய பிறகு இந்நாளில் இறைவனை வணங்குபவர்களுக்கு இப்பிறப்பிலும் மறு பிறப்பிலும் எல்லா நன்மைகளையும் வழங்க வேண்டும் என்ற அம்மையின் வேண்டுகோளுக்கிணங்கி சிவ ராத்திரி நன்னாளில்  அவரை வழிபடுபவர்களுக்கு   இம்மையில் எல்லா சுகங்களையும் அளிப்பதுடன் வீடுப் பேற்றையும் அருளுகின்றார்.

 
அண்ணாமலை எம் அண்ணல்

ங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும் விஷ்ணுவும் சண்டையிட்டனர், அவர்களது கர்வத்தை அடக்க சிவ பெருமான் பெரிய நெருப்பு பிழம்பாய் நின்று அடியும் முடியும்  கண்டு பிடிக்குமாறு கூற இருவராலும் கண்டுபிடிக்க முடியாமற் போனது. இவ்வாறு எம்பெருமான் லிங்கோத்பவ மூர்த்தியாய் நின்ற நாள் திருக்கார்த்திகை ஆகும். பின் இருவரும்  சிவ லிங்க ரூபமாக அவரை வணங்காத தமது தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்ட, மஹா சிவராத்திரி நன்னாளில் எம்பெருமான்  லிங்க ரூபமாக தோன்றி இருவருக்கும் அருள் வழங்கின நாள் என்பதும் ஒரு ஐதீகம்


தேவி தவமிருந்து இடப்பாகம் பெற்ற நாள், அர்ச்சுனன் தவம் செய்து பாசுபதம்        பெற்ற நாள், கண்ணப்பர் கண்ணை அப்பி முக்தி பெற்ற நாள், பாகீரதன் தவம் செய்து கங்கையை நிலவுலகிற்கு  கொண்டு வந்த நாள், மார்க்கண்டேயரின் உயிரை     சிவபெருமான் எமனிடமிருந்து காப்பாற்றி சிரஞ்சீவிப் பட்டம் அருளிய  நாள் பீமன் தன் ஆணவம் அழிந்து ஞானம் பெற்ற நாள்  ஆதி சேஷன் தன் துன்பம் தீர சிவபெருமானை வழிபட்ட நாள்  என்று இந்நாளின் சிறப்புக்காக பல்வேறு ஐதீகங்கள் உள்ளன.


தியாகராஜ மூர்த்தி ஊஞ்சல் உற்சவம்

சிவராத்திரி  நித்யமாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி  என்று வருடம் முழுவதும் கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணம் கூறுகின்றது.
 

நித்ய சிவராத்திரி : தினம் தோறும் வரும் இரவு நித்ய சிவராத்திரி ஆகும்.

மாத சிவராத்திரிஒவ்வொரு மாதமும் வரும் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி மாத சிவராத்திரி  ஆகும்.

பக்ஷ சிவராத்திரி : மாசி மாதம் கிருஷ்ண பக்ஷ பிரதமை முதல்  சதுர்த்தசி வரை 13 நாட்கள்  பக்ஷ சிவராத்திரி ஆகும்.  

யோக சிவராத்திரி : திங்கட்கிழமையில் இரவு பகல் முழுவதும் அமாவாசை இருந்தால் அது யோக சிவராத்திரி ஆகும்.

மஹா சிவராத்திரி : மாசி மாதம் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி இரவு மஹா சிவராத்திரி.   
 
 இவற்றுள் மஹா சிவராத்திரி  விரதம் தான் வெகு சிறப்பாக பக்தர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

 
காரணீஸ்வரர்

 சிவராத்திரி விரத முறை : சிவராத்திரியன்று  அதிகாலை எழுந்திருந்து காலைக்கடன்களை முடித்து சிறப்பாக  வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவதும், நாவினுக்கருங்கலம் ஆனதும்பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை  நண்ணி நின்றருப்பதுமான இறைவனின் பஞ்சாட்சர மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். எதுவும் உண்ணுதல் கூடாது. ஆலயம் சென்று லிங்க மூர்த்தியையும் அம்பாளையும் தரிசித்து வரலாம். நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். பிறகு மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் இரவில் அபிஷேகப் பிரியரான  லிங்க மூர்த்திக்கு நான்கு ஜாமங்களிலும் அபிஷேகம் செய்து,

                       

