Saturday, August 4, 2012

மதுரை பயணம் ... - அனந்து


நான் கடைசியாக மதுரைக்கு சென்று இரண்டு வருடங்கள் இருக்கும் , அதுவும் எங்கள் குடும்பத்துக்கு இருந்த ஒரே தொடர்பான வீட்டை  விற்பதற்காக என் சகோதரர்களுடன் சென்றிருந்தேன் ... எங்கள் குடும்பம் முழுவதும் சென்னையிலேயே செட்டிலாகி பல வருடங்கள் ஆகி விட்டதால் வீட்டை கவனிக்க முடியவில்லை , அதிலும் குடியிருந்தவர்களும்  காலி செய்து கொண்டு போய் விடவே வீட்டை விற்க முடிவெடுத்தோம் ... என் நண்பனின் அண்ணனே வீட்டை வாங்குவதற்கு முனைப்பாக இருந்ததால் விற்பதில் சிரமம் இருக்கவில்லை ... 


சொந்த வீட்டின் மேல் எல்லோருக்கும் ஒரு எமோஷனல் கனக்ட் இருக்கும் , அதிலும் என் இரண்டு அண்ணன்களை விட எனக்கு அது கூடவே இருந்ததற்கு காரணம் , அவர்களை விட நான் அதிக வருடம் அந்த வீட்டில் வாழ்ந்ததே ... என்னுடைய  ஆறாம் வகுப்பிலிருந்து கல்லூரி படிப்பு முடியும் வரை நான் அந்த வீட்டில் தான் இருந்தேன் ... மூத்த அண்ணன் வேலை நிமித்தமாக டில்லியில் இருந்ததால் ஆரம்பத்திலிருந்தே எங்களுடன் தங்கியதில்லை , அவர் வாங்கிகொடுத்த டேப் ரெக்கார்டரில் தான் அப்போது ஏ.ஆர்.ரஹ்மான்  இசையில் பிரபலமான " ஓட்ட ஓட்ட கட்டிக்கோ " பாடல் ஓடிக்கொண்டேயிருக்கும் ... சவுண்டை குறைக்க சொல்லி சத்தம் போடும் எதிர் வீட்டு இருமல் தாத்தாவும் ஒரு நாள் இறந்து விடவே ( சத்தியமா நான் காரணமில்லை ) சத்தம் மேலும் அதிகமாகியது ... அடுத்த அண்ணனும் வேலை கிடைத்து வெளியூர் சென்று விட நான் தனிக் காட்டு ராஜாவானேன் ... 

பாசத்தையே வெளிக்காட்டிக் கொள்ளாத என் தந்தை என்னிடம் மட்டும் அதிக பாசத்துடனும் , அதை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்காட்டிக் கொண்டுமிருந்த காலமது. நான் அதை முழுவதும் உணர்ந்து கொண்ட போது என் தந்தை உயிருடன் இல்லை ... அவர் உயிருடன் இருந்த போது அவருடன் நிறைய சண்டையிட்டிருக்கிறேன் , எதிர்த்துப் பேசியிருக்கிறேன் , ஒரு நாள் என்னை அடிக்க வந்த கைகளை இறுகப் பிடித்திருக்கிறேன்...

ஜோசியர் கிரக கோளாறு என்றார் , குடும்ப நண்பர்கள் சிலர் இருவருக்கும் இடையேயான அதிக  வயது வித்தியாசம் ( 44 ) தான் கருத்து வேறுபாடுகளுக்கு  காரணம் என்றார்கள். என்ன காரணம் என்று எனக்கு அந்த வயதில் புரியவில்லை , ஆனால் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அதீத அன்பே சண்டைகளுக்கு காரணமென்று இப்போது புரிகிறது ... ஒருவர் மீது நாம் கொண்டிருக்கும் அன்பு அவர்கள் நம்முடன் இருக்கும் போது தெரிவதில்லை , பிரியும் போது தான் தெரிகிறது ... இது தந்தைக்கு மட்டுமல்ல  , நிறைய உறவுகளுக்கு பொருந்தும் ... 

