Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, April 26, 2012

அரசு ஆள்கிறதா அல்லது நம்பிக்கை ஆள்கிறதா?

April 21: புதுடெல்லி: சேது சமுத்திர திட்டத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது குறித்து நீதிமன்றமே முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.

மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை சரியா, தவறா என்பது போன்ற விவாதத்தில் மத்திய அரசு கருத்து கூறுவது சரியாக இருக்காது’ என்று குறிப்பிட்டுள்ளது.

அதனால், சேது சமுத்திரம் குறித்து புதிதாக கருத்து தெரிவிக்க ஒன்றும் இல்லை. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக நீதிமன்றம் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சிந்திக்கவும்: மத்திய அரசின் முடிவு ஆபத்தானது மட்டும் அல்ல கேவலமானதும் கூட. இப்படி கேவலமான ஒரு முடிவை செய்வதற்கு ஒரு அரசு தேவையா? மத்திய அரசு இது போல் மற்ற விடயங்களிலும் முடிவெடுக்கும் அதிகாரத்தை நீதிமன்றங்களிடம் ஒப்படைக்குமா?

இந்திய நீதிமன்றங்கள் எல்லாம் காவி மதவாதிகளின் கைகளில் சிக்கி தவிக்கின்றன. பாபர் மசூதி விடயத்தில் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு சொல்லாமல் நம்பிக்கை அடிப்படையிலே தீர்ப்பை சொன்னார்கள். அதுபோல்தான்  இப்போதும் சேது சமுத்திரம் திட்டத்திலும் நடக்கப்போகிறது.

இதே மத்திய அரசு ஏன் , ஈழத்திற்கு அமைதி படை அனுப்பும் போதும், சீக்கிய பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பும் போதும்  நீதிமன்றங்களின் அனுமதிகளை பெறவில்லை. தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் கொன்று குவிக்கும் போதும், ஈழத்து சொந்தங்களை சிங்கள இனவெறி கயவர்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கும் போதும் தமிழகத்தில் உள்ள தமிழர்களின் உணர்வு ஈழத்து தமிழர்கள் என்பவர்கள் தங்கள் தொப்புள் கொடி உறவுகள் என்கிற உண்மை ( வெறும் நம்பிக்கை இல்லை) அடிப்படியில் ஏன் செயல்படவில்லை.

இந்திய அரசு என்பது மதவாதத்தின் மொத்த உருவமாக, முதலாளித்துவத்தின் அடிவருடியாக செயல்படுகிறதே தவிர மனிதாபிமானத்தின், மனித நேயத்தின் அடிப்படையில் செயல்படவில்லை. சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் விடயத்தில் உள்நாட்டு மக்கள்மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு முன்னாள் ஏன்? நீதிமன்றங்களை நாட வில்லை. பல நூறு ஆண்டுகளாக காடுகளில் வாழும் பழங்குடிமக்கள் அந்த காட்டை தங்கள் புனித பூமியாக நம்பும் அந்த நம்பிக்கைக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வில்லை. இதில் இருந்து இந்த கயவர்களின் சுயரூபம் வெளிப்படுகிறது.

Wednesday, April 25, 2012

கருணாநிதியின் காலம் கடந்த கவலை!

April 19: தனி ஈழம் கிடைக்க ஐக்கிய நாடுகள் சபை தமிழர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுவரை உங்களுடைய நிறைவேறாத ஆசை என்ன என்ற கேள்விக்கு 'தனி ஈழம்' என்று பதிலளித்தார். அந்தத் 'தனி ஈழம்' தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு கோரிக்கை அந்த வரவேற்கத்தக்கது என்று கூறினார்.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் இதைப் போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒருசில நாடுகள் தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன. அதன் அடிப்படையில் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அந்த வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் 'தனி ஈழம்' கிடைப்பதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