                        த்ரிகுணம் த்குணாகாரம் த்ரி நேத்ரஞ்ச

                        த்ரயாயுஷ த்ரிஜன்ம  பாப சம்ஹாரம்

                        ஏகபில்வம் சிவார்ப்பணம்                              

    
என்றபடி  ஒரு வில்வத்தை லிங்க மூர்த்திக்கு அர்ப்பணம் செய்தாலே மூன்று ஜென்ம பாவங்களை அழிக்க வல்ல   மூன்று தளங்களைக் கொண்ட  வில்வத்தைக் கொண்டு  முக்கண்ணனான ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு  அர்ச்சனை செய்தல் வேண்டும்பாச பந்தத்தில் கட்டுண்டு உழலும் பசுக்களாகிய நம்மை உய்விக்க  எம்-பருமான் அரூப ரூபமாகிய லிங்க ரூபத்தில் தோன்றி அருள் பாலித்ததால் சிவராத்திரி இரவில் லிங்க மூர்த்திக்கு செய்யும் அபிஷேகமும் வில்வ தள அர்ச்சனையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
 
சிவ புராணத்தில் வில்வம், விபூதி -குங்குமம், நைவேத்யம்,தூபம், தீபம், தாம்பூலம் ஆகிய  ஆறு உபசாரங்காளை செய்து மஹா சிவராத்திரியன்று செய்து லிங்க மூர்த்தியை வழிபட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வில்வ இலையால் அர்ச்சனை - ஆத்ம சமர்ப்பணம் செய்வதை குறிக்கின்றது.
அபிஷேகத்திற்கு பிறகு விபூதி -குங்குமம் சார்த்தல்- நல்ல சுகமான  வாழ்வளிக்கும்.
நைவேத்யம் - நீண்ட ஆயுளைபெறுவர், விருப்பங்கள் நிறைவேறும்.
தூபம் - செல்வம் பெறுவர் .
தீபம்  - ஞானம் பெற்றுவர்.
தாம்பூலம் - நிம்மதியான வாழக்கை சித்திக்கும்.

 
 ஸ்படிக லிங்கம்

மஹா சிவராத்திரி இரவன்று  வெறுமனே கண் விழித்தல் என்பது சாஸ்திரத்தின் நோக்கம் அல்ல. அன்று இரவு முழுவதும் இறைவனின் நாமத்தை மனதில் கொண்டு வழிபட வேண்டும்  என்பதுதான் அதன் நோக்கம். இறைவனை நினைக்காமல் மற்ற கேளிக்கைகளில் ஈடுபட்டு கண் விழிப்பதால் புண்ணிய பலன் ஒன்றும் கிட்டாது. சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும். இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதமிருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாதரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்குச் செல்கிறோம்.

சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம், உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது எமது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது எமது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழிவகுக்கிறது.

 
சிவபெருமான்  சிவராத்திரியன்று
 வட நாட்டில் வணங்கும் கோலம்
சிவராத்திரி மூன்றாம் காலம் லிங்கோற்பவ காலம். நெருப்புத்தூண் மத்தியிலிருந்து  மான், மழு, அபய, வரத  ஹஸ்தங்களுடன் லிங்கமாக எம்பெருமான் தோன்றிய காலம். தினமும் அதிகாலை 3:30  முதல் 4:30 வரையான காலம் நித்ய லிங்கோற்ப்வ காலம் என்று அறியப்படுகின்றது. சிவராத்திரி அன்று மாலை நடராசர் மற்றும் பிரதோஷ நாயகரையும்முதல் காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தக்ஷிணாமூர்த்தியையும். மூன்றாம் காலத்தில் லிங்கோதபவரையும், நான்காம் காலத்தில் ரிஷபாரூடரான சந்திர சேகரையும் வணங்குவது வழக்கம்

  தென்னகத்திலே  திருக்கோவில்களிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்திகளுக்கு நாமே சென்று அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் வட நாட்டிலே எல்லா திருக்கோவில்களிலும் சிவராத்திரியன்று நாமே சென்று நம் கையால் நீராலோ, பாலாலோ லிங்க மூர்த்திக்கு அபிஷேகம் செய்ய முடியும்.
 

மஹா சிவராத்திரி விரதப்பலன்:     அம்மை வேண்டிக் கொண்டதற்கிணங்க நாம் மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தால் அந்த கயிலை நாதன் நமக்கு இம்மையில் நமது எல்லா தோஷங்களியும் நீக்கி, பய உணர்வை அகற்றி, தீராப் பிணிகளை தீர்த்து, மனக்கவலைகளை மாற்றி சகல மங்களங்களையும் வழங்குவதுடன் நமக்கு மறு பிறப்பு இல்லாமல் சிவகணங்களுள் ஒருவராகும் வாய்ப்பையும் வழங்குகிறார். எடுத்துக்காட்டாக புராணங்களில் கூறப்பட்டுள்ள ஒரு வேடனின் வரலாறு கூறப்பட்டுள்ளது.