இப்போது கடன் வசதியும் , தனி நபர் வருமானமும் அதிகமிருப்பதால் வீடு வாங்குவதென்பது எளிதாகிவிட்டது , அதனால் தான் ஐம்பத்தைந்து வயதில்  என் தந்தைக்கு சாத்தியமானது இந்த காலத்தில் இருபதைந்திலேயே முடிகிறது ... சிறுக சிறுக சேமித்து ஒரு இடத்தை வாங்கி நம் கண் பார்வையிலேயே தனி வீட்டை கட்டி  அதில்  குடிபுகுவதென்பது  ஒரு தனி சுகம் , இந்த காலத்தில் கிடைக்கும் துரித ப்ளாட்களில் அந்த சுகம் இருப்பதில்லை ... எங்கள் தந்தை சென்னைக்கு வந்து எங்களுடன் நிரந்தரமாக தங்காமல் மதுரையிலேயே இருந்ததற்கு அவர் சொந்தமாக கட்டிய வீடும்  முக்கிய காரணம் ... 





இந்த இரண்டு வருடங்களில் ஓரிரு முறை மதுரைக்கு செல்லும் வாய்ப்பு வந்தும் என்னால் போக முடியவில்லை , திடீரென்று ஒரு நாள் என் கல்லூரி கால நண்பன் கட்டிங் போன் செய்து அவன் ஜெர்மனிக்கு போய் வந்ததால் அவன் வேலை  பார்க்கும் அலுவலகம்  அவன் இந்தியாவுக்குள் எந்த ஊருக்கு சென்று மூன்று நாள் தங்கினாலும் அதற்க்கான செலவை ஏற்றுக்கொள்வதாக சொல்லி விட்டதாகவும் , அவன் மதுரையை தேர்ந்தெடுத்ததாகவும் சொன்னான் ... இதல்லவோ ஆபீஸ் என்ற  வயிற்றெரிச்சல்  ஒரு புறமும் , எந்த ஆபீஸ்லடா இந்த மாதிரியெல்லாம் அனுப்புறாங்க என்ற கேள்வி மறுபுறமும் எழ , " தானமாய் வரும் மாட்டை பல்லைப் பிடுங்கி பார்க்க கூடாது " என்ற சொல்லுக்கேற்ப நானும் மதுரை என்பதால்  சம்மதித்தேன் ... 

துரித பயணம் என்பதால் எஸ்.ஆர்.எம் பஸ்ஸில்  டிக்கெட் புக் செய்து கிளம்பினேன் ... பேருந்து பயணத்தின் போது  ஏ.சி  குறைவாக இருப்பதாக ஒருவர் முறையிட அதற்கு
 ஏ.சி  சரியாத்தான் இருக்கு , வேணுமின்னா கம்ப்ளைன்ட் பண்ணிக்குங்க "  என்று சொல்லி வாடிக்கையாளர்கள் சேவைக்கான இ மெயில்  முகவரியை எஸ்.ஆர்.எம் பணியாளர் காண்பித்தது அவர்கள் சர்வீசின் மேல் நான் வைத்திருந்த மதிப்பை வெகுவாக குறைத்தது ... ஒரு வழியாக மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலுக்கு   வந்து சேர்ந்தேன்...

கட்டிங் வரும் போது உற்சாகத்திற்கு குறைவிருந்தாலும் , உற்சாக பானங்களுக்கு குறைவிருக்காது ( அதன் காரணமாகவே அவன் இயற்பெயர் நாராயணன் என்பது மறந்தே போனது  ) ... வருவதற்கு முன்பே நேயர் விருப்பங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப அயிட்டங்களுடன் வந்து சேர்ந்தது அவன் தனி சிறப்பு ... கடைசியில் எது நடந்ததோ அது நல்லபடியாகவே நடந்தது ... கல்லூரியில் படிக்கும்  போது அவன் கட்டிங்கிற்க்கே  மரண போதையாகிவிடுவதால் நாராயனணிற்கு " கட்டிங் " என்ற திருநாமம் வந்து தங்கிவிட்டது .. அந்த காலத்திலே " கண்ணா " ஒயின்ஸில் கடன் வைத்து சரக்கடித்த பெருமை அவனுக்கு மட்டுமே உண்டு ... 