சிந்திக்கவும்: திரு கலைஞர் அவர்களே நிறைவேறாத ஆசை என்று பேருக்கு சொன்னால் போதுமா! அந்த ஆசையை நிறைவேற்ற நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது என்ன செய்தீர்கள் என்பதே இங்கே கேள்வி? உங்கள் குடும்பத்தை வளப்படுத்துவதற்கு நீங்கள் செலவிட்ட நேரத்தை ஈழத்தமிழர் பிரச்சனைகள் குறித்து பேச நீங்கள் செலவிட்டிருந்தால் இத்துணை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு இருக்க மாட்டார்களே.
தமிழர்களின் சுதந்திர தாகத்தை சோனியாவுடன் சேர்ந்து கடிதம் எழுதி கலைத்து விட்டு இப்போது ஏன் நீலிகண்ணீர் வடிக்கிறீர்கள். எம்.ஜி. ஆருக்கு பின்னால் ஜெயலலிதா முதல் பாரதிய ஜனதா, மற்றும் சுப்பிரமணிய சுவாமி, சோ, தினமலர் வகைறாக்கள் எல்லோரும் ஈழ விடுதலை போராட்டத்தை தீவிரவாதம் என்றே பேசியும் எழுதியும் வந்தார்கள் என்பதை மறக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது. மொத்தத்தில் இந்த சாக்கடை அரசியல்வாதிகளின் பேச்சால் எந்த பிரோஜனமும் ஏற்ப்பட போவதில்லை என்பது உறுதி.
*மலர்விழி*

Wednesday, November 30, 2011

நீங்களும் முதல்வராகலாம்

டிஸ்கி :நக்கீரன் பதிப்பகத்தின் ரா.கி.ர எழுதிய 'நீங்களும் முதல்வராகலாம்' புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் இது. பதிவுக்கும் தற்போதைய புது ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் அல்ல.
எல்லாரும் எல்லாருக்கும் பரிந்துரைக்கும் நூல்கள் என சில எப்போதும் உண்டு. திருக்குறளும் , சரித்திர  நாவலுக்கு பொன்னியின் செல்வனையும்  சாண்டில்யனையும் , காந்தியின் சத்திய சோதனையும் , மதனின் வந்தார்கள் வென்றார்களையும் எப்படி கண்ணை மூடிக்கொண்டு சிபாரிசு செய்கிறோமோ அதே  போல ரா.கி.ர எழுதிய 'நீங்களும் முதல்வராகலாம்' நூலையும் தாராளமாக பரிந்துரைக்கலாம்.