  அடியேனின் பூஜா மூர்த்தி 

 முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் ஒரு வேடன் வாழ்ந்து வந்தான் ஒரு நாள் அவன் வேட்டை ஆடும் போது ஒரு புலி அவனை  துரத்தியது. புலியிடமிருந்து தப்பிக்க அவன் ஒரு மரத்தின் மேலே ஏறிக் கொண்டான். புலியும் மரத்தின் கீழே அவன் இறங்கி வந்தால் அவனைக் கொன்று புசிக்கலாம் என்று காத்துக் கொண்டிருந்ததுபகல் முழுவதும் இவ்வாறு அவன் ஒன்றும் சாப்பிடாமல் மரத்தின் மேலேயே இருந்தான். அந்தியும் ஆகியது புலியும் நகர வில்லை வேடனாலும் கீழே வர முடியவில்லை. இரவிலே  தூங்காமல் இருக்க மரத்தில் இருந்த இலைகளைப் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான். நடு நடுவே தன் குடுவையில் இருந்த தண்ணிரையும் கீழே ஊற்றிக் கொண்டிருந்தான். காலை புலர்ந்தது புலி ஓடி விட்டதுவேடனும் கீழிறங்கி வந்து தன் இருப்பிடன் சென்றான். அவன் அவ்வாறு அமர்ந்திருந்த மரத்தின் அடியில் ஒரு சிவ லிங்கம் இருந்ததாலும், அந்த மரம் வில்வ மரமாக இருந்ததாலும், அந்த  இரவு சிவராத்திரியாக இருந்ததாலும்  புலியின் பயத்தினாலேயே  வேடன் இவ்வாறு பகலில் உணவு உண்ணாமலும் இரவிலே  லிங்க மூர்த்திக்கு அபிஷேகமும்  வில்வ தளங்களால் அர்ச்சனை செய்ததால் வேடனுக்கு சிவராத்திரி விரதப் பலனைக்கொடுத்து  முக்தி கொடுத்தருளினார் எம்பெருமான்நாமும் து மனத்தோடு இந்த விரதத்தை மேற்கொண்டால் அந்த இறைவனது அருளைப் பெறலாமே.
 
வேடன் இவ்வாறு முக்தி பெற்ற ஐதீகம் நடைபெற்றதாகக் கூறப்படும்  தலங்கள்  திருவைகாவூர் மற்றும் பெரும் புலியூர் ஆகும் இத்தலங்களில் மஹா சிவராத்திரி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
 
இந்த வேடனின் கதையிலும் ஒரு உள்ளார்த்தம் உள்ளது. ஜீவான்மாக்களாகிய நாம் இந்த சம்சார மாயையில் அகப்பட்டு அலைகின்ற இந்த உலகமே ஒரு பெருங்காடு. அதில் நம்மிடம் உள்ள காம, குரோத, லோப, மத, மார்ச்சர்யங்கள் என்னும் துர்க்குணங்களே நம்மை துரத்தும் துஷ்ட மிருகங்கள், நாம் இந்த குணங்களை விடுத்து  ஜீவாத்மா ஆன்மீகத்தில் உயர்வதே மரத்தில் ஏறுவதால் குறிக்கப்பட்டது. மூவிதழ் வில்வம், இட, பிங்கள, சூஷ்ம நாடிகள், நமது முதுகுத்தண்டே சிவ பெருமான், குண்டலியை இதன் மூலம் உயர்த்தி சகஸ்ராரத்தில் உள்ள பரம் பொருளை அடைவதே மோட்சம். இரவு முழுவதும் விழித்திருப்பது  விவேகம் அல்லது பிரம்ம ஞானம், விரதம் இருப்பது ஆணவம், கன்மம், மாயையிலிருந்து விலகி தாமரை இலைத் தண்ணிர் போல யோக வாழ்க்கை வாழ்வது. விரதம் முடித்து காலை விடியல் மோட்சத்தை குறிக்கின்றது. இவ்வாறு  ஒவ்வொரு விரதமும் நமக்கு ஒரு தத்துவத்தை உணர்த்துகின்றது.