எங்கள் கல்லூரியில் ஓரளவு அழகான பெண்கள் எல்லோருமே ஏனோ எல்லீஸ் நகரிலேயே இருந்தார்கள் ( டி,வி,எஸ் நகர் பெண்கள் கோவிக்க வேண்டாம் ) , அந்த ஏரியாவில் கட்டிங் வசித்து வந்ததால் பசங்களின் நட்புக்கரம் அவன் பால் நீண்டுகொண்டேயிருந்தது , அவனும் " அந்த பொண்ணு தானே ஒன்னுமேயில்லை நேத்து கூட அவங்க வீட்டுல தான் இருந்தேன் , ஈசியா செட்டாயிரும் ,( இந்த இடத்தில
யாருக்கு , யாருக்கோ " என்ற வடிவேலுவின் வசனத்தை ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொள்ளவும் )  வாங்க பாஸ் மத்தத ஒரு கட்டிங் போட்டுக்கிட்டே பேசுவோம் "   என்று சொல்லிவிட்டு கண்ணா ஒயின்சுக்கு அவர்களை அழைத்து செல்வது அவன் வழக்கம் ... 

இன்றோ அதற்கெல்லாம் பிராயச்சித்தம் செய்வது போல பணத்தை தண்ணியாக மட்டும் அல்ல தண்ணியிலேயே செலவழித்துக் கொண்டிருக்கிறான் என்பது என் கருத்து ... அதிலும் ஊருக்கு நான் திரும்பும் போது " குறை எதுவும் இல்லையே மச்சான் " என்று ஏதோ மாப்பிள்ளை வீட்டுக்காரகளிடம் பெண்ணின் தகப்பன் கேட்பது போல அவன் கேட்ட போது கிரேன் வைக்காமலேயே ஒரு முறை உயரத்திற்கு போய் வந்தான் ...
 " நன்பேண்டா " என்று ஒரு குரல் அங்கு ஒலிப்பது போலவே இருந்தது ...

நான் எதிலுமே அதிக பற்றுள்ளவனாக இருப்பதில்லை , சரக்கு விஷயத்திலும் அப்படியே... கல்லூரி நண்பர்கள் பி.சி , சபரியுடன் என் பால்ய நண்பன் பட்டாபியும் கலந்து கொண்டதும் கலகலப்பு கூடியது ... சபரீஷ் பொங்கல் , குமார் மெஸ் சாப்பாடு , முனியாண்டி விலாஸ் புரோட்டா - சால்னா இவற்றுடன் சேர்த்து  இந்த சந்திப்பின் மூலம் ஏற்கனவே எனக்கும் என் பால்ய நண்பனுக்கும் இடையேயிருந்த சின்ன மனஸ்தாபமும் கரைந்து போனது பயணத்தினால் கிடைத்த கூடுதல் பலன் ...சில இடங்களுக்கு போக வேண்டுமென்று நினைத்திருந்தும் மீனாக்ஷி அம்மன் கோவில் , திருப்பரங்குன்றம் இரண்டிற்கு மட்டுமே அடுத்த நாள் காலை செல்ல முடிந்தது ... 