ரா.கி.ர பல மைல்கல்களைத் தொட்ட எழுத்தாளர். மொழிபெயர்ப்பு நூல் எழுதும்போது மிக கவனமாக  , அதன் உண்மையான சுவை குறையாமல் ,அதே சமயம் எழுதப்படும் மொழியில் படிப்பவர்க்கு அன்னியமாக தோன்றாமல் எழுதும் கலை அவருக்கு விரல் நுனியில். அதை இந்த நூலிலும் கையாண்டு நூலின் தரத்தை  உயர்த்தியுள்ளார். 
தலைப்பைப்   பார்த்ததும் 'நமக்கு எதுக்குடா இந்த ஆசை?' என்று ஒதுங்கி விட வேண்டாம்.  தலைப்புதான் ஏடாகூடமாக ; மற்றபடி உள்ளிருக்கும் உத்திகள் எல்லா நாளும் எல்லா இடத்திலும் நாம் முன்னணியில் வர சொல்லப்பட்டவை.
சரி இது போல பல தன்னம்பிக்கை நூல்கள் வந்து விட்டனவே ; இதில் என்ன சிறப்பு என்று கேட்கறீர்களா ? சொல்கிறேன் . 
அறிவுரை சொல்வதுப் போல எளிதானது உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை. அறிவுரையைக் கேட்பது போல கடினமானது மூவலகிலும் வேறு இல்லை. இதை யாராவது பெரியவர் நேருக்கு நேர் உட்கார வைத்து சொன்னால் , மரியாதைக்கு வேறு வழியில்லாமல் கேட்டுக் கொண்டிருப்போம். காசு கொடுத்து அந்த தொல்லையை யார் வாங்குவார்கள்.
ஏறக்குறைய எல்லா தன்னம்பிக்கை நூல்களும் மொந்தையாக, கட்டுகட்டாக , பக்கம் பக்கமாக , பாயிண்ட் பாய்ண்டாக அறிவுரையை சொல்லி , நமக்கு தனம்பிக்கை வருவதற்கு பதில் , 'இதில் இவ்வளவு இருக்கா ?' என்று ஒரு அயர்ச்சி தோன்றி விடும் சாத்தியம் உண்டு
பண்ணிவிடுகின்றன. அதிலும் தலைப்புக்கு   அடியில் 'நிரூபிக்கப்பட்ட முறைகள்' என்று  கூடுதல்  தகவல் வேறு.  
விதிவிலக்கு - உதயமூர்த்தியின் எண்ணங்கள் மற்றும் இன்னபிற.இந்த நூலும் அது போல விதிவிலக்கில் சேர்த்தியே.
இந்த நூல் , ஆங்கிலத்தில் வெளிவந்த ( பேர் ஞாபகத்தில் இல்லை ) இன்னொரு நூலின் மொழிபெயர்ப்பே. ஆனால் வெறும் மொழிபெயர்ப்பாக அல்லாமல் படிக்க ருசியான அதே சமயம் புத்திக்கு ஆரோகியமான உணவாக அமைந்திருக்கிறது. அதிலும்  ரா.கி.ர-வின் எழுத்து நடை சேர்ந்து விட , நூலுக்கு  புதிய சுவை கூடுகிறது.
எண்பத்தி எட்டு உத்திகள் . அவையே ஒவ்வொரு பகுதிக்கும் தலைப்புகள் .
ஒவ்வொரு தலைப்புக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட , நடந்த சரித்திர நிகழ்வுகளின் எடுத்துக்காட்டுகள் . அந்த பகுதி முடியும்போது ,அடுத்த தலைப்புக்கான அவசியத்தை கோடிட்டு காட்டிய முறை என்று புத்தகம் வெகு சுலபத்தில் நம்மை  ஈர்த்து விடும்.
சரி , முக்கியமான விஷயத்துக்கு வருவோம். இந்த நூல் யாருக்கு பயன்படும்? அரசியல்வாதிகள் , வக்கீல்கள் , நிறுவனத்தலைவர்கள் ஆகியோருக்கு மட்டுமே..என்று நினைத்தால் புத்தகத்தை படிக்க தொடங்கும்போதே அந்த எண்ணம் மாறி விடும். அட .. இது நமக்கான புத்தகம் என்ற நினைப்பை இது கொடுக்கும்..
காரணம்... ஆட்சி அமைப்பதும் , கட்சி தொடங்கி மக்களை ஈர்க்க மட்டுமே என அரசியல் தன்  வட்டத்தை ஒருபோதும் சுருக்கியதில்லை.
நன்றாக ஓடிக்கொண்டிருந்த பெட்டிக்கடைக்கு பக்கத்தில் , கொஞ்சம் புதிதாக எதோ ஒரு சலுகையை கொடுத்து ஒரே மாதத்தில் பழைய பெட்டிக்கடையை மூட வைக்கும் புது பெட்டிகடைக்காரரிடம்  இருந்தே ஆரம்பிக்கிறது அரசியல்.
மென்பொருள் நிறுவனங்களில் தேநீர் நேரத்தில் மேலாளரைப் பற்றி மணிக்கணக்காக   பேசும் ஊழியன் , மீட்டிங் நேரத்தில் அவர் பக்கத்தில் , அவர் என்ன சொன்னாலும் ஆமாம் போடுவதில் இருக்கிறது அரசியல்.
பக்கத்து வீடு காலியானதும் , தனக்கு வேண்டியவர் வரும் வரைக்கும் , வீடு தேடி வருபவரை பல பொய்க்காரணம் சொல்லி வேறு வீடு பார்க்க வைக்கும் சாதாரண இல்லத்தரசியிடம்  இருக்கிறது அரசியல்.
ஆக அரசியல் வைரஸ் போல. நமக்கு அது வேண்டாம் என்று ஒதுங்கினாலும் அதற்கு நாம் தேவை. அப்போது நம்மை சுற்றி நடக்கும் அரசியலை சமாளிக்க நமக்கு அதைப் பற்றி பாடங்கள் அவசியம். அதை நன்றாக போதிக்கிறது இந்நூல்.
இல்லை... நான் நல்லவன் என்று பம்மாத்து செய்யும் ஆசாமியா நீங்கள் ? சரி நீங்கள் அரசியல் செய்ய வேண்டாம்..உங்களை வலையில் சிக்க வைக்கும் அதிலிருந்து நீங்கள் தற்காத்து கொள்ளவாவது அதைப் பற்றிய அறிவு வேண்டும்.இதுவும்  எய்ட்ஸ் விழிப்புணர்வு போலதான் சார்.
 சில மிடில் கிளாஸ் மனசாட்சி உள்ளவர்க்கு இந்த நூல் 'இப்படியெல்லாம் கூட ஏமாத்தலாமா? நம்பிக்கை துரோகம் செய்யலாமா ? வேண்டாமா ?' என்ற கேள்வி  மனதில் நிழலாடும். நாம் யார் குடியையும் கெடுக்க போவதில்லை.கூடாது.ஆனால் களவும் கற்று மற என்பது போல் அரசியல் நுணுக்கங்களையும் கற்று வைப்பது நல்லது.
சில பிரச்சனைகளுக்கு மாத்திரை இல்லாத நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தால்  உதவும்.'அய்யயோ .. நான் மாட்டேன்' என்பவர்கள் , சத்தியசோதனையை மீண்டும் படித்து ,
ஏற்பட்ட குற்ற உணர்வை போக்கிக்கொள்ளலாம்.
இந்த புத்தகம் வாங்கிய இரண்டு வருடத்தில் ஆறு முறை படித்து விட்டேன்.ஒவ்வொரு முறையும் புதிதாக நிறைய விஷயங்களை உணர முடிகிறது.
புத்தகத்தை வெளியிட்ட நக்கீரனுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். ரா.கி.ரவுக்கு வணக்கங்கள்.
நீங்களும் முதல்வராகலாம்
ரா.கி.ரங்கராஜன்
நக்கீரன் பதிப்பகம்
விலை ரூ. 225

