Sunday, January 22, 2012

தை அமாவாசை வைத்திய வீரராகவர் தரிசனம்


ஸ்ரீ:
திருஎவ்வுள் திவ்ய தேசம்

இராஜ கோபுரம்


தை அமாவாசையான இன்று நாம் திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாளின் தரிசனம் பெறலாமா அன்பர்களே.  

இவர் சாலிஹோத்ர முனிவர் பர்ண சாலையில் தானே வந்து கிடந்த பெருமாள். 

மது கைடபர்களை அழித்து வேதியர்களை காப்பாற்றிய பெருமாள்.

வள்ளலாரின் தீராத வயிற்று வலியை தீர்த்து வைத்த வைத்திய வீரராகவப் பெருமாள்.

இக்கலியுகத்தில் சாலிஹோத்ர முனிவரின் தலைமேல் கையை வைத்த நிலையில் புஜங்க சயனத்தில் அற்புதமாக சேவை சாதிக்கும் பெருமாள். 

திருமழிசையாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார், வேதாந்த தேசிகர், மங்களாசாசனம் செய்த பெருமாள்.

 பிரமனுக்கு வேதங்களை விரித்துரைத்த தலம்.

இன்றும் தன்னை நம்பி வந்து சரணடைபவர்களின் பிறவி நோயை மட்டும் அல்லாது உடல் நோயையும் தீர்க்கும் பெருமாள்.


வீரராகவப்பெருமாள் உபய நாச்சிமார்களுடன்


 இந்த வீக்ஷாரணய க்ஷேத்திரத்தில்  பத்ரிகாசிரமத்திலிருந்து வந்த  சாலிஹோத்ர முனிவர், ஹ்ருதபாப நாசினி குளக்கரையில்  பர்ணசாலை அமைத்து ஸ்ரீமந் நாரணயணை நினைத்து  பரமபதம் வேண்டி தவம் செய்து வந்தார். சாலி என்றால் நெல் அளக்கும் படி.  இவரது பெற்றோருக்கு சந்தான பாக்கியம் இல்லாமல் இருந்ததால் அவர்கள்  28000 சாலி நெல் கொண்டு ஒரு வருடம்   யாகம் செய்து , இவரை பிள்ளையாகப் பெற்றனர். எனவே இவருக்கு சாலிஹோத்திரர் என்று பெயரிட்டனர். 

ஒரு வருடம் முழுவதும் உண்ணா விரதம்,  இருந்து தான் வருடம் முழுவதும்  சேகரித்த நெல்லைக் கொண்டு அமுது பண்ணி அதை     ஒரு  தை அமாவாசையன்று பெருமாளுக்கு நிவேதனம் செய்தார் அப்போது   ஒரு முதிய  வேதியர் வந்தார், தங்கள் இல்லத்திற்கு வந்த அதிதியை அன்புடன் வரவேற்று அவருக்கு பாத பூஜை செய்து   அவருக்கு அந்த அமுதை அளிக்க அதை அவர் மனமார உண்டுவிட்டு சென்றார். அடுத்த வருடம் அதே நாள் அதே முதியவர் வந்தார், இப்போதும் அவரை உபசரித்த சாலிஹோத்ர முனிவர் அவருக்கு அன்னத்தைப் படைத்தார். அனைத்து அன்னத்தையும் உண்ட முதியவர் உண்டு முடித்த  "உறையிற் கிடக்க எவ்வுள்?"   அதாவது எங்கே படுத்து சிறிது சிரமப்பரிகாரம் செய்து கொள்ளலாம் என்றார். 



முனிவரும் தனது பர்ண சாலை குடிசையைக் காட்ட அதில் சென்று படுத்துக் கொண்டார் அந்த முதியவர். மாலை நேரம் ஆகியும் அவர் வெளியே வராததைக் கண்ட முனிவர் சன்னலின் வழியே உள்ளே நோக்க அப்படியே ஆனந்தத்தில் கூத்தாட ஆரம்பித்து விட்டார். உள்ளே பெருமாள் தனது பாம்பணையில் ஒய்யாரமாக சயனித்து பீதம்பரதாரியாய், சங்கு சக்கரம் ஏந்தி, மார்பில் ஸ்ரீவஸ்தம், கௌஸ்துபம் மின்ன, வனமாலை, துளசிமாலை அசைந்தாட பிரசன்ன வதனத்துடன் ஒய்யாரமாக சேவை சாதித்து கொண்டிருந்தார். திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாளே, நஞ்சரவில் துயில் கொண்ட நாதனே, படுத்த பைந்நாகணைப் துயிலமர்ந்த வேந்தே, அரவினணை மேலானே , அனந்த சயனனே, பையரவினணைப் பாற்கடலுள் பள்ளி கொண்ட பரம மூர்த்தியே இங்கு அடியேன் பொருட்டு தானே வந்து சேவை சாதித்தீரே என்று அவரை பலவாறு போற்றிய சாலிஹோத்ர முனிவரைப் பார்த்து என்ன வரம் வேண்டும் என்று பெருமாள் வினவ, ஐயனே எமக்கு சேவை சாதித்த கோலத்திலேயே இங்கு தாங்கள் இருந்து பக்தர்களின் குறை தீர்க்க வேண்டும் என்று வேண்ட பெருமாளும் அவ்வாறே நாம் எல்லோரும் உய்ய இன்றும் அதே கிடந்த கோலத்தில் புஜங்க சயனத்தில் இன்றும் சேவை சாதித்துக்கொண்டிருக்கிறார் வைத்திய வீரராகவராக.

 கிழக்கு நோக்கிய முக மண்டலத்துடன் சேவை சாதிக்கும் பெருமாளுக்கு அபிஷேகம் கிடையாது சந்தனத் தைலம் மட்டுமே சார்த்தப்படுகின்றது. இவர் எப்போதும் பப்ளி வேஷ்டி சார்த்தி சேவை சாதிக்கின்றார். இது இத்திருக்கோயிலில் மட்டுமே கிடைக்கும். பெருமாளுக்கு பப்ளி வேஷ்டி சமர்ப்பிப்பது ஒரு சிறந்த நேர்த்திக்கடன்.   இவரின் வலக்கரம் சாலிஹோத்ர முனிவரின் தலையின் மேல் உள்ளது. இடது கரம் பிரமனுக்கு வேதம் கற்பித்த ஞான முத்திரையுடன் உள்ளது, பத்மநாபனின் நாபியிலிருந்து உதித்த பிரம்மனும் பரமாத்ம சொரூபத்தில்  சேவை சாதிக்கின்றான். பெருமாளின் திருப்பாதங்கள் பத்மத்தின் மேல் உள்ளன. 
பெருமாள் கேட்ட எவ்வுள் என்ன என்று யோசித்தீர்களா? எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக இருப்பவர் பெருமாள். ஆகவே உன் இதயத்தின் உள்ளேயா அல்லது இந்த வீட்டின் உள்ளேயா? என்று பெருமாள் கேட்டார் என்று பரனூர் மகாத்மா அவர்கள் எவ்வுள் என்பதற்கு அருமையான விளக்கம் தருவார்.

ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் திருஎவ்வுள்

பாலனாகிஞாலமேழுமுண்டு பண்டு ஆலிலைமேல்

சாலநாளும் பள்ளிகொள்ளும் தாமரைக்கண்ணன், எண்ணில்

நீலமார்வண்டுண்டுவாழும் நெய்ந்தலந்தண் கழனி

ஏலநாறும்பைம்புறவில் எவ்வுள் கிடந்தானே





 என்று திருமங்கை மன்னன் பாடிய இத்தலத்தின் பெருமாளை வேண்டிக் கொண்டு உப்பும் மிளகும் சேர்த்து  ஹுருத பாப நாசினி தீர்த்தத்தில் வெல்லம் கரைத்து வழிபட்டும் நோய் தீர்ந்தவர்கள் பல்லாயிரம் பேர். குறிப்பாக வயிற்றுவலி, கை, கால் வலி, காய்ச்சல் ஆகியவற்றுக்கு வேண்டிக்கொண்டு பலன் பெற்றோர் ஆயிரம்.  பிரம்மோற்சவத்தின் போது கருட சேவையின்  முதல் இரவும், தை அமாவாசைக்கு முதல் இரவும் முன் மண்டபத்தில் , படுத்துக் கிடக்கும் அன்பர்களிடம் விசாரித்தால் பெருமாளின் அருள் விளங்கும். தவிர கல்யாணம் குழந்தை பாக்கியம் கிடைக்க மற்றும் கஷ்டங்கள் தீர செல்வம் பெருக இத்தலத்து பெருமாளை வேண்டிக்கொள்ளலாம்.


சைவரான வள்ளலாரின் தீராத வயிற்று வலியை தீர்த்து வைத்தவர் வீரராகவப்பெருமாள்.  வள்ளலார் பெருமாள் இவர் மேல் பதிகம் பாடியுள்ளார். 

ஸ்ரீ விஜயகோடி விமானம்

குளக்கரையிலிருந்து திருக்கோயில்

 
மூலவர்: எவ்வுள் கிடந்தான், வீரராகவப்பெருமாள்
உற்சவர்: வைத்திய வீரராகவர்
தாயார்: கனகவல்லி, வசுமதி
விமானம்: கனககோடி விமானம்
தீர்த்தம்: ஹ்ருதபாப நாசினி ( மனதில் நினைக்கும் பாபங்களை நீக்கும் தீர்த்தம்)
ஆகமம் : பஞ்சராத்ரம்


இத்தலத்தின் தீர்த்தம் ஹுருதபாப நாசனி என்று அழைக்கப்படுகின்றது. கங்கையினும் சிறந்த தீர்த்தம் இத்திருக்குளம். இக்குளத்தின் தண்ணீர் எவரது உடலில் படுகின்றதோ அவர்களின் பாபங்கள் எல்லாம் கரைந்து விடுகின்றன, மனக்குறைகள் எல்லாம் தீருகின்றன. அமாவாசை தினங்களில் அதிலும் பெருமாள் இத்தலம் வந்து கிடந்த தை அமாவாசையன்று இத்தீர்த்ததில் நீராடி விஜய கோடி விமானத்தில் பள்ளி கொண்ட பெருமாளை சேவிக்க அனைத்து பாபங்களிலும் இருந்தும் விடுபடுவர் என்பது ஐதீகம். பக்தர்கள் தங்கள் சர்ம நோய் தீர பால், மற்றும் வெல்லத்தை கரைக்கின்றனர். வெல்லம் கரைவது போல் நோய் கரைவதாக ஐதீகம். மது கைடபர்களை பெருமாள் வென்றதை குறிக்கும் வகையில் இந்த திவ்ய தேசத்தின் விமானம் விஜய கோடி விமானம் என்றழைக்கப்படுகின்றது.
வருடத்தில் இரண்டு முறை இத்திருக்குளத்தில் தெப்போற்சவம் கண்டருளுகின்றார் வீரராகவப்பெருமாள். ஆடி மாத அமாவாசை ஒட்டி நடைபெறும் தெப்போற்சவத்தின் போது மூலவர் முத்தங்கி சேவை சாதிக்கின்றார்.  பிரம்மாண்டமாக இருந்த திருக்குளம் தற்போது தகுந்த பராமரிப்பு இல்லாமல் சுருங்கி விட்டது  நீராழி மண்டபத்தை சுற்றி மட்டுமே சிறிது தண்ணீர் உள்ளது மற்ற இடம் நந்தவனமாகி விட்டது.  வண்டிகள் நிறுத்தும் இடமாகி விட்டது.


கன்றை நினைத்து ஓடி வரும் பசு போல அஞ்சிறைப் புள் ஏறி
நாம் எல்லோரும் உய்ய ஓடி வரும் அச்சுதன் வீர ராகவப் பெருமாள்.

....செங்கண் மாற்(கு) என்றும் படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம் அடையாழி நெஞ்சே! ...

தை அமாவாசையை ஒட்டி ஒரு பிரம்மோற்சவம், மற்றும் சித்ரா பௌர்ணமியை தீர்த்த நாளாகக் கொண்டு ஒரு பிரம்மோற்சவம் என வருடத்தில் இரு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன இந்த திவ்ய தேசத்தில் . தினமும் காலையும் மாலையும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் சேவை சாதிக்கின்றார். தங்க கருட சேவை மூன்றாம் நாள் காலை நடைபெறுகின்றது இப்பதிவில் தாங்கள் காணும் கருட சேவைப் படங்கள் சித்திரை பிரம்மோற்சவத்தின் போது எடுக்கப்பட்டவை


வீரராகவர் பின்னழகு 


தை மாதம் குளிர் காலம் என்பதால் கருட சேவை காலை 5:30 மணிக்கு கோபுர வாசல் தரிசனம். ஈகாடு செல்கின்றார் பெருமாள். ஈகாடு கனகவல்லித் தாயாரின் பிறந்த வீடு. மஹா லக்ஷ்மித் தாயார் தர்மசேனன் என்னும் மன்னன் மகளாக பிறந்து வசுமதி என்னும் திருநாமத்துடன் வளர்ந்து வந்தாள். தாயாரை ஆட்கொள்ள பெருமாள் ஒரு இராஜகுமாரனாக வந்து ஒளிந்திருந்த மது கைடபர்களை அழிக்க சுதர்சன சக்கரம் ஏவி அவர்களை அழித்து, பின் வசுமதியைக் கண்டு சொக்கி தர்மசேனனிடம் வசுமதியின் கரம் வேண்டினார். முதலில் வீரராகவரை சேவித்து வரும்படிக்கூற இரு மனம் ஒன்றினால் தெய்வம் அங்கே தோன்றுவார் என்று கூறிய இராஜ குமாரன், தான் வசுமதியை திருமணம் செய்து கொண்டு அங்கேயே இருந்து விட சம்மதிக்கின்றார். எனவே இருவர் திருமணமும் நடைபெறுகின்றது. அவர்கள் குல வழக்கப்படி புது மணமக்கள் வீரராகவப் பெருமாளை சேவிக்க சென்றனர் அப்போது அனைவரும் வியக்கும் வண்ணம் இருவரும் மறைந்தனர். அன்று தர்மசேனனுக்கு கொடுத்த வாக்கிற்காக பெருமாள் தை பிரம்மோற்சவத்தின் போது தனது மாமியார் அகமான ஈகாடு செல்கின்றார். சித்திரை பிரம்மோற்சவம் கோடைக்காலத்தில் நடைபெறுவதால் கோபுர வாசல் சேவை அதிகாலை நான்கு மணிக்கு நடைபெறுகின்றது. அஞ்சிறைப் புள் ஏறி அச்சுதன் Toll gate , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மண்டபம் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து திருவமுது கண்டருளி திருக்கோவிலுக்கு திரும்பி வருகின்றார்.


குழற்கோவலர் மடப்பாவையும் மண்மகளும் திருவும்

நிழற்போல் வளர்கண்டு நிற்கும் கொல்? மீளும் கொல்!
அழற்போல் அரும் சக்கரத்தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற்போல் சினந்த அப்புள்ளின் பின்போன தனி நெஞ்சம்.

குளிர்ந்த அழகிய திருத்துழாய் மாலை அணிந்தவனும், நெருப்பினைப் போல அழிக்கும் ஆற்றல் பெற்ற திருச்சக்கரத்தை ஏந்தியவனும், நித்திய சூரிகள் தொழுது வணங்கும்படியாக தீப்போலும் சினமிக்க கருடாழ்வானை வாகனமாகக் கொண்டு விளங்கும்படியனவனுமான எம்பெருமான் அக்கருடப் பறவை ஏறிச்செல்லும் போது என் தனியான மனதானது அக்கருட வாகன எம்பெருமான் மீது சென்று விட்டது. குழலூதும் ஆயர் குலத்தில் தோன்றிய நப்பின்னைப் பிராட்டி, பூமி பிராட்டியும், பெரிய பிராட்டியும் எப்போதும் நிழல் போல் பிரியாது விளங்கும் அவர்களைக் கண்டு எனது மனம் அவ்விடத்து விடாது நிற்குமோ? அல்லது என்னிடம் திரும்பி வருமோ?



என்னங்க உங்க மனத்தையும் கொள்ளை அடிச்சுட்டு போயிட்டாரா? 
காய்சினப் பறவை ஏறி பறந்து வரும் காய்சின வேந்தர் வைத்திய வீரராகவர்.


பின்னழகு

மூன்றாம் நாள் மாலை ஹனுமந்த வாகனத்தில் 
சேவை சாதிக்கின்றார் பெருமாள்.

தொண்டை மண்டலத்தில் உள்ள மிக முக்கிய திவ்ய தேசம். ஆறுகால பூஜைகள் இன்றும் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு கொண்ட திருத்தலம். மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து கூறப்பட்டுள்ளது. மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். சுமார் 15 அடிநீள 5 அடி உயரத்தில் பெருமாள் சயனம் கொண்டுள்ளார். லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் இத்தலத்தில் மிகவும் விசேஷம். மிகவும் பழமையான தலம். இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. கோயில் திருவள்ளூர் நகரின் மத்தியில் இருக்கிறது.திருவள்ளூர் சென்னைக்கு அருகில் இருப்பதால் சென்னையிலிருந்து எளிதில் பேருந்து மூலம் திருவள்ளூர் சென்றடையலாம்.சென்னை தவிர தாம்பரம், திருவள்ளூர் , காஞ்சிபுரம் நகரங்களிலிருந்தும் திருவள்ளூருக்கு பஸ் வசதி நிறைய உண்டு.


தாயார் கனகவல்லிதாயாருக்கு தனி சன்னதி உள்லது. பெரிய பிராட்டிக்குவெள்ளிக்கிழமை தோறும் மாலை உற்சவம். புறப்பாடு கண்டருளி வெள்ளிக்கிழமை மண்டபத்திற்கு  எழுந்தருகி அருள் பாலிக்கின்றாள் மஹாலக்ஷ்மி. மேலும் இராமர் சன்னதி,  ருக்மணி சத்ய பாமா சமேத வேணு கோபாலன், ஆண்டாள் சன்னதிகள் உள்ளன. இராமரின் உற்சவர் அருமை. சீதா தேவி ஆண்டாள் போல கொண்டையுடன் சேவை சாதிக்கும் அழகே அழகு.  மேலும் லக்ஷ்மி நரசிம்மர், சக்கரத்தாழ்வார், சேனை முதலியார், நம்மாழ்வார்,  இராமானுஜர், வேதாந்த தேசிகர், திருக்கச்சி நம்பிகள் சன்னதிகள் உள்ளன. பெருமாளின் எதிரே அழகிய சிறகுகளுடன் அமர்ந்த கோலத்தில் கருடாழ்வார் சேவை சாதிக்கின்றார். உற்சவர் அஞ்சலி ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். 

அகோபில மடத்தின் பராமரிப்பில் உள்ள இவ்வாலயத்தில் வடகலை சம்பிரதாயம், பஞ்சராத்ர ஆகமபப்டி தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.

நாகத்தணைக்குடந்தை வெஃகாதிருவெவ்வுள்
நாகத்தணையரங்கம் பேரன்பில் - நாகத்
தணைப்பாற்கடல்கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார்கருத்தனாவான். 

பாற்கடல் துயில் கொண்ட ஆதி நெடுமால், திருக்குடந்தை, திருவெஃகா, திருவெவ்வுள், திருவரங்கம் அன்பர் உள்ளம் என்று எல்லா இடத்திலும் பாம்பணையில் பள்ளி கொண்டுள்ளார் என்று திருமழிசையாழ்வார் பாடுகின்றார்.

திருவள்ளூர் வீரராகவனைப் பற்றி சொல்லும் போது முக்கூர் நரசிம்மாச்சாரியார்.  சௌலப்பியத்தின் (எளிமை) எடுத்துக்காட்டாக இங்கே பெருமாள் பள்ளி கொண்டுள்ளார் என்று கூறுவார்.

முன்ஓர் தூது வானரத்தின்வாயில் மொழிந்து  அரக்கன்
மன்னூர்தன்னை வாளியினால்மாளமுனிந்து   அவனே
பின்ஓர்தூது ஆதிமன்னர்க்காகி, பெருநிலத்தார்
இன்னார்தூதனெனநின்றான் எவ்வுள்கிடந்தானே.

இராமயண காலத்தில் ஹனுமனை தூதனாக அனுப்பிய வீரராகவனே, பின்னர்  மஹாபாரத காலத்தில் பாண்டவர் தூதானாக தூது சென்றவன், அனுமன் சென்ற தூது வெற்றி பெற்றது, அந்த கடனை அடைக்க பெருமாள் சென்ற தூது வெற்றி பெறவில்லை. 



ஆழ்வார் தமது பாசுரங்களில் வீரராகவரை,  வேயினன்ன தோள் மடவார் வெண்ணெயுண்டான் இவன் என்று ஏச நின்ற எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே அதாவது கிருஷ்ணாவதாரத்தில் கோபியரின் உறியில் இருந்த வெண்ணையை அமுது செய்து அந்த மூங்கிலைப் போன்ற தோள்களையுடைய கோபியர்கள் ஏச நின்ற எம்பெருமான், விண்ணவர் கோன், வேதம் விரித்துரைத்த புனிதன்,  தேவர்க்கெல்லாம் மூத்தனம்பி. முனிவர் தொழுதேத்தும் நம்பி, திசைமுகனார் தங்களப்பன்,  தன்னடியார்க்கு இனியன், வானோர் நாயகன் எவ்வுள் பள்ளிகொண்டான் என்று பாடியுள்ளார்.

 இவ்வளவு சிறப்புக்கள் பெற்ற திவ்ய தேசத்தை காண ஆவலாக உள்ளதா? உடனே புறப்பட்து திருவள்ளூர் வாருங்கள்.




5 comments:

Unknown said...

ஆவடியிலிருக்கும் எனக்கு பக்கத்திலிருக்கும் திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாளின் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்க வில்லை. இக்குறையைப்போக்கிவிட்டது உங்கள் பதிவு. வழக்கம் போலவே பல படங்களுடன் அசத்திவிட்டீர்கள் பாராட்டுக் கள்

குணசேகரன்... said...

நல்லதோர் பயணக் கட்டுரை எழுதியிருக்கீங்க..! கடைசியில் ஒரு சஸ்பென்ஸ் வைத்து எழுதியது மூலம், தேர்ந்த எழுத்தாளர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.
வாழ்க...!வளர்க!
எனது இன்றைய பதிவிற்கு கருத்திட்டமைக்கு ரொம்ப நன்றிங்க ramvi...:)

S.Muruganandam said...

மிக்க நன்றி வியபதி.

S.Muruganandam said...

//வாழ்க...!வளர்க!
எனது இன்றைய பதிவிற்கு கருத்திட்டமைக்கு ரொம்ப நன்றிங்க //

அருமையான யுக்தி

S.Muruganandam said...

27ம் தேதிவரை பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. முடிந்தால் சென்று தரிசித்து வாருங்கள் வியபதி.