திருவைகாவூரில் வேதங்களே வில்வ மரமாக நின்று இறைவனை பூசித்தன. எனவே இத்தலம் வில்வவனேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகின்றது. சிவராத்திரி இரவில் நான்கு கால அபிஷேகம் ஆராதனை சிறப்பாக நடைபெறுகின்றது. அடுத்த நாள் அமாவாசையன்று பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு மற்றும் தீர்த்தவாரி. இத்தலத்தில் நந்தி இறைனைப் பாராமல் வாயிலை நோக்கி இருப்பது ஒரு சிறப்பு.   மஹா சிவராத்திரி 10 நாள் பெருவிழாவாக தேரோட்டத்துடன் நடைபெறும் மற்ற  தலங்கள்  ஸ்ரீ சைலம், ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ இராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீ கோகர்ணம் ஆகும்


   சிவராத்திரியுடன் தொடர்புடைய மற்றொரு ஐதீகம், ஆதி சேஷன்  எப்போதும் இந்த பூவுலகைச் சுமந்து கொண்டிருப்பதால் தன் பலமனைத்தையும் இழந்து தவித்த போது, ஒரு சிவராத்திரியில் முதல் ஜாமத்தில் திருக்குடந்தையில் (கும்பகோணம்)   நாகேஸ்வரரையும்இரண்டாம் ஜாமத்தில் சண்பகாரண்யம் எனப்படும் திருநாகேஸ்வரத்தில் நாக நாத சுவாமியையும், மூன்றாம் ஜாமத்தில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரத்தில் பாம்பீஸ்வரரையும், நான்காம் ஜாமத்தில் நாகூரிலே நாக நாதரையும் தரிசித்ததால் தான் இழந்த பலமனைத்தையும் பெற்றார் என்பதால் சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் உடலிலுள்ள எல்லா வியாதிகளும் நீங்கி சுகமாக வாழ்வர் என்பதும் சர்ப்ப தோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம்.

கோவிந்தா கோபாலா: பாண்டவர்களில் ஒருவரான பீமனுக்கு தன் வீரம் பற்றி  அகந்தை இருந்தது. அவனது அகந்தையை  அழிக்க விரும்பிய கிருஷ்ணன்ஒரு விசித்ர மிருகத்தை அனுப்பினார், சிங்க முகமும், யானையின் தும்பிக்கையும், நீண்ட உடலும் கொண்ட அந்த வித்தியாசமான புருஷா மிருகத்துடன் பீமன் முழு பலத்துடன் போரிட்டான். ஆனால் , அதன் தாக்குதலை சமாளிக்க முடியாமல், 'கோவிந்தா, கோபாலா' எனக் கதறிக்கொண்டே ஓடினான். இந்த இரவு சிவராத்திரி இரவு. இன்றும்  கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த கோவிந்தா கோபாலா ஓட்டம் நடைபெறுகின்றது.  

 இத்தகைய சிறப்புகளையுடைய மஹா சிவராத்திரி நன்னாளில் நாமும் விரதம் அனுஷ்டித்து  மாதொரு பாகனான எம் பெருமானின் அருளுக்கும், அம்மையின் அருளுக்கும் பாத்திரமாவோமாக.          

மஹா சிவராத்திரியன்று அம்மனின் திருவிழாக்கள்

எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி 
  நாட்டுக்கல் பாளையம் அங்காள பரமேஸ்வரி

மஹா சிவராத்திரி என்பது பிறையணி, படர்சடை முடியிடை புனலுடை, மணிமிடற்றனாம், ஆதியும் அந்தமும் இல்லா சிவ பெருமானுக்கு எவ்வளவு உகந்ததோ அவ்வளவு அவரின் பாதியான அம்மைக்கும் உகந்தது. குறிப்பாக அங்காள பரமேஸ்வரிக்கும், மூங்கிலனை காமாக்க்ஷியம்மனுக்கும் மஹா சிவராத்திரி  மிகவும் உகந்த திருவிழாவாகும்அந்த ஆதி சக்தி, கருணைக் கடலான   அம்மை நம் துயர் துடைக்க எவ்வாறு இரங்கி வந்து இப்பூவுலகில் இந்த வடிவங்களில் குடி கொண்டாள் என்பதை பார்ப்போமா?
அங்காளபரமேஸ்வரி பிரம்மோற்சவ
ஐந்தாம் திருநாள் பஞ்சமூர்த்திகள் பவனி
அம்மையப்பர்


ரிஷப வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி 
வள்ளி தேவசேனா சமேத முருகன்

சண்டிகேஸ்வரர்
 அங்காள பரமேஸ்வரி : "உலக மாதவாய் ஏக நாயகியாய் உக்ர ரூபிணியாய் திருமேனி கொண்டு  பக்தர்களுக்கு உண்டாகும் பலவித சங்கடங்களை போக்கவும் கோபத்தில் இட்ட பல சாபங்களை போக்கி வைப்பதின் பொருட்டும் சிவசக்தி தாண்டவமாயும், சூலம், கபாலம் பாசாங்குசம் கொண்டும் ருத்ர பூமியிலிருந்து ரௌத்ராம்சம் பெற்று எல்லா நலன்களையும் தருகின்ற அஷ்ட லக்ஷ்மியாயும் விளங்கும்" ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியின்வரலாறு சிவபெருமான் செய்த எட்டு வீர செயல்களுள் ஒன்றான 'பிரமன் சிரம் கொய்த' வீர செயலுடன் தொடர்புடையது. சிவ பெருமானுக்கு ஐந் தொழில் புரிவதை ஒட்டி  தத்புருஷம், அகோரம்வாமதேவம், சத்தியோஜாதம், ஈசானம் என்று ஐந்து முகங்கள் உள்ளன.

