Monday, April 16, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி


'சினிமா என்னும் ஊடகத்தை வியாபாரமாக மாற்றுகிறார்கள்; கமர்ஷியல் என்னும் பெயரால் அதை  அழிக்கிறார்கள்' என்று அடிதொண்டையில் கத்தும் சினிமா விமர்சகர்கள் ஓகே ஓகே  தியேட்டர் பக்கம் வர வேண்டாம்.
எப்படியும் இவர்களும் யாருக்கும் தெரியாமல் ராத்திரி வந்து படம் பார்க்கத்தான்
போகிறார்கள்; முழுக்க பார்த்து ரசித்து பிறகு அடுத்த நாள் கலைத்தாயின் காவல்காரர்களாக படத்தை குற்றம் சாட்டுவார்கள்.

ஆனால் இது எதைபற்றியும் கவலைப்படாமல், படம் பார்க்க வரும் சாமான்ய ரசிகர்களை , இரண்டரை மணி நேரம் சிரிக்க வைத்து , கவலையை மறக்க வைத்த இயக்குனர் ராஜேஷ்க்கு பெரிய கைதட்டல் கொடுக்கலாம். நிச்சயமாக சொல்லி அடித்த கல் இது - டார்கெட் மிஸ் ஆகல.


இதுதான் யதார்த்தம். என்னதான் கலை , உலகத்தரம் என்று எத்தனையோ மேதைகள் சினிமாவைப் பற்றி பேசினாலும் , சாதாரண ரசிகனின் சந்தோசமான கைதட்டல் சத்தத்தில் அவை எதுவுமே யாருக்கும் கேட்காது.இந்த உண்மையால்தான் சிவாஜி காலத்தில் எம்ஜீஆரும் , கமல் காலத்தில் ரஜினியும் ஓவர்டேக் செய்து வெற்றிபெற முடிந்தது.

நாலாயிரத்து முன்னூற்றி இருபத்தி ஏழு தடவை பார்த்த  கதை.  அதில் கடைசி இரண்டு , இதே இயக்குனர் தன் போன இரண்டு படத்தில் ஏற்கனவே காட்டி விட்டார். இப்போதும் அதே. ஆனால் நடிகர்கள் வேறு வேறு.  அதனாலென்ன? படத்தின் தோல்வி என்பது நிர்ணயம் ஆவது - படம் பார்க்கும் போது ரசிகர்களுக்கு சலிப்பு வந்தால் மட்டுமே . அதை ஒவ்வொரு நிமிடமும் மனதில் வைத்து ஒவ்வொரு சீனையும் தரமான சிரிப்பிற்காக செதுக்கி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.

சிவா மனசுல சக்தி , பாஸ் என்கிற பாஸ்கரன் - இந்த இரண்டு படங்களும் இப்போதும் டிவியில் போட்டால் ,அது எத்தனை முறை பார்த்ததானாலும் மீண்டும் பார்க்க தோன்றும் ஈர்ப்பு  உண்டாகியிருக்கிறது. அந்த வரிசையில் இந்த படமும் இனி கண்டிப்பாக இடம்பெறும்.

படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின்.  தளபதி மகன் என்பதால் பன்ச் டயலாக்கோ , தலைவர் பேரன் என்பதால் பக்கபக்கமாய் வசனமோ வேண்டும் என்று கேட்காமல் , ஒரு சராசரி யூத் கேரக்டர் மூலம் அறிமுகம் ஆகி பெரிய பாராட்டை பெறுகிறார். கொஞ்சமே கொஞ்சம் அரசியலை கலந்திருந்தாலும் , மண்ணை கவ்வியிருக்கும் இந்த படம்.

நல்ல ஒரு தயாரிப்பாளர்க்கு  இருக்க வேண்டிய புத்திசாலித்தனம் உதய்க்கு  இருக்கிறது. அதற்கு கிடைத்த பரிசு - படத்தின் இமாலய வெற்றி. மென்மையான குரல், உணர்ச்சிகளை வேறுபடுத்தி காட்டத்தெரியாத நடிப்பு,  வராத நடனம் என்று எத்தனையோ மைனஸ் இருந்தாலும் , கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்த விதத்தில் எல்லாவற்றையும் ஓரங்கட்டி கைதட்டல் பெறுகிறார் உதயநிதி.

சந்தானத்தை பேச விட்டு , அடக்கி வாசித்து நடிக்கும் உத்தி ஜெயித்திருக்கிறது.
குரலிலும் மேனரிசத்திலும் ஜீவாவை நினைவுபடுத்தினாலும் , முதல்  படத்துக்கு நல்ல ஹோம் வொர்க் செய்து உழைத்திருப்பது தெரிகிறது.  சரண்யா - அழகம்பெருமாள் காட்சிகள் யதார்த்தம் - சண்டைக்கு சொல்லும் காரணம் தவிர.