ரூம் ஜன்னல் வழியாக பின்புறம் பார்த்த போது தெரிந்தது மிகப்பெரிய வெட்டவெளி ... இன்று வெட்டவெளியாக இருக்கும் அந்த இடம் ஒரு காலத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டராக இருந்து , எத்தனையோ வெள்ளிவிழா படங்களை கண்ட தங்கம் தியேட்டர் என்பதை நினைக்கும் போதே நெஞ்சுக்குள் ஏதோ ஒரு வெறுமை ... என் அப்பாவுடன் சிவாஜி படம் பார்க்க தங்கம் தியேட்டருக்கு நான் பல தடவை சென்றிருக்கிறேன் , அப்படி செல்லும் போது நடந்த ஒரு சம்பவம் என் மனதில் பசுமரத்தாணி போல இன்றும் நினைவிருக்கிறது ... செயின் ஸ்மோக்கரான என் அப்பா இடைவேளையின் போது சிகரட் வாங்க , நானும் அதையே கேட்டேன் ... அவர் மறுக்க  நான் " நீ மட்டும் வாங்குற " என்று சொல்லி அடம் பிடிக்கவே அப்பொழுது அவரால் எனக்கு முன் புகை பிடிக்க முடியவில்லை , அன்று மட்டுமல்ல பிறகு என்றுமே சாகும் வரை எனக்கு முன்னாள் அவர் புகை பிடிக்காமலிருந்தது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது ...

பள்ளி நாட்களில் ஒரு பந்தாவிற்காக புகை பிடிக்க ஆரம்பித்த நான் கல்லூரி நாட்களில் அதற்கு அடிமையானேன் என்றே சொல்லலாம் ... பிறகு எவ்வளவு முயன்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாமல் போகவே அந்த முயற்சியை நிறுத்திவிட்டேன். சென்னையில் வேலைக்கு  சேர்ந்த பிறகு புகைக்கும் எனக்குமான நெருக்கம் இன்னும் அதிகமானது ... ஒரு நாள் திடீரென என் தந்தை இறந்த செய்தி கேள்விப்பட்டவுடன் நாங்கள் எல்லோரும் மதுரைக்கு விரைந்தோம் ... ஈம காரியங்கள் செய்வதற்காக சுடுகாட்டுக்கு போவதற்கு முன் சிகரெட் வாங்குவதற்காக என் நண்பனிடம் பணம் கொடுப்பதை என் அண்ணனுடைய சகலை பார்த்துவிட்டார் ... 

என்  தந்தையின் ஈம காரியங்கள் முடியும் வரை  பத்து நாட்களுக்கு சிகரெட் பிடிக்காமல் இருக்கலாமே என அவர் சொன்ன போது நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ... அவர் என் தந்தைக்காகவாவது இதை சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கலாமே என்று சொன்ன போது என்னால் தட்ட முடியவில்லை ... அந்த பதினைந்து நாட்களும் நான் சிகரெட் பிடிக்கவேயில்லை , அதற்கு அடுத்த நாள் என் நண்பன் என்னிடம் சிகரெட்டை நீட்டிய போது ஏதோ ஒரு விஷ ஜந்துவை பார்ப்பது போல தான் அதை நான் பார்த்தேன் ... புகை பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் கைவிட்டு இத்தோடு ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டன ... 





யார் யாரோ ஏன் என் அப்பாவே ஜாடையாக சொல்லியும் புகை பிடிக்கும் பழக்கத்தை விடாத நான் திடீரென மிகவும் நெருக்கமில்லாத ஒருவர் சொன்னவுடன் விட்டுவிட்டதை நினைத்தால் மற்றவர்களுக்கு ஆச்சரியம் ஆக இருக்கலாம் , ஆனால் எனக்கு என்னவோ அப்படி தோன்றாததற்கு காரணம்  என் அப்பா ... " டே மாப்பிளை எத்தன தடவ டா கூப்புடறது , இந்தா  சிகரட்ட பிடி " நான் அந்த பழக்கத்தை விட்டு விட்டது தெரியாத என் கல்லூரி நண்பன் என்னிடம் சிகரெட்டை நீட்டினான் ... அதை மறுத்துவிட்டு மீண்டும் என் பார்வை என்னையறியாமல் தங்கம் தியேட்டர் இருந்த வெட்டவெளியில் வெறித்து நின்றது ... 

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

த்ந்தையின் நினைவுடன்
தாய்மண் மதுரை பயணம் ! --பாராட்டுக்கள்..