    ஆதிகாலத்தில் படைக்கும் கடவுள் பிரம்ம தேவருக்கும் ஐந்து முகங்கள் இருந்தன. ஒரு தடவை சிவ பெருமான் பிரம்ம லோகம் சென்ற போது பிரம்ம தேவர் அவரை எதிர் கொண்டு அழைத்தார்,அவரது நான்கு தலைகள் சிவனை பணிய ஐந்தாவது தலையோ நாம் படைக்கும் தொழிலை செய்கின்றோம் என்ற ஆணவத்தால் பணியாமல் இருந்தது. அதனால் கோபம் கொண்ட சிவ பிரான் ,பிரம்மாவின் அந்த ஒரு சிரத்தை கொய்து எடுக்க அந்த சிரம் பரமனுடைய கரத்திலேயே தங்கி விட்டது. (ஒரு சமயம் சிவ பெருமான் தேசாந்திரம் சென்றிருந்த போது பிரம்ம தேவர் அங்கு வர ஐந்து தலையைக் கண்ட அம்மை தவறாக தன் கணவர் என்று எண்ணி பாத பூஜை    செய்ய அச்சமயம் அங்கு வந்த சிவ பெருமான் கோபம் கொண்டு பிரம்மனுடைய தலையை கொய்ததாகவும் கதை வழங்கப்படுகின்றது.)  அதனால்  ஏற்பட்ட பிரமஹத்தி தோஷத்தாலும். பிரமன் இட்ட சாபத்தாலும் அவர் அச்சிரத்துடன் கபாலியாக பித்து பிடித்து அலைந்தார்கபாலம் எப்போது நிறைகின்றதோ அப்போது தான் அந்த கபாலம் அவரது கையை விட்டு அகலும் என்பதால் பிக்ஷடணராக  பிச்சை எடுத்து அலைந்த கணவரின் துன்பத்தை சகிக்க முடியாத பார்வதிக்கும்பித்து பிடித்ததுஅழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியான அம்மையின்  உருவமும் கொடூரமாக மாறியது . அவ்வாறு  அம்மை அலைந்த போது தாயின் துன்பத்தை துடைக்க சிவ பெருமான்   வந்து அம்மையின் நிலையை  மாற்ற நடக்க அம்மையும் பின் தொடருகின்றாள், மலையனுர் ஏரியை  சிவன் கடந்து விட  மாதா  நடுவிலேயே மயங்கி நிற்க, சிவபெருமானாகப்பட்டவர், "அங்கு ஆழம் பெண்ணே" என்று அழைக்க அதுவே பின்பு மறுவி "அங்காளம்மன்" ஆனது என்பர். பின்னர் ஒரு "மஹா சிவராத்திரி" நன்னாளில் ருத்ரனான சிவ பெருமானுடன்  12 ஊர் மயானமான மேல் மலையனு-ரில்  அங்காள பரமேஸ்வரி  அண்ணனாகிய  திருமாலின் ஆலோசனைப்படி சோறு இறைக்க அதை சாப்பிட அந்த பிரம்ம கபாலம் இறங்க அம்மை அதை தன் காலில் அழுத்தி அங்கேயே கோவில் கொண்டு விட, பிரம்ம கபாலமும் நீங்கி சிவபெருமானின் சாபமும் தீர்ந்தது. எனவே சிவ பெருமானிம் பிரம்ம ஹத்தி தோஷமும், பிக்ஷடணராக பலி தேர்ந்து அலைந்ததும் நீங்கிய நாள்  ஆகியதால்  மஹா சிவராத்திரி என் தாய்க்கு மிகவும் உகந்த நாளாகும். அன்று எல்லா அங்காளம்மன் ஆலயங்களிலும் இந்நிகழ்ச்சி' மயான கொள்ளையாகவோ (மயான சூறை )' அல்லது 'முக கப்பரை' எடுத்துச் சென்று மயான பூஜை  நிகழ்ச்சியாகவோ மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

