Monday, October 24, 2011

பசி

நாம் எல்லாரும் ஏதோ ஒரு நாள் உலகின் மிக விலைமதிப்பற்ற  உணவை ருசி பார்த்திருப்போம். எங்கேன்னு ஒரு நிமிடம் யோசிச்சு  பாருங்க..

போன வாரம் போன கல்யாணத்திலா ?  முந்தின வாரம் போன டீம் பார்ட்டியிலா ?  
இல்லை..இன்னும்  யோசியுங்க..

'ஒ சரி சரி.. என் பையன் பிறந்தநாளுக்கு பெரிய ஹோட்டல்ல போயிருந்தோம்..அப்போ சாப்பிட்டேன்..அதுதான்'-னு சொல்றீங்களா.. இல்லேங்க..

இதெல்லாம் மிகையா போனா ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் இருக்குமா..? விலைமதிப்பே  இல்லாத உணவு எது தெரியுமா?




சென்னை வெயில்ல மத்தியான நேரம் பசியோட வீட்டுக்கு வரும்போது , மனைவி நீங்க  ராத்திரிதான் வருவீங்கன்னு எதுவும் செஞ்சிருக்க மாட்டாங்க.. அப்போ கிடைச்ச நேரத்துல இருக்குற சாதமும், ஊறுகாயும் , 
தாளித்த தயிரும் உங்களுக்கு அமிர்தமா இருக்கும்.. 

ஆறு மணி நேரம் காத்திருந்து ,திருப்பதி  தரிசனத்தை முடிச்சிட்டு ,மத்தியானமும் இல்லாம ராத்திரியும் இல்லாம ஒரு நேரத்துல ,  வெளிய வந்து நிக்கும்போது, பசியும் மயக்கமும் கலந்து உங்கள கிறங்கடிக்கும். இந்த நேரத்துல எங்கிருந்தோ ஒருத்தங்க வந்து ,பிரசாதம்-னு சொல்லி பொங்கலும்,புளியோதரையும் கொடுப்பாங்க.. எந்த கௌரவமும் பாக்காம வாங்கி சாப்பிடுவோம். அதுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியுமா?

நாடு விட்டு நாடு போயிருப்போம்.முதல் இருபது நாள் வெறும் ரொட்டியும்,சாண்ட்விச்சும் சாப்பிட்டு சாப்பிட்டு வாழ்க்கையே வெறுத்து போயிருக்கும்போது,கூட வேலை பாக்குற ஒருத்தர் தன் வீட்டுக்கு மத்தியானம் கூப்பிட்டு சிம்பிளான  விருந்து வைப்பார். 

தடபுடலா இல்லாம சாதம்,சாம்பார்,ரசம்,பொரியல்-னு இருக்குற உணவை நீங்க பாக்கும்போதே 
கண் கலங்கும். அந்த சாப்பாடோட விலை அதிகமா போனா நூறு ருபாய் இருக்குமா..?  ஆனா அந்த நேரத்தில்ல அது விலைமதிப்பில்லாதது.  

இதுதான் நிதர்சனம். கோடியில் புரளும் பணக்காரனும் சரி , தெருக்கோடியில் வேலை பார்க்கும் ஏழையானாலும்   சரி , இருவரையும் இணைக்கும் சக்தி வாய்ந்த ஒரே புள்ளி - பசி. இந்த பசிக்கு நாம் மரியாதை கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் நம் எல்லா மரியாதையையும் பசி இரக்கமே இல்லாமல் எடுத்துக்கொள்ளும்.

ஆனால் இந்த பசியையும் அதன் தாக்கத்தையும் பசி அல்லாத நேரங்களில் நாம் மறந்து விடுகிறோம்.அப்போது கிடைக்கும் உணவையும் நாம் மதிப்பதில்லை. எல்லாரும் , எப்போதும் செய்யும் இந்த சின்ன மிக நுண்ணிய தவறு , எங்கோ யாரோ ஒருவருக்கு பசியை போக்கும் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடுகிறது.

அந்த தவறுதான் - ஒருவனை திருடன் ஆக்கவும் காரணம் ஆகிறது. இன்னும் சொல்லப்போனால் , எல்லா தவறுகளுக்கும் ஆரம்ப காரணமாக இருப்பது அந்த தவறுதான். அதுதான் - உணவை வீணாக்குதல்.

ஒரு நிமிடம் இந்த வீடியோவைப்   பாருங்கள் :



உணவும் சரி பணமும் சரி , இந்தியாவை பொறுத்தவரை ஏற்றத்தாழ்வுகளில் சிக்கித்  தவிக்கின்றன. பணம் எப்படியோ போகட்டும். அது அவனவன்  சாமர்த்தியம். உழைத்து சம்பாதித்தாலும் சரி; ஊழல் செய்து சம்பாதித்தாலும் சரி. ஏதோ ஒரு வழியில் எப்படியோ வேறு யாருக்கோ பயன்படும்.எல்லாவற்றையும்  அவனே அனுபவிக்க முடியாது.

ஆனால் உணவு அப்படியல்ல. அதற்கு காலநேரம் உண்டு. இன்று வைத்திருப்பவன் பயன்படுத்தவில்லை என்றால் , வெகு சீக்கிரம் யாருமே பயன்படுத்த முடியாமல் போய்விடும். 
பசியில் பலர் வாடும்போது , உணவளிக்கா விட்டால் கூட        
மன்னிக்கலாம். ஆனால் அதை வீணாக்கினால் ?  
 
