Sunday, August 14, 2011

இன்பவாழ்வளிக்கும் ஈச்சனாரி விநாயகர்




இன்பவாழ்வளிக்கும் ஈச்சனாரி விநாயகர்

பாலக்காட்டு கணவாயின் பயனால் மலையாள மாருதம் கொஞ்சி தவழ்ந்து விளையாடும் நகரம் தான் கோவை.
 தென்னாட்டு மான்செஸ்டர் என்று புகழ் பெற்ற , கோவை என்றவுடன் நினைiவுக்கு வரும் வினாயகரின் கோவில் ஈச்சனாரி ஆகும்.

இங்கு விநாயகப்பெருமான் எழுந்தருளிய வரலாறு மிகவும் வேடிக்கையானது.
 கொங்கு மண்டலத்தின் தொன்மை வாய்ந்த கோயில்களில் ஒன்றானதும், முக்தித் தலமானதும் ஆடல்வல்லானின் அற்புதமான சிற்பங்கள் நிறைந்த ஆதி அம்பலத்தை உடையதும் ஆன பேரூர் பட்டீஸ்வரப்பெருமான் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக எடுத்து செல்லப்பட்ட இந்த விநாயகர் விக்கிரகம், மதுரையிலிருந்து மாட்டு வண்டியில் கொண்டு வரப் பட்ட போது , வினாயகப் பெருமானின் திருவிளையாடலால் வண்டியின் அச்சு முறிந்து வினாயகர் விக்ரகம் கீழே சாய்ந்தது.
கீழே சாய்ந்த வினாயகரை மீண்டும் வண்டியில் ஏற்ற எவ்வளவோ முயன்றும் அது முடியவில்லை. அவரே அங்கேயே கோவில் கொள்ள நினைத்தபின் மானிடர்களால் என்ன செய்ய முடியும். பின்னர் அவரே தானே வந்து நமக்கெல்லாம் அருள் பாலிக்க தேர்ந்தெடுத்த அதே இடத்தில் திருக்கோவில் உருவானது. 
அன்று முதல் இன்று வரை அவ்வழி செல்லும் அனைவருக்கும் அருட்காட்சி அளித்து நன்மை பல புரிந்து வருகின்றார் ஈச்சனாரி வினாயகர். இவ்வழியில் செல்லும் எல்லா வாகனங்களும் இவர் திருக்கோவிலில் நின்று இவர் அருளைப் பெற்ற பின்னரே செல்கின்றன


இவ்வாறு தானே உவந்து வந்து இங்கு கோவில் கொண்ட மூலவர் 5 அடி உயரமும், 3 அடி பருமனும் உடையவர். பாதையில் இருந்து பார்த்தால் அமர்ந்த கோலத்தில் அங்குச பாசம் ஏந்தி துதிக்கை இடது புறம் வளைந்திருக்க உயரத்தில் சன்னதி அமைக்கப்பட்டிருப்பதால் கம்பீரமாகவும் எழிலாகவும் அருட்காட்சி தருகின்றார் விக்னராஜா.
இக்கோவிலில் செய்யப்படும் , 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வோர்விதமான அலங்காரம் செய்யும் " நட்சத்திர அலங்கார பூஜை" மிகவும் விஷேஷமானது ஆகும். தமிழ் வருடப்பிறப்பு மற்றும் விநாயகர் சதுர்த்தியன்று இக்கோவிலில் லட்சக் கணக்கான மக்கள் கூடுகின்றனர்
இக்கோவில் நவீன கட்டிட அமைப்புடுடன், மகா மண்டபம், அதனை சுற்றிலும் ஜன்னல் அமைப்பு, ஆலயத்தை சுற்றிலும் பசும் புல் தரை அமைப்பு, பூந்தோட்டத்துடன், எழிலுற விளங்குகின்றது. கோவிலின் உட்புறம் வினாயகப் பெருமானின் பல்வேறு திருவிளையாடல்களை விளக்கும் ஓவியங்கள் அழகாக கண்ணாடி சட்டத்துடன் பொருத்தப்பட்டுள்ளன.
அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது. யாகசாலை அற்புதமாக அமைந்துள்ளது.
திருமண மண்டபம் சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது

 கிழக்குப் பார்த்த கோபுரம் உடையது. மூன்று நிலைகளை கொண்டது. கோபுரத்தின் இரு பக்கங்களிலும் இரு யானை உருவங்கள் கலசங்களை தாங்கிய நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தினுள் நீண்ட சதுர வடிவில் உள்ள மண்டபம், நான்கு தூண்களை உடையதாக அமைக்கப்பட்டுள்ளது. பீடத்தில் கஜலட்சுமியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அதன் மேல் ராசி சக்கரம் உள்ளது.
வினாயகப் பெருமானை தரிசிக்க சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகின்றது. சங்கடஹர சதுர்த்தியன்று வினாயகப்பெருமானை தரிசித்தால், சங்கடங்கள் தீரும் என்பதி ஐதீகம். எனவே இந்நாளன்று பக்த பெருமக்கள் பெருந்திரளாக வந்து வினாயகப் பெருமானின் அருளைப் பெருகின்றனர்.
அருள்மிகு வினயகப் பெருமான் திருவீதி உலா வர ரூ. 36 லட்சம் செலவில் தங்கத்தேர் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டிலேயே வினாயகப் பெருமான் திருவீதி உலா வர தங்கத்தேர் திருப்பணி செய்து அளித்து இருப்பது இத்தலத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

[Gal1]
[Gal1][Gal1]
[Gal1]
[Gal1]

3 comments:

ப.கந்தசாமி said...

நல்ல விவரங்கள்.

அம்பாளடியாள் said...

பக்திமணம் கமழும் தரமான படைப்பு அழகிய
புகைப்படங்களுடன்.வாழ்த்துக்கள் பணி தொடரட்டும்.....

தமிழ்த்தோட்டம் said...

அருமை