  
அங்காளி சிவபூஜை செய்யும் காட்சி

அங்காள பரமேஸ்வரியுடன் இணைந்த மற்றுமொரு வரலாறு, தன் பக்தர்களை காப்பதற்காக அம்மை வல்லாள கண்டணை வதம் செய்த வரலாறு ஆகும். திருவண்ணாமலையை ஆண்டு வந்த வள்ளாள கண்டன் மிகவும்  கொடுமைக்காரனாக இருந்தான். தன் குடி மக்களை எல்லாம் கசக்கி பிழிந்து வேலை வாங்கி அவர்களுக்கு தகுந்த கூலி தராமலும், அவர்களை மிகவும் கொடுமை படுத்துபவனாகவும் இருந்தான். அவன் ஏழு சுற்று கோட்டை அமைத்து அதற்கு இரண்டு கொடும் புலிகளை காவலாகவும் இட்டு தன் அரண்மணையை அக்கோட்டையில் அமைத்து கொண்டு ஆட்சி செய்து வந்தான். அவனுடைய  கொடுமை தாங்காமல் மக்கள் எல்லாரும் அங்காள அம்மனை வந்து வேண்டி நிற்க, அம்மையும் மனமிரங்கி, 'பேச்சியுடன் ' சென்று, அவனுடைய ஏழு சுற்று கோட்டையை அழித்து நிர்மூலமாக்கி, அங்கே ஆமணக்கு விதை விதைத்து, வள்ளாளனையும் வதம் செய்துஅவனுக்கு மகன் பிறந்தால் மிகவும் கொடுமையானவானாகவே இருப்பான் குடி மக்கள் அனைவருக்கும் துன்பம் என்பதால்நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவன் மனைவியை வெறும் வயிறாக்கி, தன் மக்களை என் தாய் காப்பாற்றினாள்கோட்டை வாயிலிலே காவலாக இருந்த இரு புலிகளையும் கொன்று, அவைகளுடைய எலும்புகளை, அவற்றின் நரம்புகளை வைத்து கட்டி, தோலை பக்கங்களில் சேர்த்து இரண்டு புலிகளுக்கு இரண்டு அடுக்குடன் கூடிய " பம்பை " என்ற வாத்தியத்தியத்தை எம் அன்னையே உருவாக்கி அந்த புலிகளின் பல்லினாலேயே அந்த வாத்தியத்தை வாசித்து தன் வெற்றியை அறிவித்தாள் என்பது ஐதீகம். எனவேதான் பம்பை அங்காள பரமேஸ்வரிக்கு மிகவும் பிரியமான வாத்தியம். அம்மையின் விசேஷங்கள் அனைத்திலும் பம்பை கட்டாயம் ஒலிக்கும். மஹா சிவராத்திரி பண்டிகையின் போது இந்நிகழ்ச்சி 'பரி வேட்டை' நிகழ்ச்சியாககொண்டாடப்படுகிறது. இவ்வாறு நம்மை உய்விக்க வந்த பார்வதி தேவியின் அம்சமாம் அங்காள பரமேஸ்வரியை இந்த மஹா சிவராத்திரி நன்னாளில் நாமும் வழி பட்டு நன்மைஅடைவோமாக.

 
அங்காளபரமேஸ்வரி தனலக்ஷ்மி அலங்காரம் 
மூங்கிலனை காமாக்ஷியம்மன் :  தற்போது தேவதானப்பட்டி என்று வழங்கப்படும் தலம் முற்காலத்தில் வங்கிசபுரியாக திகழ்ந்தது. அதை சூலபாணி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு சிவனருளால் வச்சிர தந்தன் என்ற மகன் பிறந்தான். அவன் அரசனாக முடி சூட்டிக் கொண்டபின் மாங்குசானன் என்பவனை மந்திரியாகவும், துட்டபுத்தி என்பவனை தளபதியாகவும் கொண்டு, அவர்களின் துர்போதனையாலும் அரிய தவம்  செய்து தான் பெற்ற வலிமையினாலும் தன் குடிகளை பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கினான்அவனது கொடுமை தாங்காமல் மக்கள் அனைவரும் பிரம்ம தேவனிடம் சென்று முறையிட அவரும் தேவேந்திரனை அனுப்பினார். தேவேந்திரனாலும் அசுரனை வெல்ல முடியவில்லை. எனவே மக்கள் எல்லாரும்  காஞ்சி சென்று அம்மையிடம் முறையிட்டார்கள்துஷ்டர்களை அழித்து தன் பக்தர்களைக் காப்பாற்ற அந்த காஞ்சி காமாட்சியானவள்  அந்த  கொடுங்கோலனை அழிக்க துர்க்கையை அனுப்பினாள்அசுரனின் தலை கீழே விழுந்தவுடன் அதை காலால் மிதித்து அழிக்காவிட்டால் அவன் அழிய மாட்டான் என்ற வரம் பெற்றிருந்தான் வச்சிரதந்தன். துர்க்கையானவள் அவன் தலை போரில் -வட்டுப்பட்டு விழுந்தவுடன் தன் காலால் அதை மிதித்து அழிக்க அந்தத் தலையும் சுக்கு நுறாக  வெடித்துச் சிதற அசுரனும் அழிந்தான்.

   
அங்காளி

 அசுரனை வதம் செய்த பாவம் தீரவும், தனது ரௌத்ரம் தணியவும் எம் அம்மை இளம் பெண்  வடி வெடுத்து தலையாற்றங்கரையில் மூங்கிற் புதரில் மோன தவமியற்றனாள்தவமிருந்த அன்னைக்கு தேவதானப்பட்டி ஜமீந்தாரின் பட்டியைச் சார்ந்த  ஈனாத  காராம் பசு ஒன்று தினமும்  சென்று பால் வழங்கிக்  கொண்டிருந்ததுஒரு நாள்  அந்த பசு மட்டும் தனியே  செல்வதை கவனித்த ஒரு இடையன் அதன் பின்னே சென்ற போது மூங்கிற் புதரொன்றில் அழகே உருவான ஒரு இளம் மங்கை அப்பசுவினிடம் பால் அருந்துவதைக் கண்டாண். மணியே, மணியின் ஒளியேஓளிரும் மணி புணைந்த அணியே, அணியும் அணிக்கு அழகான அம்மையின் கோடி சூரிய  பிரகாசத்தைப் பார்த்தவுடன் அந்த இடையனின் கண்கள் குருடாகி விட்டன.
   
  அன்றிரவு ஜமீந்தாரின் கனவில் தோன்றிய  திரிபுர சுந்தரியாகிய எம் அம்மை இடையனின் செயலால் தனது தவம் கலைந்து விட்டது அவனும் தனது கண்களை இழந்தான். கவலைப்படவேண்டாம், அடுத்து  வரும் பெரு வெள்ளத்தில் நானே ஒரு மூங்கில் பெட்டியில் வருவேன் என்னை எடுத்து இடையன் வணங்கினால் அவனுக்கு கண் பார்வை கிடைத்து விடும். என் மோன தவம் கலையாமல் எனக்கு கோவில் எழுப்பி வணங்கி வாருங்கள் உங்களுக்கு எல்லாவித நன்மைகளையும் நான் அருளுவேன் என்று கூறி மறைந்தாள் அன்னை. அடுத்து பெய்த பெருமழையில்  மஞ்சளாற்றில்  எம் அன்னையின் கருணையைப் போல வெள்ளம் பெருகி ஓடி வர, அம்மை ஒரு குழந்தை வடிவில் ஒரு மூங்கிற்ப் பெட்டியில் மிதந்து வந்தாள், ஒரு மூங்கிற் புதர் அணையிட்டு நிறுத்தியதால்  அன்னை மூங்கிலணை காமாக்ஷயம்மன் என்ற திரு நாமம் பெற்றாள்.

அம்மையை கண்டவுடன் கரையில் கூடியிருந்த ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்  அன்பின் மிகுதியால் தங்களை எல்லாம் வாழ்விக்க தானே வந்த அம்மைக்கு அவசரத்தில் தேங்காயை உடைக்காமலும், வாழைப் பழத்தை உரிக்காமலும் அப்படியே பூஜை செய்தனர். அம்மை தம் பகதர்களிடம் வேண்டுவது வெறும் தூய பக்தியைத்தானேஅந்த லோக மாதா அவர்களின் பூஜையை எற்று இடையனின் கண் பார்வையை தந்தருளினாள். அன்னையின் ஆனைப்படி யாரும்       தொந்தரவு தரா வண்ணம் ஒரு கோவில் எழுப்பி அதில் மூங்கில் கூடையுடன் அம்மையை உள்ளே வைத்து கதவை சாத்தி விட்டனர். இப்போதும்   கருவறையில் உள்ள அம்மையை யாரும் பார்க்க முடியாதுசந்தனத்தாலும் ஐம் பொன்னாலும் ஆன கதவிற்கே  (தேங்காய்கள் உடைக்காமலும் பழங்கள் உரிக்காமலும்பூஜைகள் நடை பெறுகின்றது. கருவறையினுள் அம்மை இன்னும் தன் தவத்தையாருடைய இடையூறும் இல்லாமல்  இன்றும் தொடர்வதாக ஐதீகம். ஆகவே கோவிலின் அருகிலே யாரும் குடியிருப்பதும் இல்லை. பத்து நாள் திருவிழாவான மஹா சிவராத்திரி உற்சவத்தின் போது கூரை வேய்பவர்கள் தங்கள் கண்ணையும் வாயையும் கட்டிக் கொண்டு ஒரு வேள்வியைப் போலவே  இதை செய்து முடிக்கிறார்கள்.