ஒரு கல்யாணம். கல்யாண வீட்டார் உணவு வீணாவதை குறைக்க எந்த ஏற்பாடும் பண்ண முடியாது. அவர்கள் எண்ணம் , வருவோரை திருப்தியாக கவனித்து அனுப்புவதே. உணவு வீணானாலும் சரி, ஆனால் பற்றாமல் போய்விட கூடாது என்பதே அவர்கள் இலக்கு.

ஆனால் கல்யாணத்திற்கு போவோர் அதை செயல்படுத்தலாமே.. இதை எல்லாரும் சேர்ந்து செய்ய முடியாது. அவரவர் உணர்ந்து , அவரளவில் திருந்தினாலே போதும். தனக்கு எது தேவையோ அதை அளவாக கேட்டு உண்டால் , மீதமாகும் உணவு அன்றிரவு குப்பைதொட்டிக்கு போகாமல்,அநாதை இல்லத்திற்கு கண்டிப்பாக போகும்.

உணவை வீணாக்குவதிலிருந்து  தப்பிக்க  எளிதாக 4 வழிகள் உள்ளன .
Shopping List : முதலில் , அடுத்த ஒரு வாரத்திற்கான உணவு பட்டியலை உருவாக்குவோம்.அதற்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்கி வைக்கலாம்.
குளிர்சாதனப்பெட்டி இருக்கிறது என்று எல்லாவற்றையும் வாங்கி பிறகு தூக்கி எறிவதை இது தடுக்கும்.

Stick to the List :கூடியவரை பட்டியல்படி சமைக்கலாம். அதில் மாற்றம் இருந்தால் அடுத்த முறை , முதல் முறை வாங்கிய பொருள்களைத் தவிர பிறவற்றை வாங்கலாம்.

Serve in smaller portions: பரிமாறும் அளவு குறைவாகவே இருக்கட்டும். தேவைகேற்ப கொஞ்சமாக  எடுத்து உண்டால் மீதி இருப்பவை வீணாகாது.குப்பைக்கு 
போகாது.

save/share the leftover :மதியம் உணவு மிச்சம் இருந்தால் , இரவு அதற்கேற்ப சமைக்கலாம்.

இதைத் தாண்டியும் மீதமானால் , பசிப்பவர்களுக்கு கொடுக்கலாம்.
இந்த முறைகள் எல்லா நாடுகளிலும் பரவலாக, உணவுப்பண்டங்கள் கண்காணிக்கும் அமைப்புகள் உருவாக்கி  உபதேசித்து வருபவை.

என் ஒரே இடைச்செருகல் கடைசியாக சொன்ன பகிர்தலில்தான். பிச்சைகாரர்களை ஊக்குவிக்காதீர்கள். உடல் ஊனமுற்றவர்க்கு  மட்டும் உதவுங்கள்.
எங்கள் கல்லூரி விடுதியில் விழா  நடந்து முடிந்து ,  உணவு  மீதமாகும்போது ,  வெகு அருகிலிருக்கும் ,மரத்தடியில் அதிகம்பேர் படுத்திருக்கும் கிராமத்தினரிடம் கொடுக்க மாட்டோம். கொஞ்ச தூரம் தள்ளியிருக்கும் கட்டிட தொழிலாளர்களுக்கு கொடுப்போம். நம் கருணை மற்றவரை சோம்பேறியாக்க கூடாது.

'இதையெல்லாம் யார் சார் கவனிச்சிட்டு  இருப்பா ? எல்லாரும் இப்படியே செய்யறாங்களா?' என்று கேட்கும் புத்திசாலி நண்பர்கள் தங்கள் வழியே செல்லலாம். ஆனால் எந்த ஒரு  சந்தர்ப்பத்திலும்  'என்ன நாடு இது? ' என்று கேட்க அவர்களுக்கு தகுதி இல்லை.




இது விழிப்புணர்வு காலம். எந்த ஒரு நல்ல விசயமும் சரி , ஒரு சாரார் அறிந்தால் உடனே மற்றவருக்கு பகிர எளிதாக  வழியிருக்கிறது.உங்கள் வட்டத்திற்கு  எடுத்து சொல்லுங்கள். 
இந்தியாவின் மிக பெரிய சக்தியே அதன் மக்கள்தொகைதான் (ManPower). அதை தவறான வழிக்கு அனுப்ப அரசியலும், வேறு சில காரணங்களும் இருக்கலாம். அதை தடுக்க முடியாது. ஆனால் அது பசியாய் இருக்க கூடாது.

ஞாபகம் வெச்சுக்கோங்க   - நீங்க வீணடிக்கிற ஒரு வேளை உணவு , இன்னொருத்தரின் ஒரு வேளை  உணவை இழக்க வைக்குது.
காந்தி சொன்னது பல பேருக்கு மறந்து போயிருக்கும் - தனி மனித மாற்றம்தான் எந்த ஒரு தேசமுன்னேற்றத்திற்கும் முதல் படி.

சமுக சேவை வெளிய போய்தான் செய்யணும்னு இல்ல.. வீட்டுக்குள்ளயே பண்ணலாம்.  
யோசியுங்க..

5 comments:

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
பகிர்வுக்கு ........

விச்சு said...

மனிதன் தவிர்க்க முடியாத ஒன்று பசி. தீபாவளி வாழ்த்துக்கள்.

F.NIHAZA said...

அருமையான பகிர்வு சகோ...

காந்தி பனங்கூர் said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி.

ஷைலஜா said...

நல்ல பதிவு.தீபாவளிவாழ்த்துகள்!