நீங்களும் முதல்வராகலாம்- பெரியவர்களுக்கான 'பஞ்ச தந்திரம்'

Thursday, October 13, 2011

உள்ளாட்சித் தேர்தல் -A Solo Stunt

'எங்கள் கூட்டணியே நேர்மையான கூட்டணி' 

' அதர்மத்தை அழிக்கவே இந்த கூட்டணி' 

 'எங்கள் கொள்கைகள் வெவ்வேறாயினும் குறிக்கோள்  ஒன்றுதான் ; அதன் விளைவே இந்த கூட்டணி ' 

 'பழையதை மறந்து விட்டோம் ; இனி நடப்பது நல்லதாய் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த கூட்டணி ' 

 'எங்கள் இரண்டு கட்சிகளும் , மக்கள் சேவை என்ற புள்ளியில்  இணைந்திருக்கிறோம் என்பதை மக்களுக்கு சொல்லத் தேவையில்லை'  

'நாங்கள் ஒரே குருகுலத்தில் அரசியல் பயின்றவர்கள்.. நாங்கள் இணைவதில் என்ன ஆச்சர்யம்? '

'இத்தனை வருடங்கள் எங்களை மதிக்காதவர்கள் கூட்டணியில் இருந்து இப்போதுதான் வெளியே வந்திருக்கிறோம். ஒரு விதத்தில் இது எங்களுக்கு ஒரு விடுதலை.இனி மக்கள் பணியே எங்களுக்கு முக்கியம்'

'பாசிச கட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு மரியாதை இல்லை. ஆனால் இங்கு வந்ததும் தலைவர் கட்டி அணைத்து வரவேற்றதில் ஏற்பட்ட கண்ணீரில் எங்கள் மனகசப்புகள் கரைந்துவிட்டன.. '

யப்பா...இப்படி எத்தனை உளறல்கள் தாண்டி வந்திருக்கிறோம்.பொறுத்து வந்திருக்கிறோம். மேலே கண்ட அறிக்கைகள் அனைத்தும் ஒரு கட்சி ,இன்னொரு கட்சியுடன் கூட்டணி வைக்கும்போது கூறிய காரணங்கள் - . கொடுமை.

திமுக தோற்றதில் யாருக்கு என்ன லாபம் கிடைத்ததோ என்னவோ , இந்த உள்ளாட்சி தேர்தல் ஒரு வரமாக ,தமிழக மக்களுக்கு கிடைத்து விட்டது.
தமிழக வரலாற்றிலேயே ,இந்த உள்ளாட்சி தேர்தல் மிக முக்கியமான ஒன்று.. நம்புங்கள்... யாரும் யாரோடும் கூட்டணி இல்லை...  

ஜெயிப்பது எந்த கட்சியாய் வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் Victory Factor எனப்படும் வெற்றிக்கான காரணத்தை, குழப்பமில்லாமல்  நிர்ணயம் செய்ய மக்களுக்கு இப்போது ஒரே கேள்விக்கான பதில் தெரிந்தால் போதும் - 'இந்த கட்சிக்கு ஒட்டு போட்டால்  ,ஏமாற்றாமல் மக்களுக்கு எதாவது செய்யுமா ? 
இதற்கு முன் செய்திருக்கிறார்களா ?' -  இது மட்டுமே..

மற்ற முறை போல - ' நல்லவர்தான்..ஆனால் இவருக்கு போட்டால் , அந்த கட்சியில் நம் கட்சி கூட்டணி வைத்திருக்கிறதே .. என்ன செய்யலாம்?' என்றோ
'போன முறை ஒன்றும் செய்யவில்லை.இந்த முறை போட வேண்டாம் என்று பார்த்தால் , ஆளும் கட்சியோடு கூட்டு வைத்திருக்கிறாரே..எதாவது தேறுமா?' என்றோ 'குழப்பமா இருக்கே.. இந்த ஆள் ரெம்ப மோசம்.ஆனா என்ன பண்ணித்தொலைக்கிறது? நம்ம ஜாதிகட்சியோட ஆதரவுல நிக்கறாரே..' என்றோ எதுவும் குழம்ப வேண்டாம்.

எல்லாரும் தனித்தனி. அதற்காக எல்லாரும் 'நாங்கள் நல்லவர்கள்.அந்த தைரியத்தில்தான் தனியாக நிற்கிறோம்' என்று சொல்லவில்லை (சொல்ல தகுதியும் இல்லை). கூட்டணி படியவில்லை. அதுதான் காரணம்.

சரி .. இப்போ ஒரு பாமரத்தனமா, வெள்ளந்தியா , சராசரி வாக்காள  ஜனமா கட்சிகள அலசுவோம்.


அதிமுக தனி மெஜாரிட்டி. ஏற்கனவே சொன்ன மாதிரி  ,தேர்தல் முடிஞ்சதும் தேமுதிகவை (இன்னபிற சில்லறை கட்சிகளை )அம்மா தலைமையிலான   அ.இ.அ.தி.மு.க. கட்சியில் நடந்த பொதுக்குழு கூட்ட நிர்வாக கூட்டம்  (இதுல்ல என்ன சுத்தி வளைக்கிறது ? அம்மா தான் கட்சி. அம்மா மட்டும்தான் கட்சி )கழட்டி விடும் என்ற உண்மை அரசியலில் அ , ஆ மட்டுமே தெரிஞ்ச சின்ன பையனுக்கு கூட தெரியும்.

அம்மா அம்மாதான். எப்பவாவது 'இந்த கட்சியை கூட்டணியிலிருந்து  அதிமுக  விலக்குகிறது'ன்னு அவங்களா சொல்லிருக்காங்களா.. ? அந்த கட்சியே வெளிய போறோம்னு அழுதுட்டு ஓடிவர  மாதிரி பண்ணுவாங்க..அதான் பெர்பெக்ட் லீடர்ஷிப்.

ஆக அதிமுக தனியாக நிக்கறதுல எந்த சந்தேகமும், ஆச்சர்யமும்  இல்லை.



திமுக.. மன்னிக்கவும்..அடுத்த நாலரை  வருசத்துக்கு  தேமுதிகவுக்கு அப்புறம்தான் திமுகவை பத்தி பேச முடியும்.
சரி.. தேமுதிக சிறந்த எதிர்கட்சியாக கடந்த நான்கு மாதமாக ,மிக சிறப்பாக ,அருமையாக ,ஒட்டு போட்ட மக்களுக்காக உடனடியாக.. அட என்னப்பா செஞ்சிருக்காங்க..யாராச்சும் சொல்லுங்க - சட்டசபையில் நூற்றுக்கு நூறு சதவீதம் Attention போடுவதை தவிர. 

சரி இப்போ ஒரு வழியா  கூட்டணியில் இருந்து வெளிய வந்திருக்காங்க.. அவங்க கேட்டது மாதிரி அவங்களுக்கு மார்க் போட இன்னும் ஒரு ஆறு மாசம் கொடுப்போம். (இப்படி ஆறு ஆறு மாசம் கொடுத்து அடுத்த தேர்தலே வந்துடும் போல ) .

இப்போ அவங்க தனி. கூட மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட்.  ஹ்ம்ம் அதனால ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்ல. ஏறக்குறைய தேமுதிக மட்டும்தான்.  ராஜ அதிர்ஷ்டம் சூழ்நிலை காரணமா யாருக்காவது ஒரு தடவ வரும். ஆனா அத தக்க வைக்கிறது உங்க சாமர்த்தியம் கேப்டன். இதை அப்புறமா பேசலாம். இப்போ இவங்க தனி. அதான் நமக்கு முக்கியம்.


சரி..இப்போ திமுக.  தோல்விக்கு பிறகு சட்டசபை பக்கம் வரலை. மன்னிக்க. சட்டசபைக்கு உள்ள வரல. பெரும்பாலும் எல்லாரும் உள்ள இருக்காங்க. வெளிய இருக்கறவங்க ,உள்ள இருக்குறவங்கள போய் பாத்துட்டு இருக்காங்க. அவங்க இப்போ ஏழை கட்சி ஆகிட்டாங்களாம் -திமுக தலைவர் சொல்லியிருக்கார்..  ஆனா நல்ல முடிவு எடுத்திருக்காங்க - தனியா நிக்கறதுன்னு.

'உன்னால நான் கெட்டேன்;என்னால நீ கெட்ட'-ன்னு எத்தனை நாள்தான் கோபத்தை அடக்கிட்டு கைகோர்த்து   இருக்கறது. இந்த தடவ தனியாவே அடி வாங்கிக்கிறோம்ன்னு காங்கிரஸ்க்கு  டாட்டா  காமிச்சிட்டார் தாத்தா . இந்த கட்சி சார்பா நிக்கறதுக்கு , ஜெயிலுக்கு போக பயப்படாம தைரியமா இருக்க ,  வேட்பாளர்கள் கிடைச்சிடாங்க போல. அதுவே பெரிய சந்தோசம். இப்போ இவங்க தனி.


அடுத்து காங்கிரஸ்.  வெளி கூட்டணி எதுவும் எடுபடல. சரி உள்ளயாவது ஒற்றுமையா இருக்கறாங்களானா அப்படி எதுவும் தெரியல. மத்தியில சிதம்பரம் நெலமையும் சரியில்ல;உள்ளூர்ல காங்கிரஸ்   கரைவேட்டிக்கும்  கட்டம் சரியில்ல. நாடு முழுக்க எதிர்ப்பலை.

அது எப்படிங்காணும் இவ்வளவு அடிவாங்கியும் பயமே இல்லாம தனியா ஒட்டு கேக்க வரீங்க..?..
ஹ்ம்ம் எந்த தைரியத்துல தனியா நிக்கறாங்கன்னு தெரியல. ஆனா தனியா நிக்கறாங்க.

பாமக - ரெண்டு மாசம் முன்னாடியே டாக்டர் சொல்லிட்டார் - நாங்க இனி தனி-ன்னு. இப்படி சொல்றோமே ? மக்களாவது நம்மள  சேர்த்துக்குவாங்களான்னு ஒரு தடவைக்கு நாலு தடவ யோசிச்சு  சொல்லிருக்கணும். இந்த தடவையாவது சொல்லுங்க டாக்டர் - உங்க கொள்கைதான் என்ன? சரி அத விடுங்க.. உலக மகா அதிசயம் .. இவங்களும் தனி.

மதிமுக..சாரி - வைகோ தனியா நிக்கறார்.

மீதி இருக்குற கட்சிகளும் பெருசா எந்த கூட்டணியும் இல்லாம அங்கங்க தனி கடை போட்டுருக்காங்க..
எத்தனை பேர் மறந்து போய் பழக்கதோசத்துல 'எங்க கூட்டணிக்கு ஒட்டு போடுங்க'-ன்னு சொல்ல போறாங்களோ?!!!? .
இனி பிரசாரத்துலதான் பெரிய காமெடி இருக்கு.

பிரசாரம் நடக்க நடக்கவே , சொல்லும் விஷயங்களுக்கு ஏற்ப  அதிமுகவில இருந்து பல கட்சிகள் சட்டபேரவையில் வெச்ச கூட்டணியிலிருந்து விலக்கப்படும்.

சரி மக்களே.. கட்சிக்கு தனித்தனியா மார்க் போட ரெம்ப வசதியான சந்தர்ப்பம்.  அது பூஜ்யம்னாலும் பரவாயில்ல..சந்தோசமா போடுங்க.
யாருக்கு தெரியும்? இந்த தேர்தல்ல தமிழ்நாட்டுல இருந்து பல கட்சிகள் காணாமலேயே போய்டலாம்.

முந்துங்கள் இந்த சலுகை இந்த முறை மட்டுமே. இந்த ஒரு முறையாவது மக்கள் எல்லாரும் கூட்டணி வைப்போம்.

Get Ready Folks...