 அன்னையின் சன்னதியில்  மூன்று பிரம்மாண்டமான நெய்  விளக்குகள் சுடர் விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. . நாள் தோறும் சுமார் 20 லிட்டர் நெய் அதற்கு தேவைப்படுகின்றது. எனவே இங்கு வரும் பக்தர்கள்  நெய்யைத்தான் காணிக்கையாகக்கொண்டு வருகின்றனர். இவ்வாறு காணிக்கையாக வந்த நெய் மிகப் பெரிய குடோன்களில் வைக்கப்பட்டுள்ளன. பல வருடங்கள் ஆகியும் அந்த நெய் அப்படியே சிறிதும் குணம் குன்றாமால் மணம் கெடாமல் இருக்கின்றது. இந்த நெய்யை எறும்பு நெருங்குவதில்லை இதுவே அம்மனின் மகிமைக்கு சான்று. இந்த மஹா சிவராத்திரி நன்னாளில் நாமும் ஓளி நின்ற கோணங்கள்  ஒன்பதும்  மேவி உறைபவளான அந்த ஸ்ரீ சக்ர ரூபிணியான மூங்கிலணை காமாக்ஷி அம்மனை வழிபட்டு நன்மையடைவோமாக.                                                             

15 comments:

வா.கோவிந்தராஜ், said...

ஓம் நமசிவாயா!

பதிவு அருமை தீவிர தேடல்

சிவரதி said...

மதத்தின் மகிமையையும்
மார்க்கத்தின் மான்பினையும்
மஹா சிவராத்திரி மகத்துவத்தையும்
மனித குலம் எமக்கு எல்லாம்
எளிதாக எடுத்துரைத்த தாங்களுக்கு
எமது நன்றிகள்

இராஜராஜேஸ்வரி said...

மஹா சிவராத்திரியின் மேன்மையையும், அதைக் கொண்டாடுவதால் நாம் அடையும் பலன்களையும் இந்த நன்னாளை ஒட்டி திருவிழாக்கள் நடைபெரும் இரு அம்மன்களின் வரலாறுகளையும் அற்புதமான படங்களுடனும் விரிவான வரலாறுகளுடன் சிறப்பான பகிர்வாக்கித் தந்து சிவராத்திரியை விளக்கியமைக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களும், வாழ்த்துகளும்..

J. F. M. M. said...

Hi
I am an amateur photographer and public blogs. The site where he had closed and now I'm redoing. The photo of my people is:
http://zorita01.blogspot.com/
Those of my travels in Spain and abroad want to start redo and put a link on this blog.
Greetings from Spain.

goma said...

உங்கள் பதிவுக்கு விருது ஒன்று அளித்திருக்கிறேன் ஏற்றுக் கொள்ளவும்.
விவரம் இங்கே
http://valluvam-rohini.blogspot.in/

சி.பி.செந்தில்குமார் said...

அடிமுடி காணமுடியா அண்ணாமலைபோன்று நீண்டுகொண்டே சென்ற பக்திப்பதிவு. படங்கள் கலக்கல்.

கோவை மு.சரளா said...

படங்களும் செய்திகளும் அருமை !!!

Kailashi said...

//ஓம் நமசிவாயா!, ஓம் நமசிவாயா!//

மிக்க நன்றி தமிழன் அவர்களே.

Kailashi said...

மிக்க நன்றி கவிதாயினி சிவரதி.

Kailashi said...

விருதுக்கு மிக்க நன்றி Goma.

Kailashi said...

என்ன அவ்வளவு நீளமாகிவிட்டதா பதிவு. அம்மையப்பனின் புகழை அந்த மேரு மலையையே பேனாவாகக்கொண்டு, கடல் நீர் முழுவதையும் மையாக கொண்டு எழுதினாலும் எழுதி தீர்க்க முடியுமா?

மிக்க நன்றி செந்தில்

Kailashi said...

வாருங்கள் கோவை சரளா!

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

கவிதைகள் அருமை.

கோமதி அரசு said...

உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாதரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்குச் செல்கிறோம்.//

அருமையான விளக்கம்.

சிவராத்திரி பற்றிய விரிவான பதிவு.
மிக மிக அருமை.

அங்காள பரமேஸ்வரி பற்றிய செய்திகள் புதிதாக அறிந்து கொண்டேன், நன்றி.
படங்கள் எல்லாம் தெய்வீகம்.

ANBUTHIL said...

இந்துக்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு

Kailashi said...

//சிவராத்திரி பற்றிய விரிவான பதிவு.
மிக மிக அருமை.//

மிக்க நன்றி கோமதி அரசு