படத்தில் சகிக்க முடியாத ஒன்று , சந்தானத்துக்கு ஜோடியாக வரும் பெண்ணை கிண்டலடிக்கும் காட்சிகள். அழகில்லாததால் மட்டுமே அந்த பாத்திரம் இவ்வளவு கிண்டலுக்கு உட்படுகிறது என்ற நினைப்போடு டைரக்டர் காட்சிப்படுத்தியிருந்தால் ,அது மிக கண்டிக்கப்படவேண்டிய விஷயம்.

போன இரு படத்திலும் செய்த அதே தவறு இந்த படத்திலும் மீண்டும் எதிரொலிக்கிறது. கிளைமாக்ஸ் சொதப்பல். தேவையில்லாமல் ஆர்யா , ஆண்ட்ரியா என நட்புக்கு ஆளை நடிக்க கூட்டிவந்து இழுத்தடித்த கடைசி  இருபது நிமிட கொடுமை தவிர மற்றவை எல்லாம் ஓகே. இந்த படத்தை இப்படிதான் முடிக்க முடியும் என்பது திரையுலக டிக்சனரியில் உள்ளதென்பது பார்க்கும் எல்லாருக்கும் தெரியும்.அதனால் டைரக்டர் பிழைக்கிறார்.


படத்தின் இரண்டு சறுக்கல்கள் இசை மற்றும் கதாநாயகி. சரக்கு தீர்ந்து போன ஹாரிஸ் ,ஏற்கனவே ஹிட்டடித்த தன் பாடல்களை வைத்து ஒட்டியிருக்கிறார். பின்னணி இசை காட்சிக்கு ஏற்ற தாளம் பிசகுகிறது. எதிர்பார்த்து ஒன்றுதான்.

SMS அனுயா போலவோ , பாஸ் நயன்தாரா போலவோ நடிக்க தெரியவில்லை ஹன்சிகாவுக்கு.Just chubby  yet cute. போகட்டும். மற்ற பாசிடிவ் விஷயங்களால் இவை இரண்டும் மறைந்து விடுகிறது.  

படத்தின் ஆணிவேர் , தூண் , ஏன் மொத்த பலமுமே சந்தானம்தான்.  போன விஜய் அவார்டில் சந்தானத்துக்கு விருது கொடுக்கும்போது , மூன்றாம்  முறையும் இந்த படம் மூலம் சந்தானத்துக்கே கிடைக்கும் என்று அடித்து  சொன்ன ராஜேஷ் அதை உறுதிபடுத்தியிருக்கிறார். நல்ல நடிகரும் , அந்த நடிகரிடம் இருந்து சிறந்த நடிப்பை வாங்க தெரிந்த இயக்குனரும் சேர்ந்தால் கிடைக்கும் ரிசல்ட் நூற்றுக்கு நூறு என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த படம்.



கண்ணை உறுத்தும் கலர் பேன்ட் , பொருந்தாத டி ஷர்ட் ,
எண்ணெய்  வைத்து ஒழுங்காய் வாரிய தலைமுடி  என ஒரு மாதிரியான கெட் அப்பில் அசத்துகிறார் சந்தானம். அடிக்கடி சிவாஜியையும், கமலையும் மிமிக் செய்து அடிக்கும்  அட்டூழியமும் , உச்சகட்டமாக கிளைமாக்ஸ்  காட்சியில் மதபோதகரை இமிடேட் செய்யும் காட்சியிலும், என கிடைத்த எல்லா கேப்பிலும் பவுண்டரி அடித்து விளையாடியிருக்கிறார்.

வடிவேலுவின் இடம் காலியாய் இருக்கும் நேரத்தில், விவேக்கின் காமெடி காலி பெருங்காயமாய் கரைந்து முடிந்திருக்கும் நேரத்தில்,  இருக்கும் மிச்ச சொச்சங்களை புறந்தள்ளி டாப் காமடியனாக கம்பீரமாக உயர்ந்திருக்கிறார்  சந்தானம்.இது போன்ற படங்களை ஒரு ஐந்து வருடங்கள் தொடர்ந்து கொடுத்தால், பல வருடம் காத்திருந்த கவுண்டமணியின் கிரீடத்தை சந்தானத்துக்கு தாராளமாக வழங்கலாம்.

எந்த லாஜிக்கும் பார்க்காமல் மூன்று மணி நேரம் சிரிக்க , சரியான மினிமம் கேரன்ட்டி இந்த படம்.

ஓகே ஓகே - டபுள் ஓகே.


பேஸ்புக்கில் தொடர , வலது பக்க மேல் ஓரத்தில் உள்ள 'Find us on Facebook'ல்  Like பட்டனை அழுத்தவும்.

No comments: